Jan 21 விமான வத்து கதைகள்

 Jan 21:  பாந்தே Sasanawanse போதனையின் சாராம்சம், புத்தர் மீது நம்பிக்கை இருந்தால் அது  நல் விளைவுகளையும், பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதே.


திரிபிடத்தின் விமான வத்து புத்தகத்திலிருந்து பல சம்பவங்களை  எடுத்துக்காட்டினார்.


ஃஃஃ


விமான வத்து 

5.6 கரணிய சுத்தம்

https://suttafriends dot org/sutta/vv5-6/


மொக்களானர் சொர்க்கத்திற்கு சென்று ஒரு தேவதையின் அழகிய அரண்மனையைப் பார்த்து வியந்து புகழ்ந்தார். அப்படிப்பட்ட மாளிகை கிடைப்பதற்கு தான் என்ன புண்ணிய காரியங்களை செய்தார் என்று கேட்க,


தேவதை:

 "மெய்யறிவு உடையோர் தங்கள் நலம் கருதி புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். பகவான் புத்தர் சரியான பாதையை தொடர்ந்து பயணத்தை முடித்தவர். அப்படிப்பட்ட புத்தர்களுக்கு தானம் தருவது பெரும் பலனைத் தரும். என் அதிர்ஷ்டவசம், ஒரு நாள் புத்தர் வனத்திலிருந்து வெளியே வந்து எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் என் மனதில் நம்பிக்கை தோன்றியது. அதன் விளைவாக இந்த தாவதிம்ச சொர்க்கத்துக்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த புண்ணியக் காரணத்தினால் நான் ஒரு அழகிய தேவதையாக பிறந்து, எல்லா சுக போகங்களையும் அனுபவிக்கின்றேன்.


போற்றுதற்குரிய பாந்தே அவர்களே, எல்லா திசைகளிலும் ஒளிரும் என்னுடைய அழகிய உடல் தோன்ற, நான் செய்த அந்த நற்செயலே காரணம்."


ஃஃஃ


விமான வத்து 

7.9  மட்டக்குண்டலியின் அரண்மனை

https://suttafriends dot org/sutta/vv7-9


ஒரு பிராமணர் தனது மறைந்த மகனின் கல்லறையின் அருகே அழுது கொண்டிருந்தார். அப்பொது ஒரு இளைஞரை போல மாறுவேடங்கொண்டு, வருந்திக் கொண்டிருந்த ஒரு தேவரைக் கண்டார்.


பிராமணர்

 "குழந்தையே,  மிகவும் அழகான தோற்றம் கொண்டுள்ள நீ, எதற்காக அழுகிறாய்?"


தேவன்

"தங்கத்திலான ஒரு தேர் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு சக்கரங்கள் இல்லை. அதனால் தான் நான் மிகவும் சோகமாக உள்ளேன்."


பிராமணர்

"அதற்கென்ன, நான் தங்கத்தினாலும் மாணிக்கங்களாலும் செய்யப்பட்ட சக்கரங்களை உனக்கு தருவதற்கு தயாராக இருக்கிறேன்."


தேவன்

"அதோ சந்திரனும் சூரியனும் தெரிகின்றன. அவை இரண்டும் என்னுடைய தேருக்கு சக்கரங்களாக இருந்தால் நன்றாக இருக்கும்."


பிராமணர்

"உனக்கு பைத்தியமோ?  கிடைக்க முடியாத ஒன்றை விரும்புகிறாய். சோகத்துடனேயே நீ மரணம் அடைவாய். ஏனென்றால் சந்திரனும் சூரியனும் உன் தேரின் சக்கரங்களாக ஒருபோதும் இருக்க முடியாது."


தேவன்

"அட, ஏன் அப்படி சொல்லி விட்டீர்கள்? சந்திரனும் சூரியனும் கண்ணுக்குத் தெரிகின்றன. அவை ஆகாயத்தில் செல்லும் பாதையும் தெரிகின்றது. ஆனால் ஒருவர் மரணம் அடைந்த பின்னர் அவர்களை நாம் பார்க்க முடியாது. யார் இங்கே முட்டாள்? நீரா, நானா? நீர் காண முடியாத மறைந்த மகனை நினைத்து அழுகின்றீர்.  நான் காணக்கூடியதை நினைத்துத் தானே அழுகின்றேன்?"


பிராமணர்

"நீ சொல்வது உண்மையே!! நம் இருவருள் நானே பெரிய முட்டாள்! நிலவை கேட்கும் ஒரு குழந்தையைப் போல  நானும் இறந்து போன என் மகன் திரும்ப வரமாட்டானா என்று நினைத்து அழுகின்றேன்.

என் உள்ளத்தை தைத்திருந்த அம்பினை எடுத்து விட்டாய். நான் அமைதியாகி விட்டேன். இனிமேல் புலம்ப மாட்டேன்.

  நீ யார்? ஒரு கடவுளா? அல்லது சக்கரா அல்லது யாருடைய மகன் என்று சொல்லவும்." 


தேவன்

"நீங்கள் யாருக்காக அழுது புலம்புகின்றீர்களோ, அந்த மகன் நானே. நற்காரியம் செய்ததால் தாவதிம்ச சொர்க்கத்தில் ஒரு தேவனாக பிறந்துள்ளேன்."


பிராமணர்

"நீ ஒருபோதும் தானம் செய்ததில்லையே! ஒருபோதும் ஒழுக்கங்களை கடைப்பிடித்ததில்லையே! அப்படி என்ன காரியம் செய்தாய், சொர்க்கம் செல்வதற்கு?"


தேவன்

"உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் நோயினால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு நமது வீட்டின் வெளியே ஒரு படுக்கையில் படுத்திருந்தேன். அப்போது பகவான் புக்தர் அந்த பக்கம் வந்தார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  அவரைப் பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை தோன்றியது. உடனடியாக அவரை வணங்கினேன். நான் செய்த அந்த நற்செயல் என்னை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றது."


பிராமணர்

"அருமை! அருமை! புத்தரை வணங்கிய ஒரே செயலின் காரணமாக இப்படி ஒரு நல் விளைவினை அனுபவிக்கின்றீர். தாமதம் இன்றி, இன்றே நான் பகவான் புத்தர்  மீது நம்பிக்கை கொள்கிறேன். அவரிடம் சரண் செல்கின்றேன்."


தேவன்

"நல்லது. அதுவே நீங்கள் செய்ய வேண்டிய காரியம். இன்றிலிருந்து புத்தரிடம், தர்மத்திடன், சங்கத்திடம் நம்பிக்கை உள்ள மனதுடன் சரண் செல்ல வேண்டும். ஐந்து ஒழுக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.


உயிர்களைக் கொள்வதை நிறுத்துங்கள்.  ஒரு போதும் திருடக்கூடாது. மது அருந்துவதையும், பொய் பேசுவதையும், தவறான பாலியல் உறவுகளையும் தவிர்க்க வேண்டும்."


பிராமணர்

"தேவரே, நீங்கள் என்னுடைய நலனில் மிக்க அக்கறை கொண்டுள்ளீர்கள். எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றீர்கள். இன்றிலிருந்து நீங்கள் என்னுடைய ஆசான். உங்கள் சொல்படி நான் நடந்து கொள்வேன்.  ஒரு நம்பிக்கையான மனதுடன் புத்தரிடம், தர்மத்திடம், சங்கத்திடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். உயிர்களைக் கொல்வதையும், திருடுவதையும், மது அருந்துவதையும், பொய் பேசுவதையும், தவறான பாலியல் உறவுகளையும் தவிர்ப்பேன்!"


ஃஃஃ


விமான வத்து 

5.1 தவளைத் தேவர் அரண்மனை

https://suttafriends dot org/sutta/vv5-1/


புத்தர்

அன்புடைய தேவனே! நீ மிகவும் வலிமை வாய்ந்தவன், பல இருத்தி சக்திகளை கொண்டவன். உன்னுடைய அழகிய உடல் பல திசைகளிலும் ஒளிருகிறது. இப்போது என்னுடைய தாளை வணங்குகிறாய். நீ யார்?"


தேவன்

"என் முன் பிறவியில் ஒரு ஏரியின் அருகில் ஒரு தவளையாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் உங்கள் போதனையை கேட்டுக் கொண்டிருந்தேன். அச்சமயம் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனும் உங்கள் போதனையை கேட்டுக் கொண்டிருக்கையில் என்னை தெரியாமல் கொன்று விட்டான்.


உங்கள் குரலை கேட்டதனால் ஒரு கணம் என் மனம் மகிழ்ந்தது! அதன் விளைவாக இப்போது பாருங்கள் என்னுடைய இருத்தி சக்திகளும், புகழும், அழகிய உடலும்! அந்த ஒரு சிறு புண்ணிய காரணத்தினால் வந்த நல்விளைவுகள் இவை. ஓ! கௌதம புத்தரே, உங்கள் போதனைகளை நீண்ட நாட்கள் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் துக்கத்திலிருந்து ஒரு நாள் விடுபடுவார்கள்."


ஃஃஃ

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை