சிறிய பௌர்ணமி தின போதனை

 சிறிய பௌர்ணமி தின போதனை

Cūḷapuṇṇama sutta    cūḷa சிறிய puṇṇama பௌர்ணமி

மஜ்ஜிம நிகாயம் MN110

ஃஃஃ

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.

பகவர் ஒருமுறை சாவத்திக்கருகில், கிழக்கு விகாரையில், மிகாரரின் தாயின் அரண்மையில் எழுந்தருளியிருந்தார். 

அன்று பௌர்ணமி உபோசத தினம். சங்கத் துறவிகள் அவரை சூழ்ந்து இருக்க, புத்தர் ஒரு திறந்தவெளியில அமர்ந்திருந்தார். மிகவும் அமைதியாக இருந்த துறவிகளை புத்தர் கண்ணோட்டமிட்டார். அவர்களிடம், 'துறவிகளே, ஒரு நேர்மை இல்லாத மனிதர் மற்றொரு நேர்மை இல்லாத மனிதரை கண்டு, 'அவர் ஒரு நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா?

"முடியாது, ஐயா."

"நல்லது, துறவிகளே! அது முடியாது. நேர்மை இல்லாத மனிதர், மற்றொரு நேர்மை இல்லாத மனிதரைக் கண்டு, 'அவர் நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள இயலாது.

 ஆனால், ஒரு நேர்மை இல்லாத மனிதர், ஒரு நேர்மையான மனிதரைக் கண்டு, 'அவர் ஒரு நேர்மையானவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா?

"முடியாது, ஐயா."

"நல்லது, துறவிகளே! அதுவும் முடியாத காரியம். ஒரு நேர்மை இல்லாதவர், தீய பண்புகளையும், தீயோருடன் தொடர்பினையும், தீய நோக்கங்களையும் கொண்டிருப்பார். தீய ஆலோசனை தருவார். தீய பேச்சும், நடத்தையும், கொள்கையும் கொண்டுள்ளவராக இருப்பார். தீயவர் வழியில் தானம் தருவார்.

நேர்மை இல்லாத ஒருவர் எவ்வாறு தீய பண்புகளை கொண்டவராக இருப்பார்? அவரிடம் மும்மணிகள் மீது நம்பிக்கை இருக்காது, தவறு செய்வதற்கு வெட்கப்பட மாட்டார், செய்யப்போகும் தவறுக்கான விளைவுகளுக்கு பயப்பட மாட்டார், அவர் போதனைகளை அறியாதவர், சோம்பல் உடையவர், கடைப்பிடி (கூர்ந்த கவனம்) இல்லாதவர், விவேகம் இல்லாதவர். இவ்வாறு தான் ஒரு நேர்மை இல்லாதவர் தீய பண்புகளை உடையவராக இருக்கின்றார்.

நேர்மை இல்லாதவர் தீயோருடன் எப்படிப்பட்ட தொடர்பை வைத்துக் கொண்டிருப்பார்? நம்பிக்கையற்ற, வெட்கப்படாத, அச்சம் இல்லாத, அறிவற்ற, சோம்பல் உடைய, கவனம் இல்லாத, விவேகம் இல்லாதவருடன் அவர் நட்பும் தோழமையும் கொண்டிருப்பார். இவ்வாறு தான் ஒரு நேர்மையற்றவர் தீயோருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பார்.

நேர்மை இல்லாதவர் எவ்வாறு தீயோரின் நோக்கத்தை கொண்டிருப்பார்? அவர் தனக்கு தீங்கு செய்யும் நோக்கமும், மற்றவருக்கு தீங்கு செய்யும் நோக்கமும், தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்யும் நோக்கமும் கொண்டிருப்பவராக இருப்பார்.

நேர்மை இல்லாத ஒருவர் எப்படி தீய ஆலோசனை தருபவராக இருப்பார்? அவர் தரும் ஆலோசனையின் விளைவாக தமக்கும் தீங்கு விளைவிக்கப்படும், மற்றவர்க்கும் தீங்கு விளைவிக்கப்படும் தமக்கும் மற்றவர் இரு சாராருக்கும் தீங்கு விளைவிக்கப்படும்.

நேர்மை இல்லாத ஒருவர் எப்படி தீய பேச்சை கொண்டிருப்பவராக இருப்பார்?அவர் தவறான பேச்சை கூறுவார் - அதாவது பொய் சொல்வார். மற்றவரை பிரிக்கும் நோக்கத்துடன் பேசுவார், கடுஞ்சொல் பேசுவார். மேலும் தேவை இல்லாத பயனற்ற பேச்சை பேசுவார்.

நேர்மை இல்லாத ஒருவர் எவ்வாறு தீயோரின் நடத்தையை கொண்டிருப்பவராக இருப்பார்? அப்படிப்பட்டவர் உயிர் கொலை செய்வார், திருடுவார், தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடுவார்.

நேர்மையற்றவர் கொண்டுள்ள தீய கருத்துக்கள் என்ன?
தானம், நன்கொடை செய்வதில் பயனில்லை என்று நினைப்பது. 
நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் இல்லை என்று நினைப்பது.
அடுத்த பிறவி என்று எதுவும் இல்லை என்று நினைப்பது.
நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறந்தவர்கள் இல்லை என்றும் அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை ஏதும் தர வேண்டியது இல்லை என்று நினைப்பது,.
மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்று நம்பாதது.
ஆன்மீகப் பாதையை தொடர்ந்து, வீடு பேரு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் சிறப்பான அறிவுகளை பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளாது. 

நேர்மை இல்லாத ஒருவர் எவ்வாறு தீய வழிகளில் தானங்கள் தருகின்றார்? கவனமின்றி அசட்டையாக தரும் அன்பளிப்பு, தங்கள் கையால் தரப்படாத அன்பளிப்பு. மிஞ்சியதை தருவது. வெறுப்பான மனதோடு, தவறான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை இல்லாதவராக தருவது.

இப்படிப்பட்ட நேர்மையற்றவர் - தீய பண்புகளை உடையவர், தீயோருடன் தொடர்பு வைத்திருப்பவர், தீய நோக்கங்களோடு இருப்பவர், தீய அறிவுரை கொடுப்பவர், தீய பேச்சும், நடத்தையும் கருத்தும் கொண்டவர், தீய வழியில் தானம் தருபவர் -அப்படிப்பட்டவர் தமது உடல் சிதைந்த பின், மரணத்தின் பின், தீயவர் பிறக்கும் இடத்தில் மறுபிறப்பு எடுக்கின்றார். தீயவர் எங்கே மறுபிறப்பு எடுப்பார்கள்? நரகம் அல்லது மிருக லோகங்களில்.

ஃஃஃ

துறவிகளே, ஒரு நேர்மையான மனிதர் மற்றொரு நேர்மையான மனிதரை கண்டு, 'இந்த மனிதர் நேர்மையானவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா?

"முடியும், ஐயா."

"நல்லது, துறவிகளே! அது முடியும். நேர்மையான மனிதர், மற்றொரு நேர்மையான மனிதரைக் கண்டு, 'அவர் நேர்மையானவர்', என்று தெரிந்து கொள்ள முடியும்.

 ஆனால், ஒரு நேர்மையான மனிதர், ஒரு நேர்மை இல்லாத மனிதரைக் கண்டு, 'அவர் ஒரு நேர்மையற்றவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா?

"முடியும், ஐயா."

"நல்லது, துறவிகளே! அதுவும் முடியும். ஒரு நேர்மையானவர், நல்ல பண்புகளையும், நல்லோருடன் தொடர்பினையும், நல்ல நோக்கங்களையும் கொண்டிருப்பார். நல்ல ஆலோசனை தருவார். நல்ல பேச்சும், நடத்தையும், கொள்கையும் கொண்டுள்ளவராக இருப்பார். சிறந்த வழியில் தானம் செய்வார்.

நேர்மையான ஒருவர் எவ்வாறு நல்ல பண்புகளை கொண்டவராக இருப்பார்? அவரிடம் மும்மணிகள் மீது நம்பிக்கை இருக்கும், தவறு செய்வதற்கு வெட்கப்படுவார், செய்யப்போகும் தவறுக்கான விளைவுகளுக்கு பயப்படுவார், அவர் போதனைகளை அறிந்தவர், சுறுசுறுப்பானவர், கடைப்பிடி (கூர்ந்த கவனம்) உள்ளவர், விவேகமுடையவர். இவ்வாறு ஒரு நேர்மையானவர் நல்ல பண்புகள் உடையவராக இருக்கின்றார்.

நேர்மையானவர் நல்லோருடன் எப்படிப்பட்ட தொடர்பை வைத்துக் கொண்டிருப்பார்? நம்பிக்கையுடைய, தவறு செய்வதற்கு முன் அதற்கு வெட்கப்படும், தவறின் விளைவுகளுக்கு அச்சம் உள்ள, அறிவுள்ள, சுறுசுறுப்பான, நற்கடைபிடி கொண்ட, விவேகம் உள்ளவருடன் அவர் நட்பும் தோழமையும் கொண்டிருப்பார். இவ்வாறு தான் ஒரு நேர்மையானவர் நல்லோருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பார்.

நேர்மையானவர் எவ்வாறு நல்லோரின் நோக்கத்தை கொண்டிருப்பார்? அவர் தனக்கு தீங்கு செய்ய விரும்ப மாட்டார், மற்றவருக்கு தீங்கு செய்ய விரும்ப மாட்டார், தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்யும் நோக்கம் இல்லாதவராக இருப்பார்.

நேர்மையானவர் எப்படி நல்ல ஆலோசனை தருபவராக இருப்பார்? அவர் தரும் ஆலோசனையின் விளைவாக தமக்கும் தீங்கு விளைவிக்கப்படாது, மற்றவர்க்கும் தீங்கு விளைவிக்கப்படாது, தமக்கும் மற்றவர் இரு சாராருக்கும் தீங்கு விளைவிக்கப்படாது.

நேர்மையான ஒருவர் எப்படி நல்லோரின் பேச்சை கொண்டிருப்பவராக இருப்பார்?அவர் தவறான பேச்சை கூற மாட்டார் - அதாவது பொய் சொல்ல மாட்டார். மற்றவரை பிரிக்கும் நோக்கத்துடன் பேச மாட்டார், கடுஞ்சொல் பேச மாட்டார். மேலும் தேவை இல்லாத பயனற்ற பேச்சை பேசமாட்டார்.

நேர்மையானவர் எவ்வாறு நல்லோரின் நடத்தை கொண்டிருப்பவராக இருப்பார்? அப்படிப்பட்டவர் உயிர் கொலை செய்ய மாட்டார், திருட மாட்டார், தவறான பாலியல் உறவுகளில் ஈடுபட மாட்டார்.

நேர்மையானவர் கொண்டுள்ள நல்லோரின் கருத்துக்கள் என்ன? 
தானம், நன்கொடை செய்வதில் பயனுன்டு என்று நினைப்பது. 
நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் உண்டு என்று நினைப்பது.
அடுத்த பிறவி என்று ஒன்று இருக்கின்றது என்று நினைப்பது.
நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறந்தவர்கள் உண்டு என்றும், அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை தர வேண்டும் என்று நினைப்பது,.
மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்று நம்புவது.
ஆன்மீகப் பாதையை தொடர்ந்து, வீடு பேரு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் சிறப்பான அறிவுகளை பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்வது.

நேர்மையான ஒருவர் எவ்வாறு நல்லோரின் வழியில் தானங்கள் தருகின்றார்? கவனத்தோடு தரும் அன்பளிப்பு, தங்கள் கையால் தரப்படும் அன்பளிப்பு. மிஞ்சியதை தருவதில்லை. இன்பமான மனதோடு, நேர்மையான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கையுல்லவராக தருவது.

இப்படிப்பட்ட நேர்மையானவர் - நல்ல பண்புகளை உடையவர், நல்லோருடன் தொடர்பு வைத்திருப்பவர், நல்ல நோக்கங்களோடு இருப்பவர், நல்ல அறிவுரை கொடுப்பவர், நல்ல பேச்சும், நடத்தையும் கருத்தும் கொண்டவர், நல்ல வழியில் தானம் தருபவர் -அப்படிப்பட்டவர் தமது உடல் சிதைந்த பின், மரணத்தின் பின், நல்லவர் பிறக்கும் இடத்தில் மறுபிறப்பு எடுக்கின்றார். நல்லவர் எங்கே மறுபிறப்பு எடுப்பார்கள்? தேவர் அல்லது மனிதர் மத்தியில்."

இவ்வாறு புத்தர் கூறினார். திருப்தி அடைந்த துறவிகள் புத்தர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தனர்.


ஃஃஃ

ஆதாரம்: suttacentral dot net/mn110

நல்லோரின் பண்புகள்:
1. saddhā சத்தா: புத்தரின் போதனைகளில் நம்பிக்கை கொண்டவர் confidence
2. hiri ஹிரி: தவறு செய்வதற்கு வெட்கப்படுவது, moral shame
3. ottappa ஒத்தாப்ப: தவறு செய்வதற்கு முன் அதன் விளைவுகளுக்கு பயப்படுவது fear of consequences
4. bahussutā பகுசுதா: புத்தரின் போதனைகளை/சுத்தங்களை அறிந்தவர் versed in the Scriptures 
5. vīriyā வீரியம்: சுறுசுறுப்புடன் செயல்படுவது energetic
6. sati ஸதி: கடைப்பிடி உள்ளவர் (கூர்மையான கவனம்) mindful
7. pañña பஞ்ஞா: விவேகம் உள்ளவர் possessed of insight, wise

ஃஃஃ

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்