Jan 14 போதனை Cūḷanikāsutta
Jan 14, 2024 பாந்தே Sasanawanse விவரித்த சுத்தம்.
AN3.80 Cūḷanikāsutta
https://suttacentral dot net/an3.80/
(சுருக்கம் மட்டும்)
இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். ஒருமுறை போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது ஆனந்தர் பகவரியிடம், "அண்ணலே, 'ஆனந்தா, சிக்கி புத்தரின் சீடரான அபிபு, பிரம்மலோகத்தில் நின்று கொண்டிருக்கையில் ஆயிரம் உலகங்களுக்கு அவருடைய குரலை செலுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார்,' என்று நீங்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்."
"அப்படியென்றால், முழுமையாக ஞானம் பெற்ற பகவர் எவ்வளவு தூரம் அவருடைய குரலை செலுத்த முடியும்?"
"அவர் ஒரு சீடர் ஆனந்தா, தாதாகதர்களை அளவிட முடியாது."
ஆனந்தருக்கு அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை, மூன்றாம் முறை அதே கேள்வியை திரும்பக் கேட்டார்.
"ஆயிரம் மடங்கு சிறிய மண்டலம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா?
அதில் ஆயிரம் நிலவுகளும், ஆயிரம் கதிரவனும், ஆயிரம் மேரு மலைகளும், ஆயிரம் இந்திய கண்டங்களும்.... ஆயிரம் பிரம்மலோகங்களும் உள்ளன.
அப்படிப்பட்ட சிறிய மண்டலங்கள் அடங்கிய 10 லட்சம் மடங்கு அளவிலான உலகங்களைக் கொண்ட நடுத்தர மண்டலங்கள் உள்ளது.
அப்படிப்பட்ட நடுத்தர மண்டலங்கள் அடங்கிய 100 கோடி மடங்கு அளவிலான உலகங்களைக் கொண்ட பெரிய மண்டலங்கள் உள்ளன.
பகவர் விரும்பினால் தனது குரலை அப்படிப்பட்ட பெரிய மண்டலங்களின் எல்லைக்கும் அனுப்ப முடியும்."
ஆனந்தர் கேட்கிறார் "ஆனால், பாந்தே, புத்தர் இவ்வளவு பெரிய மண்டலம் முழுவதிலும் அல்லது அவர் விரும்பும் வரையில் தனது குரலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?"
“ஆனந்தா, ஒரு ததாகதர் ஒளியை முதலில் அந்த பெரிய மண்டலத்திற்கு வியாபித்திருக்கிறார். அந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அந்த ஒளியைக் காணும்போது, தனது குரலை கேட்கச் செய்கிரார். இந்த வழியில், ஆனந்தா, ஒரு ததாகதர் தனது குரலை அந்தப் பெரிய மண்டலம் முழுவதிலும் - அல்லது அவர் விரும்பும் வரையில் தெரியப்படுத்துகிறார்.
(மேலும் பாலி மொழியில் அந்த வார்த்தை “விஞ்ஞாபேசி” என்ற வார்த்தையின் விளக்கம் “குரல் மட்டுமல்ல போதனைகளும்.
குறிப்பு தந்த பாந்தே சமணர் அரிய பிரம்மா அவர்களுக்கு நன்றி)
இதைக் கேட்ட ஆனந்தர், மகிழ்ந்தார் வியந்தார்.
"இவ்வளவு பலமும் மகிமையும் கொண்ட ஆசிரியர் எனக்கு இருப்பது என்னுடைய அதிர்ஷ்டவசம்." என்றார் ஆனந்தர்.
இதைக் கேட்ட அருகில் இருந்த போற்றுதற்குரிய உதாயியர்
"உங்கள் ஆசிரியர் மகிமை பெற்றிருந்தால், அதனால் உங்களுக்கு என்ன, ஆனந்தரே?" என்றார்.
அதற்கு பகவர் போற்றுதற்குரிய உதாயியரிடம், 'அப்படிச் சொல்லாதீர் உதாயியரே, அப்படிச் சொல்லாதீர்.
ஒருவேளை தனது பேராசையை முழுமையாக கைவிடாமல் ஆனந்தர் இறப்பாராயின் (அச்சமயம் ஆனந்தர் அருகராகாத நிலை) ஏழு தலைமுறைகளுக்கு அவர் தேவரின் தலைவராகவும், ஏழு தலைமுறைகளுக்கு இந்திய கண்டத்தின் அரசராகவும் இருப்பார் (இந்தப் பதவிகள் சாதாரணமாக கிடைப்பவை அல்ல). இது பகவர் மீது உள்ள அவரது நம்பிக்கையின் காரணமாக வரும் விளைவுகள். ஆனால் ஆனந்தர் இந்த வாழ்க்கையிலேயே முழுமையான ஞானம் பெற்றிடுவார் (எனவே மறுபிறப்பு எடுக்க மாட்டார்).'.
ஃஃஃ
பாந்தே அறிவுரை:
புத்தானுசதி பாவனை
பகவான் புத்தர் மீது ஆழ்ந்த நம்பிக்கையோடு அவரது பண்புகளை தினசரி நினைவு கூர்ந்தால், அதனால் நல்ல விளைவுகள் கிடைக்கும். ஆழ்ந்த சமாதி நிலைக்கும் மனதை எடுத்துச் செல்லும்.
Comments
Post a Comment