சவித்தருடன்
சவித்தருடன்
3.21 அங்குத்தற நிகாயம்
பிற மதத் தலைவர்கள் ஞானம் அடைந்தவர்களா, இல்லையா என்று சுபத்திரர் கேட்ட கேள்விக்கு புத்தர்,
'... எந்த ஒரு அறநெறியில் ..மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறியப்படுகிறதோ அங்கு முதல்... இரண்டாம்… மூன்றாம்… நான்காம் ஞான நிலையை அடைந்தவர்களைக் காண முடியும்', என்றார். (மஹா பரிநிப்பாண சூத்தம் DN16)
எனவே அட்டாங்க மார்க்கம் மட்டுமே துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். ஆனால் அந்த பாதையில் எவ்வாறான பயணம் மேற்கொள்கிறோம் என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக மூன்று பேர் நெடுஞ்சாலையில் செல்கின்றனர். ஒருவர் மாருதி வண்டியிலும், மற்றொருவர் மஹிந்திரா வண்டியிலும், மூன்றாம் நபர் டாடா வண்டியிள் செல்வது போலத் தான். அவர்கள் மூவரும் வெவ்வேறு 'மாடல்' வண்டியில் சென்றாலும் அவை மூன்றுமே போக வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
அதுபோலவே அட்டாங்க மார்க்கத்தை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம் என்பதை இந்த சுத்தம் எடுத்துக்காட்டுகிறது.
சவித்தருடன்
3.21 அங்குத்தற நிகாயம்
நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் பூங்காவில் எழுந்தருளியிருந்தார்.
அப்போது போற்றுதற்குரிய சபித்தரும் போற்றுதற்குரிய மஹா கொத்திதரும் போற்றுதற்குரிய சாரிபுத்தரிடம் சென்று அவரிடம் நல விசாரணை பரிமாற்றம் செய்த பின்னர் ஒரு பக்கமாக அமர்ந்தனர்.
சாரிபுத்திரர் சபித்தரிடம் கேட்டார்: "சபித்தரே மூன்று வகையான மக்களை உலகில் காணலாம். எப்படிப்பட்ட மூவர்?
தன்னுடலை சாட்சியாக கொண்டு ஞானம் அடைந்தவர். (Kāyasakkhī, kāya உடல் - sakkhī சாட்சி a bodily witness. உடலை தியான பொருளாகக் கொண்டு ஆழமான தியான நிலைகளை அடைந்து ஞானம் பெற்றவர்கள். உதாரணமாக மகாமொக்களானர். இப்படிப்பட்டவர்களுக்கு தியானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.)
அறி ஞர். மெய்யறிவு வளர்த்து ஞானம் அடைந்தவர். (diṭṭhippatto, diṭṭhi காட்சி patto கிடைத்தல், attained through understanding. நிலையாமை போன்ற கருத்துக்களை பிரதிபலித்து, மெய்யுணர்வு வளர்த்து, ஞானம் பெற்றவர்கள். உதாரணமாக சாரிபுத்திரர்)
நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவர். (saddhāvimutto, saddhā நம்பிக்கை vimutto விடுதலை, freed by faith. புத்தர் தம்ம சங்கத்தின் மீது ஆழமான நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவர்கள். உதாரணமாக ஆனந்தர்)
இம்மூன்று வகையினருள் நீங்கள் யாரை சிறந்தவரெனன கருதுகிறீர்கள்?"
"சாரிபுத்திரரே, இந்த மூவருள் நான் நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவரை சிறந்தவர் என்று கருதுகிறேன். எதனால்? அவருக்கு நம்பிக்கை தன்மை மேலோங்கி இருப்பதால்."
சாரிபுத்திரர் மஹா கொத்திதரிடம் கேட்டார்: "கொத்திதரே மூன்று வகையான மக்களை உலகில் காணலாம். எப்படிப்பட்ட மூவர்?.......இம்மூன்று வகையினருள் நீங்கள் யாரை சிறந்தவரெனன கருதுகிறீர்கள்?"
"சாரிபுத்திரரே, இந்த மூவருள் நான் தன்னுடலை சாட்சியாக கொண்டு ஞானம் அடைந்தவரை சிறந்தவர் என்று கருதுகிறேன். எதனால்? அவருக்கு சமாதி அடையும் தன்மை மேலோங்கி இருப்பதால்."
பின் மஹா கொத்திதர் சாரிபுத்திரரிடம் கேட்டார்: "சாரிபுத்திரரே, மூன்று வகையான மக்களை உலகில் காணலாம். எப்படிப்பட்ட மூவர்?.......இம்மூன்று வகையினருள் நீங்கள் யாரை சிறந்தவரெனன கருதுகிறீர்கள்?"
"கொத்திதரே, இந்த மூவருள் நான் மெய்யறிவு வளர்த்து ஞானம் அடைந்தவரை சிறந்தவர் என்று கருதுகிறேன். எதனால்? அவரது மெய்யறிவு அடையும் தன்மை மேலோங்கி இருப்பதால்."
சாரிபுத்திரர் சபித்தரிடமும் மஹா கொத்திதரிடமும் இவ்வாறு கூறினார்: "நாம் ஒவ்வொருவரும் நம் இலட்சியப்படி, சிறந்தவர் யார் என்பதை விளக்கினோம். வாருங்கள், பகவரிடம் சென்று இதனை கேட்போம். அவர் விளக்கத்தின்படி அதனை மனதில் வைத்துக் கொள்வோம்."
"சரி நண்பரே," என்று பதில் அளித்தனர் போற்றுதற்குரிய சபித்தரும் போற்றுதற்குரிய மஹா கொத்திதரும். பின் மூவரும் பகவரிடம் சென்று அவைரைத் தொழுது ஒரு புரமாக அமர்ந்தனர். சாரிபுத்திரர் தாங்கள் பேசியது அனைத்தையும் பகவரிடம் கூறினார்."
பகவர் கூறினார்: "இந்த மூன்று விதமான மனிதர்ருள் ஒருவர் சிறந்தவர்,' என்று உறுதியாக சொல்வது எளிதானதல்ல சாரிபுத்திரரே.
(1)
ஏனென்றால், நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவர் அருகராக (வீடுபேற்றின் இறுதி நிலையடைந்தவர் - இவர் பிறவி எடுக்கமாட்டார்) பயிற்சி செய்து கொண்டிருக்கலாம். மெய்யறிவு வளர்ப்பவரும், தன்னுடலை சாட்சியாக கொண்டு தியானத்தில் முயற்சி செய்பவரும் அநாகாமி (திரும்பி வராதவர்) அல்லது சகதாகாமி (ஒரு முறை திரும்பிவருபவர்) நிலைகளை அடைந்திருக்கலாம். 'இந்த மூன்று விதமான மனிதர்ருள் ஒருவர் சிறந்தவர்,' என்று உறுதியாக சொல்வது எளிதானதல்ல சாரிபுத்திரரே."
(2)
தன்னுடலை சாட்சியாக கொண்டு தியானத்தில் முயற்சி செய்பவர் அருகராக பயிற்சி செய்து கொண்டிருக்கலாம். நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவரும், மெய்யறிவு வளர்ப்பவரும், அநாகாமி அல்லது சகதாகாமி நிலைகளை அடைந்திருக்கலாம். 'இந்த மூன்று விதமான மனிதர்ருள் ஒருவர் சிறந்தவர்,' என்று உறுதியாக சொல்வது எளிதானதல்ல சாரிபுத்திரரே."
(3)
மெய்யறிவு வளர்ப்பவர் அருகராக பயிற்சி செய்து கொண்டிருக்கலாம். நம்பிக்கையின் காரணமாக ஞானம் பெற்றவரும், தன்னுடலை சாட்சியாக கொண்டு தியானத்தில் முயற்சி செய்பவர், அநாகாமி அல்லது சகதாகாமி நிலைகளை அடைந்திருக்கலாம். 'இந்த மூன்று விதமான மனிதர்ருள் ஒருவர் சிறந்தவர்,' என்று உறுதியாக சொல்வது எளிதானதல்ல சாரிபுத்திரரே."
ஃஃஃ
குறிப்பு: இந்த மூன்று வழிகளில் ஒன்று நமக்கு பிடித்திருந்தால் மற்ற இரண்டையும் ஒதுக்கி விடலாம் என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக நம்பிக்கை பிறக்க வேண்டும் என்றால் ஓரளவுக்கு மெய்யறிவும் வேண்டும். பௌத்தத்தில் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல. ஓரளவுக்கு பிரதிபலித்து விசாரித்து பின்னர் வருவதுதான் நம்பிக்கை. அதற்கு விவேகமும் மெய்யறிவும் தேவை. விவேகம் வேண்டுமென்றால் ஓரளவுக்கு மனம் அமைதி நிலையில் இருக்க வேண்டும். எனவே சமாதி வளர்த்துக் கொள்வதும் அவசியம்
Comments
Post a Comment