காலாமர்களுக்கு தந்த போதனை
காலாமர்களுக்கு தந்த போதனை
அங்குத்தர நிகாயம் AN 3.65
ஃஃஃ
ஒன்றுக் கொன்று முரண்பாடான ஆன்மீக கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை பகவர் கேசபுத்த நகரைச் சார்ந்த காலாமர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
ஃஃஃ
ஒருமுறை பகவர் கோசல நாட்டில், ஒரு பெரும் பிக்கு சங்கத்தினருடன் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், கேசபுத்திரம் என்னும் காலாமர் மக்கள் வாழும் ஊருக்கு சென்றடைந்தார். காலாமர்கள் இவ்வாறு கேள்விப்பட்டனர்: "சமணர் கோதமர், சாக்கியரின் புதல்வர், சாக்கியர் குடும்பத்திலிருந்து வீடு துறந்தவர், கேசபுத்திரம் வந்துள்ளார். இவரைப் பற்றி ஒரு சிறந்த கருத்து பரவியிருக்கிறது: 'கோதமர் ஒரு அருகர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், மங்கலமானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியர்; பூரண ஞான முற்றவர்; பாக்கியவான். தேவர்களும், மாரரும், பிரம்மரும், துறவிகளும், பிராமணர்களும், மக்களும் கொண்ட இந்த உலகினை தன் நேரடி அறிவினால் உணர்ந்த அவர், மற்றவர்கும் அதனை தெரிவிக்கின்றார். அவர் துவக்கத்திலும், மத்தியிலும், இறுதியிலும் சிறந்த அறத்தை தெளிவான பொருளோடும், சிறப்பாக விளக்குஞ்சொற்களோடும் கற்பிக்கின்றார்; முழுமையான தூய்மையான ஆன்மீக வாழ்க்கையைத் தெளிவு படுத்துகிறார்.' இப்படிப்பட்ட அருகர்களைப் பார்ப்பது நல்லது."
பின் கேசபுத்த காலாம மக்கள் பகவரை அணுகினார்கள். சிலர் அவரை தொழுது ஒரு புரமாக அமர்ந்தனர். சிலர் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்ட பின்னர் அவர் அருகில் அமர்ந்தார். சிலர் அவரை மரியாதையுடன் வணங்கி ஒரு புறமாக அமர்ந்தனர். சிலர் தங்கள் பெயரையும் குலத்தையும் கூறிவிட்டு ஒரு புறமாக அமர்ந்தார். சிலர் ஏதும் பேசாமல் ஒரு பக்கமாக அமைந்தவர். காலாமர்கள் பகவரிடம் இவ்வாறு கேட்டனர்:
"ஐயா, சில துறவிகளும் பிராமணர்களும் கேசபுத்திரம் வருகின்றனர். அவர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். அவற்றை விளக்கி பிரசித்தப்படுத்துகின்றனர். ஆனால் மற்றவர்கள் வாதங்களை இகழ்ந்து, குற்றம் கூறி, தாழ்த்தி, இழித்துப் பேசுகின்றனர்.
பின் வேறு சில துறவிகளும் பிராமணர்களும் கேசபுத்திரம் வருகின்றனர் அவர்களும் தங்கள் வாதங்களை விளக்கி, முன்வைத்து மற்றவர்கள் வாதங்களை இகழ்ந்து, குற்றம் கூறி, தாழ்த்தி, இழித்துப் பேசுகின்றனர்.
எங்களுக்கு இதனால் குழப்பமும் சந்தேகமும் தோன்றுகிறது. ஐயா, இவர்களில் யார் உண்மையை பேசுகின்றனர், யார் பொய்மையை பேசுகின்றனர் என்று நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?"
"நீங்கள் குழப்பம் அடைவது பொருத்தமானதே, காலாமர்களே. நீங்கள் சந்தேகங்கொள்வது பொருத்தமானதே. உங்களுக்கு சந்தேகம் எழுவது ஒரு குழப்பமான விஷயத்தின் காரணமாகத்தான்."
"காலாமர்களே, கர்ணபரம்பரையாக வரும் வழக்கம் என்பதால், வமிசபரம்பரையாக வந்த உபதேசம் என்பதால், பிறர் சொல்லக்கேட்ட சங்கதி என்பதால், வேதசாஸ்திரங்கள் கூறுகின்றன என்பதால், நியாயவாதம் என்பதால், அனுமானத்தாலுண்டாகும் ஞானம் என்பதால், ஆலோசித்து எடுத்த முடிவு என்பதால் ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பேசுபவர் திறமைசாலி என்பதால் அல்லது 'இந்த துறவி என்னுடைய குரு,' என்று நினைத்து ஆசிரியரின் மேல் நன்மதிப்பு இருப்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால், உங்களுக்கே எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எதனை சான்றோர் நிந்திப்பார்கள் என்பது தெரிந்த பிறகு, அவற்றை ஏற்று அதன்படி நடந்தால் அவை சேதமும் துன்பமும் விளைவிக்கும் என்பதால், அவற்றைக் கைவிடுங்கள்."
(1) "என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? ஒருவர் உள்ளத்தில் பேராசை தோன்றும் போது அது அவர்களை நன்மைக்கு எடுத்துச் செல்லுமா அல்லது தீமைக்கு எடுத்துச் செல்லுமா?"
"தீமைக்கு, ஐயா."
"காலாமர்களே, பேராசை உள்ள ஒருவர், பேராசையின் பிடியில் உள்ளவர், அதற்கு அடிமையானவர், உயிர்களைக் கொல்வார், பொருட்களைத் திருடுவார், தவறான பாலியல் உறவுகள்க் கொள்வார், தவறான பேச்சுரைப்பார். மேலும் மற்றவர்களையும் இவ்வாறு தீயச் செயல்களில் ஈடுபட ஊக்கமளிப்பார். இவையெல்லாம் அவரின் நீண்ட நாள் தீமைக்கும், துன்பத்திற்கும் எடுத்துச் செல்லுமா?"
"ஆம் ஐயா."
(2) "என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? ஒருவர் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் போது, அது அவர்களை நன்மைக்கு எடுத்துச் செல்லுமா அல்லது தீமைக்கு எடுத்துச் செல்லுமா?"
"தீமைக்கு, ஐயா."
"காலாமர்களே, வெறுப்பு உள்ள ஒருவர், வெறுப்பின் பிடியில் உள்ளவர், அதற்கு அடிமையானவர், உயிர்களைக் கொல்வார், பொருட்களைத் திருடுவார், தவறான பாலியல் உறவுகள்க் கொள்வார், தவறான பேச்சுரைப்பார். மற்றவர்களையும் இவ்வாறு தீயச் செயல்களில் ஈடுபட ஊக்கமளிப்பார். இவையெல்லாம் அவரின் நீண்ட நாள் தீமைக்கும் துன்பத்திற்கும் எடுத்துச் செல்லுமா?"
"ஆம் ஐயா."
(3) "என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? ஒருவர் உள்ளத்தில் மயக்கம் (அறிவுக்கலக்கம்) தோன்றும் போது, அது அவர்களை நன்மைக்கு எடுத்துச் செல்லுமா அல்லது தீமைக்கு எடுத்துச் செல்லுமா?"
"தீமைக்கு, ஐயா."
"காலாமர்களே, மயக்கத்தில் உள்ள ஒருவர், மயக்கத்தின் பிடியில் உள்ளவர், அதற்கு அடிமையானவர், உயிர்களைக் கொல்வார், பொருட்களைத் திருடுவார், தவறான பாலியல் உறவுகள்க் கொள்வார், தவறான பேச்சுரைப்பார். மேலும், மற்றவர்களையும் இவ்வாறு தீயச் செயல்களில் ஈடுபட ஊக்கமளிப்பார். இவையெல்லாம் அவரின் நீண்ட நாள் தீமைக்கும் துன்பத்திற்கும் எடுத்துச் செல்லுமா?"
"ஆம், ஐயா."
"என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? இவை நன்மைத் தருவனவா அல்லது தீமைத் தருவனவா?" - "தீமைத் தருவன ஐயா." - "பழித்தற்குரியவையா, குற்றமற்றவையா?"- "பழித்தற்குரியவை, ஐயா." -
"சான்றோர் குறைப்படுவார்களா அல்லது போற்றுவார்களா?" - "சான்றோர் குறைப்படுவார்கள், ஐயா." - "இவற்றை ஏற்றுக் கொண்டு அதன் படி நடந்தால், அவை உங்களுக்கு தீமையும் துக்கமும் விளைவிக்குமா இல்லையா அல்லது நீங்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?" - "இவற்றை ஏற்றுக் கொண்டு அதன் படி நடந்தால் இவை தீமைக்கும் துக்கத்துக்கும் எடுத்துச் செல்லும். அவ்வாறே நாங்கள் புரிந்து கொள்கிறோம்."
"இதன் காரணமாகவே காலாமர்களே, நாங்கள், 'கர்ணபரம்பரையாக வரும் வழக்கம் என்பதால்,.........சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கே எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எதனை சான்றோர் நிந்திப்பார்கள் என்பது தெரிந்த பிறகு, அவற்றை ஏற்று அதன்படி நடந்தால் அவை சேதமும் துன்பமும் விளைவிக்கும் என்பதால், அவற்றைக் கைவிடுங்கள். ' என்று சொன்னோம்.
ஃஃஃ
(எதிர்மறையாக மேலே சொன்னதை நேர்மறையாக புத்தர் மீண்டும் சொல்கிறார்)
"காலாமர்களே, கர்ணபரம்பரையாக வரும் வழக்கம் என்பதால், வமிசபரம்பரையாக வந்த உபதேசம் என்பதால் ............ சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால், உங்களுக்கே எது சரியானது, எது தகுதியுடையது, எதனை சான்றோர் போற்றுவார்கள் என்பது தெரிந்த பிறகு, அவற்றை ஏற்று அதன்படி நடந்தால் அவை நன்மையும் மகிழ்ச்சியும் விளைவிக்கும், என்பதை அறிந்த பிறகு உங்கள் வாழ்க்கையை அதன்படி நடத்திக் கொள்ள கொள்ளுங்கள்."
(1) "என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? ஒருவர் உள்ளத்தில் நிராசை (ஆசையின்மை) தோன்றும் போது அது அவர்களை நன்மைக்கு எடுத்துச் செல்லுமா, அல்லது தீமைக்கு எடுத்துச் செல்லுமா?"
"நன்மைக்கு, ஐயா."
"காலாமர்களே, பேராசை இல்லாத ஒருவர், பேராசையின் பிடியில் இல்லாதவர், அதற்கு அடிமையாகாதவர், உயிர்களைக் கொல்ல மாட்டார், பொருட்களைத் திருட மாட்டார், தவறான பாலியல் உறவுகள் கொள்ளமாட்டார், தவறான பேச்சுரைக்கமாடடார். மேலும் மற்றவர்களையும் தீயச் செயல்களில் ஈடுபட ஊக்கமளிக்கமாட்டார். இவையெல்லாம் அவரின் நீண்ட நாள் நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும், எடுத்துச் செல்லுமா?"
"ஆம், ஐயா."
(2) ... வெறுப்பின்மை மனதில் தோன்றும் போது......
(3) ... மயக்கமின்மை மனதில் தோன்றும் போது....
"என்ன நினைக்கின்றீர்கள், காலாமர்களே? இவை நன்மை தருவனவா அல்லது தீமை தருவனவா?" - "நன்மைத் தருவன, ஐயா." - "பழித்தற்குரியவையா, குற்றமற்றவையா?"- "குற்றமற்றவை, ஐயா." -
"சான்றோர் குறைப்படுவார்களா, அல்லது போற்றுவார்களா?" - "சான்றோர் போற்றுவார்கள், ஐயா." - "இவற்றை ஏற்றுக் கொண்டு அதன் படி நடந்தால், அவை உங்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் விளைவிக்குமா இல்லையா அல்லது நீங்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?" - "இவற்றை ஏற்றுக் கொண்டு அதன் படி நடந்தால் இவை நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் எடுத்துச் செல்லும். அவ்வாறே நாங்கள் புரிந்து கொள்கிறோம்."
"இதன் காரணமாகவே காலாமர்களே, நாங்கள், 'காலாமர்களே, கர்ணபரம்பரையாக வரும் வழக்கம் என்பதால், வமிசபரம்பரையாக வந்த உபதேசம் என்பதால் ........ சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால், உங்களுக்கே எது சரியானது, எது தகுதியுடையது, எதனை சான்றோர் போற்றுவார்கள் என்பது தெரிந்த பிறகு, அவற்றை ஏற்று அதன்படி நடந்தால் அவை நன்மையும் மகிழ்ச்சியும் விளைவிக்கும்,' என்பதை அறிந்த பிறகு, உங்கள் வாழ்க்கையை அதன்படி நடத்திக் கொள்ளுங்கள்.' என்று சொன்னோம்."
ஃஃஃ
"பின், காலாமர்களே, ஏக்கம் இல்லாத, பகைமை இல்லாத குழப்பம் இல்லாத, தெளிவாக அறிந்த, கூர்ந்த கவனத்தோடு அந்த ஆரியச் சீடர் தன் மனதில் அன்பு பொங்க அந்த அன்பை ஒரு திசையில் பரவச் செய்து... தன் மனதில் கருணை பொங்க... தன் மனதில் முதிதம் பொங்க (பிறர் மகிழ்ச்சியில் உவகை கொள்வது)... தன் மனதில் உபேட்சை பொங்க (சமமனநிலை கொண்டிருப்பது), அதேபோல் இரண்டாம் திசை, மூன்றாம் திசை, நான்காம் திசை, மேல் திசை, கீழ் திசை, குருக்கு திசை, எங்கும், தனக்குள்ளது போலவே மற்றவருக்கும், உலகம் முழுவதுக்கும் நல்லெண்ணங்கள் பரப்பி மன சம நிலையில் விசாலமாக, மாண்புடைய, அளவிட முடியாத, பகைமை இல்லாத, மனதோடு வாழ்கிறார்."
"காலாமர்களே, பகைமை இல்லாத மனவெரிச்சல் இல்லாத, கரைப் படியாத தூய்மையான அந்த ஆரியச்சீடர் இந்த வாழ்க்கையிலேயே நான்கு உறுதிப்பாடுகளை வென்றவராகிறார்."
"அவர் வென்ற முதல் உறுதி இதுவே: 'மற்றொரு உலகம் உண்டென்றால், நற்செயலுக்கும் தீச் செயலுக்கும் பலனும் பயணும் இருந்தால், இந்த உடல் உடைந்த பின், மரணத்தின் பின், நான் ஒரு நல் உலகில், சொர்க்கத்தில், மறுபிறப்பெடுப்பேன்.'
அவர் வென்ற இரண்டாம் உறுதி இதுவே: 'மற்றொரு உலகம் இல்லையென்றால், நற்செயலுக்கும் தீச் செயலுக்கும் பலனும் பயணும் இல்லையென்றால், இங்கே, இந்த வாழ்க்கையிலேயே, பகைமை இல்லாமல், மனவெரிச்சல் இல்லாமல், தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்வேன்.'
அவர் வென்ற மூன்றாம் உறுதி இதுவே: 'தீமை செய்பவனுக்குத் தீமை பயனாக வரும் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் எவரிடமும் தீய எண்ணங்கள் இல்லாத என்னிடம், தீச் செயல் செய்யாத என்னிடம், எப்படி துன்பம் நெருங்கும்?'
அவர் வென்ற நான்காம் உறுதி இதுவே: 'தீமை செய்பவனுக்கு தீமை பயனாக வராதென்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இங்கே இரண்டு வழிகளிலும் நான் தூய்மையானவனாக இருப்பதை காண்கிறேன்.' "
"இவ்வாறு காலாமர்களே, பகைமை இல்லாத மனவெரிச்சல் இல்லாத, கரைப் படியாத தூய்மையான அந்த ஆரியச்சீடர் இந்த வாழ்க்கையிலேயே இந்த நான்கு உறுதிப்பாடுகளை வென்றவராகிறார்."
"நீங்கள் சொன்னது சரியே, பகவரே! நீங்கள் சொன்னது சரியே பாக்கியமுடையவரே!!பகைமை இல்லாத மனவெரிச்சல் இல்லாத, கரைப் படியாத தூய்மையான அந்த ஆரியச்சீடர் இந்த வாழ்க்கையிலேயே இந்த நான்கு உறுதிப்பாடுகளை வென்றவராகிறார்."
(பகவர் சொன்னதை காலாமர்கள் திரும்பச் சொல்கின்றனர்)
"அவர் வென்ற முதல்.. இரண்டாம்... மூன்றாம்... நான்காம் உறுதி..."
"அருமை ஐயா! அருமை! ......பகவரிடம் நாங்கள் அடைக்கலம் செல்கின்றோம். தம்மத்திடம் நாங்கள் அடைக்கலம் செல்கின்றோம். சங்கத்திடம் நாங்கள் அடைக்கலம் செல்கின்றோம். பகவர் இன்றிலிருந்து எங்களை இவ்வாழ்நாள் முடியும் வரை அடைக்கலம் சென்ற இல்லற சீடர்களாக ஏற்றுக்கொள்வாரா."
ஃஃஃ
ஆதாரம்: https://suttacentral.net/an3.65
Comments
Post a Comment