புகழ்தலும் இகழ்தலும்
புகழ்தலும் இகழ்தலும்
Praise and blame
ஒரு முறை பகவர் பெரும் சங்கத் தாரோடு இராஜகிருகத்திலிருந்து நாளந்தைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் நாடோடி சுப்பியாவும் அவரது மாணவரான இளைஞர் பிரம்மதத்தரும் அவர்களுக்கு பின்னால் அதே வழியில் நடந்துவந்துக் கொண்டிருந்தனர். சுப்பியா பல வழிகளில் புத்த, தம்ம, சங்கம் ஆகிய மும்மணிகளையும் அவதூராக பேசி கொண்டு வந்தார். ஆனால் அவரது மாணவரான பிரம்மதத்தரோ புத்த, தம்ம சங்கத்தினரை புகழ்ந்து கொண்டு வந்தார். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு புத்தரையும் சங்கத்தினரையும் தொடர்ந்தனர்.
பின்னர் பகவரும் சங்கத்தாரும் அரசனின் சத்திரமான அம்பலதிக்கை தோட்டத்தில் இரவைக் கழிக்க தங்கினர். சுப்பியாவும் அவரது மாணவரும் அதே இடத்தில் இரவைக் கழித்தனர். முன் போலவே அந்த இடத்திலும் சுப்பியா மும்மணிகளை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். அவரது மாணவர் பிரம்மதத்தர் மும்மணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
மறுநாள் பொழுது விடிந்ததும் சில பிக்குகள் அங்கிருந்த மண்டபத்தில் கூடினர். அங்கு உட்காந்திருக்கையில் அவர்களிடையே இந்த பேச்சு துவங்கியது.
" அருமை! அதிசயம் !முழுமையாக ஞானம் அடைந்த பகவர் மனிதரின் சுபாவத்தில் எப்படி எல்லாம் மாறுபாடுகள் உள்ளன என்பதை தெளிவாக அறிந்து கூறியுள்ளார். இதோ இந்த சுப்பையா என்ற நாடோடி புத்த தம்ம சங்கத்தை இகழ்ந்து பேசுகிறார். ஆனால் அவரது மாணவரான பிரம்மதத்தரோ புத்த தம்ம சங்கத்தை புகழ்ந்து பேசுகிறார். ஆசிரியரும் மாணவருமான இந்த இருவர் ஒருவருக்கொருவர் முரண்பாடாக பேசிக்கொண்டிருக்கின்றனர்."
அப்போது பகவர் அங்கு வரவே, அவர்களிடம் என்ன பேசிக் கொண்டிருக்கின்றீர்' என்று கேட்க, அவர்கள் தாம் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி கூறினார்.
"துறவிகளே மற்றவர் என்னை இகழந்து பேசினாலும், தர்மத்தை இகழ்ந்து பேசினாலும், சங்கத்தை இகழ்ந்து பேசினாலும் நீங்கள் அதன் காரணமாக உங்கள் உள்ளத்தில் கோபமோ, மனவருத்தமோ அல்லது அவர்கள் மீது பகைமையோ கொள்ளக்கூடாது.
ஏனென்றால், அந்த சூழ்நிலையில் நீங்கள் கோபப்பட்டால் அல்லது மனம் கலங்கினால் உங்களுக்கே நீங்கள் ஒரு தடையை உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். நம்மைப் பற்றி ஒருவர் அவதூறாக பேசும்போது நீங்கள் கோபப்பட்டால், மனச் சஞ்சலம் கொண்டால் அவர்கள் பேசுவதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா?"
"கண்டிப்பாக முடியாது, அண்ணலே."
"மற்றவர் என்னைப் பற்றி தர்மத்தைப் பற்றி, சங்கத்தைப் பற்றி அவதூறாக பேசினால் நீங்கள் நிதானமாக அவர்கள் சொன்னதை கேட்டு, அதில் என்ன தவறு உள்ளது என்பதை அறிந்து, அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, 'இந்த இந்த காரணத்தினால் இது தவறு, இது உண்மை இல்லை, அப்படி ஏதும் எங்களுள் இல்லை, அதை எங்களிடையே காண முடியாது', என்று சொல்ல வேண்டும்."
"துறவிகளே மற்றவர் என்னை புகழ்ந்து பேசினாலும், தர்மத்தை புகழ்ந்து பேசினாலும், சங்கத்தை புகழ்ந்து பேசினாலும் நீங்கள் அதன் காரணமாக உள்ளக்களிப்பு அல்லது குதூகலம் கொல்லக்கூடாது.
ஏனென்றால், அந்த சூழ்நிலையில் நீங்கள் மன மகிழ்ச்சி அல்லது குதூகலம் கொண்டாள் உங்களுக்கே நீங்கள் ஒரு தடையை உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். மற்றவர் என்னை புகழ்ந்து பேசினால், தர்மத்தை புகழ்ந்து பேசினால் அல்லது சங்கத்தை புகழ்ந்து பேசினால், நீங்கள் வாய்மையை வாய்மை என ஏற்றுக்கொண்டு: 'இது சரி, இது உண்மை, அப்படி எங்களுள் உள்ளது, அதை எங்களிடையே காண முடியும்', என்று சொல்ல வேண்டும்."
குறிப்பு:
நமது வாழ்க்கையிலும் சில சமயம் புகழப்படுவோம், சில சமயம் இகழப்படுவோம். இரண்டையும் சம மன நிலையோடு சந்திக்க வேண்டும் என்பது இதனை போதித்த பாந்தே அவர்களின் அறிவுரை.
ஆதாரம்: DN1 நீண்ட போதனைகள் 1
Comments
Post a Comment