சுந்தருக்குத் தந்த போதனை

 


வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை

அங்குத்தர நிகாயம் AN 10.176


நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒருமுறை பகவர் பாவா ஊருக்கு அருகே வெள்ளிக்கொல்லர் சுந்தரின் மாந்தோப்பில் தங்கியிருந்தார். வெள்ளிக்கொல்லர் சுந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, பின் ஒரு புறமாக அமர்ந்தார். அமர்ந்திருந்த அவரிடம் பகவர், "சுந்தா, எப்படிப்பட்ட தூய்மை ஆசாரத்தை நீ ஏற்கின்றாய்?" என்று கேட்டார்.


"தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரத்தை நான் ஏற்கின்றேன், ஐயா."


"அவ்வாறு தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் எவ்வாறான தூய்மையாச்சாரத்தை உரைக்கின்றனர்?"


"....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் தங்கள் சீடர்களை இவ்வாறு பயிற்சி மேற்கொள்ள கூறுவர்: 'வாரும் உத்தமபுருஷர்களே, சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியைத் தொட வேண்டும். அப்படி பூமியைத் தொடாவிட்டால், ஈரமான மாட்டு சாணத்தைத் தொடவேண்டும். அப்படி ஈரமான மாட்டு சாணத்தைத் தொடாவிட்டால், பச்சைப் புல்லைத் தொடவேண்டும். அப்படி பச்சை புல்லைத் தொடாவிட்டால், தீயை வழிபட வேண்டும். அப்படி தீயை வழிபடவில்லையென்றால், கைகூப்பி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கைகூப்பி சூரிய நமஸ்காரம் செய்யாவிட்டால், பொழுது இறங்குமுன் தண்ணீரில் மூன்று முறை முழுக வேண்டும். இப்படிப்பட்ட தூய்மையாச்சாரங்களை தான் .....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கின்றனர். அதனை நான் ஏற்கின்றேன்."


"சுந்தா, .....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரங்கள் ஒன்று; மேன்மையானோர் மார்க்கத்தில் உள்ள தூய்மை என்பது முற்றிலும் வேறு."


"மேன்மையானோர் மார்க்கத்தில் எவ்வாறு தூய்மை உள்ளது, ஐயா? மேன்மையானோர் மார்க்கத்தில் எவ்வாறு தூய்மை உள்ளது என்பதை பகவர் எனக்கு கற்பித்தால் நல்லது."


"அப்படியென்றால் சுந்தா, கவனமாக கேள். நான் பேசுகிறேன்."


"ஆகட்டும், ஐயா," என்று வெள்ளிக்கொல்லர் சுந்தர் பதிலளித்தார்.


பகவர் கூறினார்: "உடம்பால் மூன்று வழிகளிலும், சொல்லால் நான்கு வழிகளிலும், உள்ளத்தால் மூன்று வழிகளிலும் ஒருவர் தூய்மையற்றவராகலாம்."


உடம்பால் செய்யும் திறனற்ற செயல்கள்


"உடம்பால் செய்யும் செயல்களால் ஒருவர் எப்படி தூய்மையற்றவராகிறார்? உயிரைப் பறிப்பவர், ஒரு வேடன், ரத்தம் படிந்த கைகள் உடையவர், கொல்வதற்கும் மாய்ப்பதற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். உயிரினங்களுக்கு எந்தக் கருணையும் காட்டாதவர்; 


தனக்கென்று கொடுக்காத பொருளை எடுத்துக் கொள்பவர். திருடும் நோக்கத்தோடு ஒரு கிராமத்திலோ காட்டிலோ, மற்றவரின் பொருட்களை எடுத்துக் கொள்கிறார்;  


தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார். அவர் தாய், தந்தை, அக்கா, அண்ணா, உறவினர் ஆகியோரின் பாதுகாப்பில் உள்ளவருடன் அல்லது தங்கள் தர்மத்தின் பாதுகாப்பில் உள்ளவருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார். திருமணமானவர், சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளவர் போன்றவருடனும், திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடனும் பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார். 

இவ்வாறு மூன்று வழிகளில் உடம்பின் செயலால் ஒருவர் தூய்மையற்றவராகிறார்."



திறனற்ற சொல்


நாங்கு வழிகளில் சொல்லால் ஒருவர் எப்படி தூய்மையற்றவராகிறார்? 


ஒருவர் பொய்யான பேச்சில் ஈடுபடுகிறார். அவர் ஒரு ஊர் சபைக்கு, ஒரு கூட்டத்திற்கு, உறவினர் கூடியுள்ள இடத்திற்கு, தனது தொழில் சம்பந்தப்பட்ட குழுவிற்கு, ஒரு ராஜ சபைக்கு (நீதி வழங்கும் மன்றத்திற்கு) சாட்சியாக இவ்வாறு அழைக்கப்படுகிறார், 'வாரும் ஐயா. உங்களுக்கு தெரிந்ததை வந்து சொல்லவும்.': அவருக்குத் தெரியாது என்றால், 'எனக்குத் தெரியும்' என்கிறார். அவருக்கு தெரியும் என்றால், 'எனக்குத் தெரியாது' என்கிறார். அவர் பார்க்கவில்லை என்றால், 'நான் பார்த்தேன்' என்கிறானர். அவர் பார்த்திருந்தால், 'நான் பார்க்கவில்லை' என்கிறார். இவ்வாறு சுயநலத்திற்காக அல்லது மற்றொருவரின் நன்மைக்காக அல்லது ஒரு வெகுமதி பெறுவதற்காக, தெரிந்தே பொய் சொல்கிறார். 


அவர் மற்றவரை பிரித்துப் பேசுகிறார். அங்கு உள்ளவர்களையும் இங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக இங்கு கேட்டதை அங்கு சொல்கிறார். இங்கு உள்ளவர்களையும் அங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக அங்கு கேட்டதை இங்கு சொல்கிறார். இவ்வாறு ஒற்றுமையாய் இருந்தவர்களை பிரித்து, பிரிந்தவர்களின் மத்தியில் சச்சரவுகள் உண்டாக்குவதற்கு அவருக்கு ஏக மகிழ்ச்சி. பிரிவினை உண்டாக்குவதற்கு ஏற்ப, பேசுவார்.


அவர் அடாவடி பேச்சில் ஈடுபடுவார். 

மற்றவர் கோபம் தூண்டப்பட்டு, அவர்களது அமைதி அழிக்கப்படும் வகையில் கடுமையான, கசப்பான, இகழ்ந் துரைக்குஞ் சுடுஞ்சொற்களைப் பேசுவார்.


அவர் வீண் பேச்சில் ஈடுபடுவார். பேச கூடாத நேரத்தில் பேசுவார். பேசும் போது அதில் உண்மை இருக்காது. நோக்கமும், தர்மமும், ஒழுக்கமும் அடைவதற்காக பேசப்பட்டிருக்காது. அவரது பேச்சு போற்றி காப்பாற்றப்பட வேண்டிய பேச்சாக இருக்காது.


 இவ்வாறு ஒருவர் நாங்கு வழிகளில் சொல்லால் தூய்மையற்றவர் ஆகிறார்.


திறமையற்ற உள்ளச் செயல்கள்


 ஒருவர் எவ்வாறு மூன்று வழிகளில் உள்ளச் செயல்களினால் தூய்மையற்றவராகிறார்? ஒருவர் பேராசையுள்ளவர். இவ்வாறு நினைத்துக் கொண்டு மற்றவர் பொருட்கள் மீது ஆசை படுகிறார், 'ஓ, மற்றவரது அந்தப் பொருள் எனதுடமையானால் எப்படி இருக்கும்?'


அவர் மற்றவர் மீது தீய எண்ணங்கள் கொள்கிறார். அவர் உள்ளத் தீர்மானங்கள் எல்லாம் இழிவானவை: 'இவர்கள் அனைவரும் கொல்லப்படட்டும் அல்லது வெட்டப்படட்டும் அல்லது நொறுக்கப்படட்டும் அல்லது தீர்த்துக்கட்டப்படட்டும் அல்லது அவர்கள் இல்லாமல் போவார்களாக!' 


அவர் தவறான காட்சி உடையவராக இருக்கின்றார். கோணல்மாணலான வழிகளில் விஷயங்களை காண்கிறார். 'தானம், நன்கொடை செய்வதில் பயனில்லை என்று நினைப்பது. நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் இல்லை என்று நினைப்பது, அடுத்த பிறவி என்று எதுவும் இல்லை என்று நினைப்பது, நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறப்புடையவர்கள் இல்லை என்றும் அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை ஏதும் தர வேண்டியதில்லை என்று நினைப்பது, மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்று நம்பாதது, ஆன்மீகப் பாதையைத் தொடர்ந்து வீடுபேறு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் இந்த உலகம், அடுத்து உலகம் பற்றிய அறிவை தாங்களாகவே நேரடியாக அறிந்து, உணர்ந்து அதனை மற்றவர்க்கும் அறிவிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளாதது.' இவ்வாறு ஒருவர் மூன்று வழிகளில் உள்ளத்தால் தூய்மையற்றவராகிறார். 


"சுந்தா, இவையே பத்து வழிகளில் ஒருவர் செய்யும் திறமையற்ற செயல்கள். இந்த பத்து திறமையற்ற செயல்களில் ஈடுபடும் ஒருவர் சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையற்றவரே, ஈரமான மாட்டு சாணத்தை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையற்றவரே, பச்சைப் புல்லைத் தொட்டாலும் தொடாவிட்டாலும்..... தீயை வழிபட்டாலும் வழிபடவில்லையென்றாலும்....கைகூப்பி சூரிய நமஸ்காரம் செயதாலும் செய்யாவிட்டாலும்....பொழுது இறங்குமுன் தண்ணீரில் மூன்று முறை முழ்கினாலும் முழ்காவிட்டாலும் அவர் தூய்மையற்றவராகவே இருக்கிறார்.


ஏன் அப்படி? ஏனென்றால் இந்த பத்து திறமையற்ற செயல்கள் சுத்தமற்றவை, அசுத்தத்தை விளைவிப்பன. மேலும் இந்த பத்து திறமையற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளதால் தான் நரக உலகம், விலங்கு உலகம், ஆவி உலகம் மற்றும் மற்ற கெட்ட இடங்கள் காணப்படுகின்றன (அங்கே அவர்கள் மறுபிறப்பெடுக்குமிடம் என்பதால்).


ஃஃஃ


(எதிர்மறையாக மேலே சொன்னதையடுத்து நேர்மறையான விளக்கம் தருகிறார் புத்தர்.)


"சுந்தா, உடம்பால் மூன்று வழிகளிலும், சொல்லால் நான்கு வழிகளிலும், உள்ளத்தால் மூன்று வழிகளிலும் ஒருவர் தூய்மையானவராகலாம்."


உடம்பால் செய்யும் திறமையானச் செயல்கள்


"உடம்பால் மூன்று வழிகளில் செய்யும் செயல்களால் ஒருவர் எப்படி தூய்மையானவராகிறார்? ஒருவர் உயிரைப் பறிப்பதை கைவிட்டு, உயிர்கட்கு துன்பஞ்செய்யாதிருக்கிறார். அவர் தடியை கைவிட்டவர், கத்தியை கைவிட்டவர் நேர்மையானவர், கருணை உள்ளவர், அனைத்து உயிர்களின் நலன் மீதும் அக்கறை கொண்டவர்; 


தனக்கென்று கொடுக்காத பொருளை எடுப்பதைக் கைவிட்டவர். திருடும் நோக்கத்தோடு ஒரு கிராமத்திலோ காட்டிலோ, மற்றவரின் பொருட்களை எடுத்துக் கொள்ள மாட்டார்;  


தவறான பாலியல் உறவுகளை கைவிட்டவர். அவர் தாய், தந்தை, அக்கா, அண்ணா, உறவினர் ஆகியோரின் பாதுகாப்பில் உள்ளவருடன் அல்லது தங்கள் தர்மத்தின் பாதுகாப்பில் உள்ளவருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடுவதில்லை. திருமணமானவர், சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளவர், திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் போன்றோருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடுவதில்லை. 


இவ்வாறு மூன்று வழிகளில் உடம்பின் செயலால் ஒருவர் தூய்மையானவராகிறார்."


திறமையான சொல்


நாங்கு வழிகளில் சொல்லால் ஒருவர் எப்படி தூய்மையானவராகிறார்? 


ஒருவர் பொய்யான பேச்சை கைவிட்ட பின் பொய்யான பேச்சில் ஈடுபடுவதில்லை. அவர் ஒரு ஊர் சபைக்கு, ஒரு கூட்டத்திற்கு, உறவினர் கூடியுள்ள இடத்திற்கு , தனது தொழில் சம்பந்தப்பட்ட குழுவிற்கு, ஒரு ராஜ சபைக்கு (நீதி வழங்கும் மன்றத்திற்கு) சாட்சியாக இவ்வாறு அழைக்கப்படுகிறார், 'வாரும் ஐயா. உங்களுக்கு தெரிந்ததை வந்து சொல்லவும்.': அவருக்குத் தெரியாது என்றால், 'எனக்குத் தெரியாது' என்கிறார். அவருக்கு தெரியும் என்றால், 'எனக்குத் தெரியும்' என்கிறார். அவர் பார்க்கவில்லை என்றால், 'நான் பார்க்கவில்லை' என்கிறார். அவர் பார்த்திருந்தால், 'நான் பார்த்தேன்' என்கிறார். இவ்வாறு சுயநலத்திற்காக அல்லது மற்றொருவரின் நன்மைக்காக அல்லது ஒரு வெகுமதி பெறுவதற்காக, தெரிந்தே பொய் சொல்வதில்லை. 


அவர் மற்றவரை பிரித்துப் பேசுவதில்லை. அங்கு உள்ளவர்களையும் இங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக இங்கு கேட்டதை அங்கு சொல்வதில்லை. இங்கு உள்ளவர்களையும் அங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக அங்கு கேட்டதை இங்கு சொல்வதில்லை. இவ்வாறு பிரிந்தவர்களை ஒன்று கூட்டுகிறார், ஒற்றுமையாய் இருப்பவர்களை மேலும் இணைக்கிறார். ஒற்றுமை உண்டாக்குவதற்கு அவருக்கு ஏக மகிழ்ச்சி. ஒற்றுமை உண்டாக்குவதற்கு ஏற்ப பேசுவார்.


அவர் அடாவடி பேச்சை கைவிட்ட பின், அடாவடி பேச்சில் ஈடுபடுவதில்லை. அவர் பேசும் வார்த்தைகள் காதுக்கு இனியவை, அன்பானவை, உள்ளத்தை எட்டுபகை, சாந்தமானவை, பெரும்பாலான மக்கள் விரும்பி கேட்கும் வார்த்தைகள் அவை.


அவர் வீண் பேச்சை கைவிட்ட பின் வீண் பேச்சில் ஈடுபடுவதில்லை. பேசும் போது அதில் உண்மை இருக்கும். நோக்கமும், தர்மமும், ஒழுக்கமும் அடைவதற்காக பேசப்பட்டிருக்கும். அவரது பேச்சு போற்றிக் காப்பாற்றப்பட வேண்டிய பேச்சாக இருக்கும். தகுந்த சமயம் பார்த்து, சரியான, நியாயமான, நோக்கத்துக்கு எடுத்துச் செல்லும் வார்த்தைகளையே பேசுவார்.


 இவ்வாறு ஒருவர் நாங்கு வழிகளில் சொல்லால் தூய்மையானவராகிறார்.


உள்ளத்தின் திறமையான செயல்கள்


 ஒருவர் எவ்வாறு மூன்று வழிகளில் உள்ளச் செயல்களினால் தூய்மையானவராகிறார்? பேராசையற்ற ஒருவர், 'ஓ, மற்றவரது அந்தப் பொருள் எனதுடமையானால் எப்படி இருக்கும்?', என்று நினைத்துக் கொண்டு மற்றவர் பொருட்கள் மீது ஆசை படுவதில்லை.


அவர் மற்றவர் மீது தீய எண்ணங்கள் கொண்டிருப்பதில்லை. அவர் உள்ளத் தீர்மானங்கள் எல்லாம் சிறந்தவை: 'இவர்கள் அனைவரும் பகைமை இல்லாமல், வருத்தம் இல்லாமல், தொந்தரவு இல்லாமல், தங்களைத் தாங்களே சுலபமாக கவனித்துக் கொள்வார்களாக!' என்று நினைப்பார். 


 நற் காட்சி உடைய அவர், கோணல்மாணலான வழிகளில் விஷயங்களை காண்பதில்லை. 'தானம், நன்கொடை செய்வதில் பயன் உண்டு என்று நினைக்கிறார். நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் உண்டு என்று நினைக்கிறார். இந்த உலகம் அடுத்து உலகம் என்பதில் நம்பிக்கை கொண்டவர். நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறப்புடையவர்கள் உண்டு என்றும் அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை தர வேண்டும் என்றும் நினைப்பது, மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்றும் நம்புவது. ஆன்மீகப் பாதையைத் தொடர்ந்து வீடுபேறு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் இந்த உலகம், அடுத்து உலகம் பற்றிய அறிவை தாங்களாகவே நேரடியாக அறிந்து, உணர்ந்து அதனை மற்றவர்க்கும் அறிவிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்வது.' இவ்வாறு ஒருவர் மூன்று வழிகளில் உள்ளத்தால் தூய்மையானவர் ஆகிறார்."


"சுந்தா, இவையே பத்து வழிகளில் ஒருவர் செய்யும் திறமமையான செயல்கள். இந்த பத்து திறமையான செயல்களில் ஈடுபடும் ஒருவர் சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையானவரே, ஈரமான மாட்டு சாணத்தை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையானவரே, பச்சைப் புல்லைத் தொட்டாலும் தொடாவிட்டாலும், தீயை வழிபட்டாலும் வழிபடவில்லை என்றாலும், கைகூப்பி சூரிய நமஸ்காரம் செய்யதாலும் செய்யாவிட்டாலும், பொழுது இறங்குமுன் தண்ணீரில் மூன்று முறை முழுகினாலும் முழுகாவிட்டாலும் அவர் தூய்மையானவராகவே இருக்கிறார்.

ஏன் அப்படி என்றால், இந்த பத்து திறமையான செயல்கள் சுத்தமானவை, சுத்தத்தை விளைவிக்கும். மேலும் இந்த பத்து திறமையான செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளதால் தான் தேவலோகம், மனிதலோகம், மற்றும் மற்ற நல்ல இடங்கள் காணப்படுகின்றன (அங்கே அவர்கள் மறுபிறப்பெடுக்குமிடம் என்பதால்).


ஃஃஃ


இதைக் கேட்ட வெள்ளிக்கொல்லர் சுந்தர் பகவரிடம், "அருமை ஐயா! அருமை! விழுந்ததை நிறுத்தி வைப்பது போல, மறைத்ததை வெளிப்படுத்துவது போல, வழி தவறி தொலைந்தவருக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் பார்க்க முடிவது போல, பகவரும் - பல நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். பகவரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தம்மத்திடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். பகவர் இன்றிலிருந்து என்னை இவ்வாழ்நாள் முடியும் வரை அடைக்கலம் சென்ற இல்லற சீடராக நினைவில் கொள்வாரா." 


ஃஃஃ

ஆதாரம்: தணிசாரோ பிக்கு

https://suttacentral.net/an10.176/

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்