எண்ணங்களை சாந்தப்படுத்தல்

 



Vitakka saṇṭhāna sutta
Vitakka - எண்ணம், எண்ணுவது Santhana - சாந்தப்படுத்தல்
மஜ்ஜிம நிகாயம் MN 20

ஃஃஃ

நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் பூங்காவில் எழுந்தருளியிருந்தார். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரையாற்றினார். "துறவிகளே." - "அண்ணலே!" என்று துறவிகள் பதிலளித்தனர். 

"துறவிகளே, மேலான மனதை [1] நாடும் ஒரு துறவி அவ்வப்போது இந்த ஐந்து குறிகள் (நிமித்தங்கள்) மீது கவனம் செலுத்த வேண்டும். அந்த ஐந்து எவை?

i

ஒரு துறவி ஏதோ ஒரு குறியின் மீது கவனம் செலுத்தும் போது அதன் காரணமாக அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால், அவர் வேறு ஒரு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு [2] கவனத்தை செலுத்த வேண்டும். அவர் அவ்வாறு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு கவனம் செலுத்தும் போது காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

ஒரு தச்சர் அல்லது அவரது உதவியாளர், ஒரு பெரிய மரவாணியை (மரத்தாலாகிய ஆணி) ஒரு சிறிய மரவாணியைக் கொண்டு வெளியே எடுப்பதைப் போலவே... ஒரு துறவி சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு கவனம் செலுத்தும் போது...அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

ii

அவ்வாறு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு கவனம் செலுத்தியும், அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தொடர்ந்து தோன்றுமேயானால், அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளை இவ்வாறு கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்: 'உண்மையிலேயே, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் திறமையற்றவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் பழித்தற்குரியவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் துன்பத்தைத் தருவன.' [3] இவ்வாறு அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளை கூர்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

ஒரு கண்ணாடியின் முன் நின்று, அலங்காரம் செய்து, தங்களை அழகு படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு இளம் பெண்ணோ ஆணோ, தங்கள் கழுத்தில் பாம்பின் பிணம், அல்லது நாயின் பிணம், அல்லது மனிதப் பிணம் தொங்குவதைக் கண்டால், அவர்கள் அடையும் அதிர்ச்சி, அவமானம், அருவருப்பைப் போலவே...ஒரு துறவி அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது...அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

iii

அவ்வாறு அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தும், அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால், அந்த எண்ணங்களை மறக்கடித்துவிட வேண்டும். அவற்றிற்கு கவனம் செலுத்தக் கூடாது. இவ்வாறு அந்த எண்ணங்களை மறக்கடித்துவிட்டு அவற்றிற்கு கவனம் செலுத்தாமல் உள்ள போது காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

நல்ல கண்பார்வை உள்ள ஒருவர் தனது பார்வையில் வந்துள்ள உருவங்களைப் பார்க்க விரும்பாததால், தன் கண்களை மூடிக் கொள்வது போல அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொள்வது போல...ஒரு துறவி அந்த எண்ணங்களை மறக்கடித்துவிட்டு அவற்றிற்கு கவனம் செலுத்தாமல் இருக்கும் போது...அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

iv

அவ்வாறு அந்த எண்ணங்களை மறக்கடித்துவிட்டு அவற்றிற்கு கவனம் செலுத்தாமலிருந்தும், அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால், அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து, அதனை அடங்கச் செய்ய வேண்டும்[4]. இவ்வாறு அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து, அதனை அடங்கச் செய்யும் போது, காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

வேகமாக நடக்கும் ஒருவர், 'அட, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கின்றேன். மெதுவாக நடந்தால் என்ன?' என்று நினைக்கின்றார். எனவே, அவர் மெதுவாக நடக்கின்றார். பின் இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் மெதுவாக நடக்க வேண்டும். நின்றால் என்ன?' அவர் நிற்கின்றார். அடுத்து இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் நிற்க வேண்டும். உட்கார்ந்தால் என்ன?' எனவே உட்கார்கிறார். பின், 'ஏன் உட்காரவேண்டும், படுத்தால் என்ன?' என்று நினைக்கின்றார். எனவே படுத்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் கிளர்ச்சியான நிலையிலிருந்து படிப்படியாக, ஓய்வான நிலைக்குச் செல்கிறார். அது போலவே...ஒரு துறவி அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து, அதனை அடங்கச் செய்யும் போது...அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

v

அவ்வாறு அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து அதனை அடங்கச் செய்தும், அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால், பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் (மேல்வாய்ப் புறம்) அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு, மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி, அடக்கிவிடவேண்டும். இவ்வாறு பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு, மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி, அடக்கிவிட்ட பின் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

ஒரு பலசாலி பலவீனமானவனின் தலையை, அல்லது கழுத்தை அல்லது தோள்களைப் பற்றி, கட்டுப் படுத்தி அடக்கி விடுவது போலவே...ஒரு துறவி பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு, மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி, அடக்கிவிடும் போது...அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

ஃஃஃ

துறவிகளே, ஒரு துறவி ஏதோ ஒரு குறியின் மீது கவனம் செலுத்தும் போது அதன் காரணமாக அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால் அவர் வேறு ஒரு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு கவனத்தை செலுத்த வேண்டும்.... அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளை கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்......அந்த எண்ணங்களை மறக்கடித்துவிட்டு, அவற்றிற்கு கவனம் செலுத்தக் கூடாது.....அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து, அதனை அடங்கச் செய்ய வேண்டும்....பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு, மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி, அடக்கிவிடவேண்டும். .... (இதனால்) காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப்படுகிறது. 

இப்படிப்பட்ட துறவி தன் என்னப்போக்குகளின் எஜமானர் என்று அழைக்கப்படுகிறார். தான் விரும்பும் எண்ணங்களை மட்டுமே எண்ணுகிறார், அவர் விருப்பப்படாத எண்ணங்களை நினைப்பதில்லை. அவர் வேட்கையை முறித்தவர், தளைகளை எறிந்தவர். விவேகத்துடன் தன் செருக்கிணை ஊடுருவியதனால், துக்கத்தை முடித்தவர்."

இவ்வாறு பகவர் போதித்தார். பகவர் சொன்னதைக் கேட்டு பிக்குகள் திருப்தி அடைந்தனர், மகிழ்ந்தனர்.

ஃஃஃ

குறிப்புகள்:

[1] மேலான மனம் (அதிச்சித்தம் adhicitta) என்பது எட்டு ஜான (ஆழ் தியான) நிலைகளை அடைவதற்கு பயிற்சி செய்வோரை குறிக்கும். 'மேலான மனம்' என்று குறிப்பிடுவதற்கான காரணம் பத்து குற்றங்களை நீக்கிய சாதாரண (தூய) மனதை விட மென்மையானது என்பதால். 

இந்த ஐந்து குறிகள் (நிமித்தங்கள்) தீய எண்ணங்களை நீக்கும் காரிய சாத்தியமான அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தீய எண்ணங்கள் தொடர்ந்து இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் தியான பொருள் மீது கவனம் இருக்க வேண்டும். 

சாதாரண (தூய) மனம் நீக்கிய பத்து குற்றங்கள்:


தீவினை என்பது யாது என வினவின்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் ...
மணிமேகலை 30,64-71

[2] தீய காம எண்ணங்கள் உயிர்கள் மீது செலுத்தப்பட்டிருந்தால், அதன் "மாற்றுக் குறி" அசூப தியானமாகும், அதாவது உடலின் அசுத்த தன்மையை பிரதிபலிப்பது;

தீய ஆசைகள் பொருட்கள் மீது செலுத்தப்பட்டிருந்தால், அதன் "மாற்றுக் குறி" அப்பொருட்களின் நிலையற்ற தன்மையை பற்றி பிரதிபலிப்பது;

தீய வெறுப்பான எண்ணங்கள் உயிர்கள் மீது செலுத்தப்பட்டிருந்தால், அதன் "மாற்றுக் குறி" அன்பு தியானமாகும், அதாவது அனைத்து உயிர்கட்கும் அன்பை செலுத்துவது;

தீய வெறுப்பான எண்ணங்கள் பொருட்கள் மீது செலுத்தப்பட்டிருந்தால், அதன் "மாற்றுக் குறி" அப்பொருட்கள் நான்கு பூதங்களால் ஆனவை என்று நினைபது;

மயக்கம் (குழப்பம்) தொடர்புடைய எண்ணங்கள் இருந்தால் அதற்கு பரிகாரம் ஒரு ஆசிரியருடன் இருந்து, அவரிடம் தர்மத்தை படித்து, அதன் பொருளை உணர்ந்து, தம்மம் கேட்டு, காரணங்கள் பற்றி ஆராய்ந்து பார்ப்பது.


இந்த மாற்று குறிகளைப் பற்றி மணிமேகலையில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது

யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியென
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் உணர்வாற் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கென்று..
மணிமேகலை 30,252-260

"சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக"

சுருதியாவது அறவுரைகேட்டல்,
சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல்.
பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல்.
தரிசனையாவது உண்மை தெளிதல்.
(ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை)

[3] மனதில் தோன்றிய தீய எண்ணங்கள் தகுதியற்றவை என்று நினைக்கும் போது ஒரு வெட்க உணர்வு உண்டாகும். அதுவே ஹிரீ.

தகாத எண்ணங்களின் ஆபத்தான விளைவுகளை நினைக்கும் போது மனதில் ஒரு அச்சம் உண்டாகும். ஆதுவே ஒத்தாப்ப.

திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப என்ற இரு பண்புகள் சேர்ந்து காணப்படுகின்றன.

ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது. 

ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதன் விளைவுகளை நினைத்து அஞ்சுவது.

[4] "எண்ணங்கள் தோன்றுவதற்கான காரணத்தை நிறுத்துவது" 

அதாவது ஒரு தீய எண்ணம் மனதில் தோன்றும் போது இவ்வாறு விசாரிக்க வேண்டும்: "அது தோன்றக் காரணம் என்ன? அந்த காரணத்துக்கான காரணம் என்ன?" ... அவ்வாறு விசாரிக்கும் போது அந்த தீய எண்ணத்தின் சக்தி குறைகிறது. அந்த திறமையற்ற என்ன போக்கு இறுதியில் மறைகிறது.

ஃஃஃ

Source: The Middle Length Discources of the Buddha. A translation of the Majjima Nikaya
by Bhikku Nanamoli and Bhikku Bodhi
Wisdom Publications

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை