கோட்டை உவமானம்

 


கோட்டை உவமானம்
Nagaropamasutta நகரோபமசுத்தம்
The Simile of the Citadel
Aṅguttara Nikāya 7.67

(சுருக்கம்)

எல்லைப் புறத்தில் உள்ள ஒரு கோட்டை எப்போது வேண்டுமானாலும் எதிரிகளால் தாக்கப்படலாம். எனவே, தயார் நிலையில் இருப்பது நல்லது. அதன்படி கோட்டையின் பாதுகாப்பு அமைந்திருக்க வேண்டும். அதேபோல நாமும் காமம், வெகுளி, அறியாமை என்ற விஷங்களால், விழித்திருக்கும் எந்நேரமும் தாக்கப்படுகிறோம். எனவே, நாமும் தயார் நிலையில் இருப்பது நல்லது. கோட்டையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை உவமானங்களாகக் கொண்டு, புத்தர் மனதின் பாதுகாப்புக்கான ஏழு அத்தியாவசியங்களையும், நான்கு ஆகாரங்களையும் பட்டியலிட்டு தருகிறார். 

சூல புண்ணமா சுத்தத்தில் (சிறிய பௌர்ணமி தின போதனை MN110) வரும் நல்லோரின் ஏழு பண்புகளும், இந்த சுத்தத்தில் குறிப்பிடப்படும் ஏழு அத்தியாவசியமானவையும் ஒன்று.  

அவை:

1. நம்பிக்கை saddhā
2. வெட்கம் (தவறு செய்வதற்கு) hirī 
3. அச்சம் (தவறின் விளைவுகளுக்கு) ottāppa
4. போதனைகளை அறிந்திருப்பது bahussutā 
5. சுறுசுறுப்புடன் செயல்படுவது vīriyā
6. கடைப்பிடி (கூர்மையான கவனம்) sati
7. விவேகம் pañña 


ஃஃஃ

நகரோபம சுத்தம் AN7.67

"துறவிகளே, ஒரு மன்னர் தனது எல்லைப்புறத்துள்ள கோட்டையை இந்த ஏழு அத்தியாவசியங்களோடு அமைத்திருந்து, மேலும் அதனோடு (கோட்டைக்குள் வாழ்வோருக்கு) நான்கு ஆகாரங்களும் சிரமமில்லாமல் கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்தால், அதனை புற எதிரிகளாலும், விரோதிகளாலும் அழிபட முடியாத ஒரு கோட்டை எனலாம்.

சிறப்பாக அமைக்கப்பட்ட கோட்டைக்குத் தேவையான ஏழு அத்தியாவசியங்கள் என்ன?

முதலில், ஒரு கோட்டைக்கு ஆழமான அடித்தளம் கொண்ட, உறுதியான, அசைக்க முடியாத ஒரு தூண் தேவை.
இதுவே ஒரு மன்னரின் எல்லைப்புற கோட்டைக்கு, உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கவும், வெளியே உள்ள எதிரிகளை தடுக்கவும், தேவையான முதல் அத்தியாவசியமான விஷயம்.

மேலும், கோட்டையைச் சூழ்ந்துள்ள ஒரு ஆழமான, அகலமான, அகழி தேவை.
இதுவே இரண்டாவது அத்தியாவசியமான விஷயம்...

மேலும், கோட்டை சுற்றி உயரமான, அகலமான காவலர் ரோந்து செல்வதற்கான பாதை தேவை. இதுவே மூன்றாவது அத்தியாவசியமான விஷயம்...

மேலும் கோட்டையில், கைம்படை ஆயுதங்கள், ஏவப்படும் ஆயுதங்கள் என்று பலவிதமான படைக்கலங்கள் கொண்ட மாடங்கள் இருக்க வேண்டும். இதுவே நான்காவது அத்தியாவசியமான விஷயம்..

மேலும் கோட்டைக்குள் பலவிதமான படையினர் இருக்க வேண்டும். அதாவது யானைப் படை, குதிரைப் படை, தேரோட்டிகள், வில்லாளர், கொடிப்படை, துணை அதிகாரிகள், உணவு பரிமாறுவோர், உயர் அதிகாரிகள், இளவரசர், வீரர், தோல் ஆடை கவசம் அணிந்த சிப்பாய்கள்.. போன்றோர். இதுவே ஐந்தாவது அத்தியாவசியமான விஷயம்.

மேலும் கோட்டையில் பொறுப்பான, தகுதியுள்ள, அறிவுடைய வாயில்காப்பான் இருக்க வேண்டும். அவன் தெரிந்தவரை மட்டும் உள்ளே அனுப்புகிறான். அந்நியரை அனுமதிப்பதில்லை. இதுவே ஆறாவது அத்தியாவசியமான விஷயம்....

மேலும் கோட்டைக்கு ஒரு உயரமான அகலமான காரைப் பூசப்பட்ட மதில் இருக்க வேண்டும். இதுவே ஒரு மன்னரின் எல்லைப்புற கோட்டைக்கு, உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கவும், வெளியே உள்ள எதிரிகளை தடுக்கவும், தேவையான ஏழாவது அத்தியாவசியமான விஷயம்.

இந்த ஏழு அத்தியாவசியங்கள் உள்ள போகுது அது ஒரு சிறப்பாக அமைந்திருக்கும் கோட்டை எனலாம்.

ஃஃஃ

தேவையான போது, பிரச்சனை இல்லாமல், இடையூறு இல்லாமல், கிடைக்கும் நான்கு விதமான ஆகாரங்கள் எவை?

முதலில் மன்னரின் எல்லை புறக்கோட்டையில் உள்ளவர்கள் அனுபவிக்கவும், இன்புறவும், அவர்கள் வசதிக்காகவும், புறத்தில் உள்ளவர்களை தோற்கடிக்கவும் வேண்டிய அளவு வைக்கோற்போர், விறகுகட்டைகள், தண்ணீர் சேமித்து வைத்திருக்க வேண்டும்.  

மேலும் கோட்டையில் அரிசி, வாற்கோதுமை ஆகியவை வேண்டிய அளவுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் கோட்டையில் பலத்தரப்பட்ட உணவு வகைகள் - அதாவது எள்ளு, உளுந்து, பயிறு வகைகள் போன்றவை சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் கோட்டையில் மருந்துகள் - நெய், வெண்ணெய், எண்ணெய், தேன், வெல்லப்பாகு, உப்பு போன்றவை உள்ளே இருப்பவரின் வசதிக்காகவும் வெளியே உள்ள எதிரிகளை தோற்கடிக்கவும் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மன்னரின் எல்லை புறக் கோட்டை - ஏழு அத்தியாவசியங்களுடன் அமைந்திருந்து, நான்கு ஆகாரங்களும் தேவையான போது பிரச்சனை இல்லாமல், இடையூறு இல்லாமல், கிடைக்க ஏற்பாடு செய்திருந்தால் - அது எதிரிகளால் அழிபட முடியாத கோட்டை எனலாம்.

ஃஃஃ.

அதேபோல ஒரு மேன்மையான சீடர், ஏழு நற்பண்புகளை கொண்டிருந்தால், நான்கு ஆழமான தியான நிலைகளை - இம்மையில் மேலான மனதின் அடையாளமான பேரின்ப தியானங்கள் - தேவையான போது, பிரச்சனை இல்லாமல், இடையூறு இல்லாமல் அடைய முடிந்தால், அப்படிப்பட்டவரை மாறனால் (காம உலோகத் தலைவன்) வெல்ல முடியாது, அப்படிப்பட்டவரை அந்த தீயவனால் தோற்கடிக்க முடியாது.

உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கவும், வெளியே உள்ள எதிரிகளை தடுக்கவும், ஒரு மன்னரின் எல்லைப்புற கோட்டையில் எப்படி ஆழமான அடித்தளம் கொண்ட, உறுதியான, அசைக்க முடியாத ஒரு தூண் உள்ளதோ, அதேபோல ஒரு மேன்மையான சீடருக்கு புத்தரின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது: 

'அவர் ஒரு அருகர், 
சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர், 
முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், 
நல்ல வழியில் சென்றவர், 
பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், 
தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர்; விழிப்புற்றவர்; 
ஆசிர்வதிக்கப்பட்டவர்'.

ஒரு மேன்மையான சீடர், அந்த அசைக்க முடியாத தூணை போல புத்தர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளவர், சாமர்த்தியமற்றதை தவிர்த்து சாமர்த்தியமானதை வளர்ப்பார், மாசுள்ளதை விட்டுவிட்டு, மாசற்றதை வளர்ப்பார். தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வார். இதுவே அவரது முதல் நற்பண்பு..

ஒரு கோட்டைக்கு ஆழமான, அகலமான அகழி இருப்பது போல ஒரு மேன்மையான சீடர் மனசாட்சி உள்ளவர். தங்கள் மெய், மொழி, மணம் சம்பந்தப்பட்ட எந்த தீய நடத்தையானாலும், அவர்கள் தீய சாமர்த்தியமற்ற பண்புள் கொண்டிருந்தாலும் அவற்றை மனமறிந்தவர்களாக உள்ளனர். மனசாட்சி என்ற அகழி கொண்டுள்ள மேன்மையான சீடர், தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள இரண்டாவது நற்பண்பு.

மேலும் கோட்டைக்கு உயரமான, அகலமான காவலர் ரோந்து செல்வதற்கான பாதை உள்ளது போல ஒரு மேன்மையான சீடர் அவர் நடத்தையில் உஷாராக இருக்கிறார். உடலாலும், பேச்சாலும், மனதாலும் தவறு செய்வதற்கு அச்சம் கொள்கிறார். தவறான சாமர்த்தியமற்ற பண்புகளை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகிறார். இவ்வாறு உஷாராக உள்ள மேன்மையான சீடர், தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள மூன்றாவது நற்பண்பு.

மேலும் கோட்டையில், கைம்படை ஆயுதங்கள், ஏவப்படும் ஆயுதங்கள் என்று பலவிதமான படைக்கலங்கள் கொண்ட மாடங்கள் இருப்பது போல், ஒரு மென்மையான சீடர் போதனைகளில் அறிந்தவராக இருக்கிறார். படித்ததை நினைவுக்கு கொண்டு வந்து, மனதில் தொடர்ந்து வைத்திருக்கின்றார். போதனைகள் துவக்கத்திலும் அழகானவை, மத்தியிலும் அழகானவை, கடைசியிலும் அழகானவை. அவைப் பொருள் கொண்டுள்ளன, நன்றாக தொகுக்கப்பட்டுள்ளன, முழுமையான தூய்மையான ஆன்மீகப் பாதையை விவரிக்கின்றன. அவர்கள் அப்படிப்பட்ட போதனைகளை நன்றாக கற்று இருக்கின்றனர், நினைவில் வைத்திருக்கின்றனர், ஓதுகின்றனர் மனதால் அவற்றை ஆராய்ந்து பார்க்கின்றனர், அவற்றை புரிந்து கொள்கின்றனர். இவ்வாறு போதனைகளை அறிந்த மேன்மையான சீடர், தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள நான்காவது நற்பண்பு.

மேலும் கோட்டைக்குள் பலவிதமான படையினர் இருப்பது போல, ஒரு மென்மையான சீடர் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார். அவர் தம் வீரியம் கொண்டு, திறமையற்ற பண்புகளை கைவிட்டு, திறமையான பண்புகளை வளர்க்கிறார். திறமையான செயல்களை வளர்த்த வலிமையுடன், தாழாது முயன்று, தளராமல் செயல்படுகின்றார். வீரியம் என்ற படையினரை கொண்ட ஒரு மேன்மையான சீடர், தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள ஐந்தாவது நற்பண்பு.

 கோட்டையில் பொறுப்பான, தகுதியுள்ள, அறிவுடைய வாயில்காப்பான் இருப்பது போல - அவன் தெரிந்தவரை மட்டும் உள்ளே அனுப்புகிறான். அந்நியரை அனுமதிப்பதில்லை - மேன்மையான சீடர் கூர்மையான கவனத்துடன் இருக்கிரார். மேலான கூர்மையான கவனத்துடனும், உஷாராகவும், எப்பவோ சொன்னதை, நடந்ததை மறக்காமல் அதை நினைவுக்கு கொண்டு வருகிறார். கூர்மையான கவனம் என்ற வாயில் காப்பானைக் கொண்டுள்ள மேன்மையான சீடர் தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள ஆறாவது நற்பண்பு.

மேலும் கோட்டைக்கு ஒரு உயரமான அகலமான காரைப் பூசப்பட்ட மதில் இருப்பது போல ஒரு மேன்மையான சீடர் விவேகத்துடன் செயல்படுகிறார். 'தோன்றுவதெல்லாம் மறையும்', என்ற மேன்மையான, ஆழமான, துக்கத்தை முடிக்கும் மெய்யறிவை புரிந்து கொண்டுள்ளவர். விவேகம் என்ற மதிலைக் கொண்டுள்ள மேன்மையான சீடர், தீய பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை வளர்க்கினறார்..... இதுவே அவரிடம் உள்ள ஏழாவவது நற்பண்பு.

ஃஃஃ.

நான்கு ஆழமான தியான நிலைகளை - இம்மையில் மேலான மனதின் அடையாளமான பேரின்ப தியானங்கள் - தேவையான போது, பிரச்சனை இல்லாமல், இடையூறு இல்லாமல் அடைய முடிகிர நிலைகள். இவை யாவை?

 மன்னரின் எல்லை புறக்கோட்டையில் உள்ளவர்கள் அனுபவிக்கவும், இன்புறவும், அவர்கள் வசதிக்காகவும், புறத்தில் உள்ளவர்களை தோற்கடிக்கவும் வேண்டிய அளவு வைக்கோற்போர், விறகுகட்டைகள், தண்ணீர் உள்ளது போல ஒரு மேன்மையான சீடர் புலன் இன்பங்களிலிருந்து விடுபட்டு, சாமர்த்தியமற்ற பண்புகளில் இருந்து விடுபட்டு முதல் ஜான நிலையில் நுழைகிறார்... இது அவருடைய மகிழ்ச்சிக்கும், துன்பநீங்குகைக்கும், வசதிக்குமேயாகும். இது அவருடைய மனவிடுதலைக்கு எடுத்துச் செல்லும்.

மேலும் கோட்டையில் அரிசி, வாற்கோதுமை ஆகியவை வேண்டிய அளவுக்கு இருப்பது போல ஒரு மேன்மையான சீடர் இரண்டாம் ஜான நிலையில் நுழைகிறார்... இது அவருடைய மகிழ்ச்சிக்கும், துன்பநீங்குகைக்கும், வசதிக்குமேயாகும். இது அவருடைய மனவிடுதலைக்கு எடுத்துச் செல்லும்.

மேலும் கோட்டையில் பலத்தரப்பட்ட உணவு வகைகள் - அதாவது எள்ளு, உளுந்து, பயிறு வகைகள் போன்றவை சேர்த்து வைத்திருப்பது போல ஒரு மேன்மையான சீடர் மூன்றாம் ஜான நிலையில் நுழைகிறார்... இது அவருடைய மகிழ்ச்சிக்கும், துன்பநீங்குகைக்கும், வசதிக்குமேயாகும். இது அவருடைய மனவிடுதலைக்கு எடுத்துச் செல்லும்.

மேலும் கோட்டையில் மருந்துகள் - நெய், வெண்ணைய், எண்ணைய், தேன், வெல்லப்பாகு, உப்பு போன்றவை ..சேமித்து வைத்திருப்பது போல ஒரு மேன்மையான சீடர் நான்காம் ஜான நிலையில் நுழைகிறார்... இது அவருடைய மகிழ்ச்சிக்கும், துன்பநீங்குகைக்கும், வசதிக்குமேயாகும். இது அவருடைய மனவிடுதலைக்கு எடுத்துச் செல்லும்.

ஒரு மேன்மையான சீடர், ஏழு நற்பண்புகளை கொண்டிருந்தால், நான்கு ஆழமான தியான நிலைகளை, தேவையான போது, பிரச்சனை இல்லாமல், இடையூறு இல்லாமல் அடைய முடிந்தால், அப்படிப்பட்டவரை மாறனால் வெல்ல முடியாதவர், அந்த தீயவனால் தோற்கடிக்கப்பட முடியாதவர் எனலாம்."

ஃஃஃ

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை