மனித பிறவி ஒரு மங்களம்



மகா போதி சொசைட்டி லதாக், தலைமை பிக்குவான போற்றுதற்குரிய சங்கசேனா பாந்தே அவர்களின் பெங்களூரு விஜயம் தம்ம உரை தொகுப்பு.

"புத்தரின் திருவடிகளை வணங்குகிறேன், (மறைந்த) படாபாந்தே அவர்களின் திருவடிகளை வணங்குகிறேன், மேடையில் இருக்கும் சங்கத்தினருக்கும், இந்த அழகிய  மண்டபத்தில் கூடியிருக்கும் சாமநேரர், அனகாரிகர், உபாசக, உபாசிகர்களுக்கு எனது காலை வணக்கம். எனது உள்ள பூர்வமான அன்பை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இந்த  நிலையற்ற, நிச்சயமற்ற, உறுதியற்ற,  மாற்றம் மிகு உலகில் நாம் இந்த அழகிய மண்டபத்தில் மற்றும்  ஒரு நாள் கூடி இருப்பது, ஒரு மங்களமான விஷயம்.

பொதுவாக வாழ்க்கையில் செய்யும் செய்கைகளை ஒதுக்கிவிட்டு, நாம் இந்த தியான மண்டபத்தில் கூடியிருக்கின்றோம். தகுந்த நேரத்தில் தர்ம உரை கேட்பதும், தகுந்த நேரத்தில் தர்மத்தைப் பற்றி கலந்து உரையாடுவதும் ஒரு மங்களம்.

  நாம் அனைவரும் மங்களங்களை தேடுகிறோம், அல்லவா? மகிழ்ச்சியை தேடுகிறோம். நல்ல உறவுகளை, நல் உடல் நலத்தை, செல்வத்தை, அழகிய வாழ்க்கையை தேடுகிறோம். ஆனால் இவற்றை விரும்பினால் மட்டும் கிடைத்துவிடாது. 

எங்கிருந்து அந்த உண்மையான, மேலான மங்கலங்கள் வருகின்றன, எங்கிருந்து துன்பங்களும் வருகின்றன - பயம், கவலை, வருத்தம், அழுத்தம் போன்றவை, என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை நாம் காலையிலிருந்து மாலை வரை, பிறந்ததிலிருந்து மறையும் வரை அனுபவிக்கின்றோம். இவை எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன எதன் காரணமாக வந்தன என்பதை நாம் அறிவதில்லை.

 ஆக நாம் மங்கலங்களை தேடினாலும் அனுபவிப்பதெல்லாம் துன்பமாகவே தோன்றுகிறது. இது ஒரு துயரநிலை. 

ஆகவே இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதென்றால் இது போன்ற ஒரு விகாரைக்கு, ஒரு தியான மண்டபத்திற்கு ஆன்மீக ஆசிரியர்களை பார்ப்பதற்கு வர வேண்டும். இவற்றையெல்லாம் நமது பல்கலைக்கழகங்களில் கற்றுத் தருவதில்லை.    பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் உலகாய விஷயங்களை மட்டுமே கற்றுத் தருகின்றன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை, வேலை  கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த மட்டுமே கற்பிக்கின்றன.  மனதைப் பற்றி, உள்ளத்தைப் பற்றி, நம் அக வாழ்க்கை பற்றி, மனநிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை.

 ஆனால் எப்படி மேலும் மகிழ்ச்சி அடைவது, மேலும் அமைதி பெறுவது?  மங்கலங்கள் பொருட்களிலிருந்து கிடைப்பதில்லை. நீங்கள் அனைவரும் மொபைல் தொலைபேசி வைத்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு 1ஜி 2ஜி 3ஜி போதுவதில்லை. 5ஜி இப்போது வந்துவிட்டது ஆனால் இவை திருப்திப்படுத்துவது இல்லை.  முக்கியமான ஜி யை மறந்துவிட்டோம். அதுதான் குருஜி. இந்த 3ஜி 4ஜி எல்லாம் துன்பத்துக்கு தான் கொண்டு செல்லும். கோகோ கோலா, பெப்சி கோலா எல்லாம் சர்க்கரை வியாதி தான் தரும்.

இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இங்கே நான் முதலில் இந்திய ராணுவ வேலையை விட்டு, 1977-ல் வந்த போது மகிழ்ச்சியாக  இருந்தேன்.  ஆனாலும் எனக்கு தர்மத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. இப்போது வயதாக வயதாக மேலும் ஆராய்ச்சி செய்ய... ஆராய்ச்சி என்றால் அமைதி எங்கு இருந்து வருகிறது, மங்களங்கள் எங்கிருந்து வருகிறது, துன்பம் எங்கிருந்து வருகிறது என்பனவற்றையெல்லாம் பிரதிபலித்து பார்க்கும் போது, விஷயங்கள் தெளிவாகின்றன. எனவே 8 ஆண்டுகளுக்கு பிறகு நான் இங்கு பெங்களூரு மீண்டும் வருவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

உங்களுக்கும் அதுதானே தேவைப்படுகிறது? எனவே மகிழ்ச்சியை, மங்களங்களை இங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். யார் தடுக்கின்றார்கள்? நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்கு, உங்கள் மகிழ்ச்சியை தடுப்பதற்கு இங்கு யாரும் இல்லை.  இருந்தும் உங்களில் சிலர் இந்நேரத்தில், இந்த இடத்தில், துன்பத்தில் இருப்பீர்கள். அதற்கு காரணம் உங்களுக்கு எப்படி ஒரு தம்ம மண்டபத்திற்கு வருவது, எப்படி உட்காருவது, தம்ம உரையை எப்படி கேட்பது  என்று தெரியவில்லை.  நம்பிக்கையின் காரணமாக இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் உடலை கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், மனம் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறது.  கொக்ககோலா பெப்சிகோலா பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மற்ற கவலைகள். 'என்னை இப்படி பேசிவிட்டாலன், நாளைக்கு அவனை கவனித்துக் கொள்ள வேண்டும்', போன்ற எண்ணங்கள்.

எனவே உங்கள் மனதை இங்கு கொண்டு வாருங்கள். இந்நேரம், இந்த இடம். அழகிய தம்ம மண்டபத்தை இளம் துரவிகள் மிகவும் அழகாக, பூக்கள் கொண்டு தோரணம் கட்டி இருக்கின்றார்கள்.  மன கவனத்துடன், அக்கறையுடன், மகிழ்ச்சியாக அலங்கரித்து இருக்கின்றார்கள் - இங்கு வருபவர்களின் மகிழ்ச்சிக்காக.  இவ்விடத்துடன் இந்நேரத்துடன் மனம் ஒன்று படட்டும்.  முதலில் ஒரு நொடி அமைதி கிடைத்தால் அதுவே பெரிய விஷயம். அந்த ஒரு நொடி இரண்டு நொடி ஆகலாம், நான்கு நொடிகள் ஆகலாம். படிப்படியாக இறுதியில் 24 மணி நேரமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். சத்தா (saddha), அதாவது நம்பிக்கை பிறக்க வேண்டும்.  மற்ற விஷயங்களுக்கு, உலக விஷயங்களுக்கு நீங்கள் தரும் முயற்சியைவிட மனதில் அமைதியைத் தேடுவதற்கு முயல வேண்டும். பொருட்களை சேகரிப்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள முயற்சியின்  காரணமாக உங்கள் வாழ்க்கையில் பொருட்களை சேகரித்துள்ளீர்கள்.  ஆனால், அதே முயற்சியை அமைதிக்கு, விடுதலைக்கு நீங்கள் தரவில்லை. ஸோதாபண்ணா, சகதாகாமி, அநாகாமி, அருகர் நிலைகளை அடைவதற்கான முயற்சிகளை நீங்கள் கொடுக்கவில்லை. 

 நண்பர்களே அவை, நடந்தது கடந்து போன விஷயம். தற்போது இங்கு இருக்கின்றீர்கள். இங்கு உள்ள நேரத்தை வீணாக்காமல் மற்றதெல்லாம் மறந்துவிட்டு, இந்த நிகழ் காலத்தை மட்டும் மறக்காமல்  இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பழையதை மறந்து விடுங்கள். எதிர்காலத்தை நினைக்க வேண்டாம். வாழ்க்கை இங்கே இப்போது இருக்கிறது. பழைய காலத்தில் வாழ முடியாது. எதிர்காலமும் ஒரு கனவு, அங்கேயும் வாழ முடியாது. மனித பிறவி என்பது ஒரு மங்கலம். ஆனால் நமக்கு வாழ்க்கை எப்படி நடத்துவது என்பது தெரிவதில்லை. அது ஒரு கலை. வாழ்தல் ஒரு கலை.

பழையதை நினைத்து, வருங்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு, வாழ்க்கையை வாழ மறந்து விடுகிறோம். நிகழ்காலத்தை மறந்து விடுகிறோம். 

இந்த குறுகிய வாழ்நாள் காலத்தை நாம் எப்படி சிறப்பாக வாழ்வது என்பதை பற்றி தான் நாம் கவலைப்பட வேண்டும். நமது வாழ்நாள் 100 வருடங்கள் கூட இல்லை. ஆனால் கோடி வருடங்களுக்கு முன்னால் நடந்ததை பற்றி கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கின்றோம். முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வாழ்க்கையை நடந்தும் கலை.  நாம் காலையில் கண்களைத் திறந்த உடன், நாளை எப்படி துவங்க வேண்டும், மாலையில, எப்படி நாளை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இங்கே, இப்போது, இந்த உடலும் மனதோடும், நண்பர்களோடும் உறவினர்களோடும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமைதியாக, நட்புணர்வோடு, அன்போடு, உள்ளதை பகிர்ந்து கொண்டு, மற்றவர்களை தீங்கு செய்யாமல், எப்படி சேர்ந்து விளையாடுவது, எப்படி தியானம் செய்வது, எப்படி உதவி செய்வது, எப்படி வாழ்வது, எப்படி பாடுவது, எப்படி ஆடுவது, வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

நான் மனித வாழ்வு நூறாண்டுகள் என்று சொன்னேன். உண்மையில் நூறாண்டுகள் கூட இல்லை. நமக்கு தூங்கும் நேரம், குழந்தை பருவம், நோய், சண்டை சச்சரவுகள் போன்றவற்றிற்கு செலவிடும் நேரம் போக மிஞ்சி இருப்பது சுமார் 30 வருடங்கள் மட்டுமே.

சிறுவயதில் பள்ளிக்கூட காலம் தூவங்கும் முன்னரே, முதலில் விகாரைக்கு வர வேண்டும். மகிழ்ச்சிக்கான, சமத்துவத்துக்கான, அன்பு, கருணை, விவேகம் இவற்றுக்கான பாதையை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழியை நன்றாக அறிந்த பின், நேரம் இருக்கும் போது மற்ற விஷயங்களிலும் ஈடுபடலாம், அதில் ஒன்றும் தவறில்லை. நல்வாழ்வு என்ற கலையை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சிக்கான, ஆரோக்கியத்திற்கான வழியை தெரிந்த பின், மற்ற விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்கலாம்.  நண்பர்களே, இங்கு இப்போது நீங்கள் இந்த மண்டபத்தில் இருக்கும் போது மற்ற விஷயங்களை மறந்து விடுங்கள். வீட்டைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அவை பாதுகாக்கப்படும். புத்தரின் போதனைகளில் முழுமையாக ஈடுபடுங்கள், கவனத்தை செலுத்துங்கள். தியானத்தை துவங்கும் முன் இந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். 

அனைவரும் சரியாக உட்கார வேண்டும் உணவகத்தில் அல்லது பூங்காவில் அல்லது திரையரங்கில்உட்காருவது போல் உட்கார க் கூடாது. இது ஒரு விகாரை. சரியாக உட்கார வேண்டும், சரியாக தர்மத்தை கேட்க வேண்டும். அப்போதுதான் தர்மத்தில் இருந்து உங்களுக்கு பயன் வரும். தலையை சொரிந்து கொண்டு, இதையும் அதையும் நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. சரியான கவனத்துடன் உட்கார வேண்டும்.

பகவான் புத்தர் 84,000 போதனைகளை போதித்ததாக கூறப்படுகிறது. அந்த போதனைகளை சுருக்கமாக சொல்வதென்றால் அவை சீலம், சமாதி, பஞ்ஞா  சம்பந்தப்பட்டவை. புத்தர் கற்பித்த பாதையில் நாம் தொடர வேண்டுமென்றால் நாம் முன் மணிகளை சரண் செல்ல வேண்டும், ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் மும்மணிகளிடம் சரண் செல்லும்போது  மன கவனத்துடன் செல்ல வேண்டும்.

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!

மேற்படி  சொல்லும்போது   ஒரு கடமைக்காக அல்லது ஒரு மந்திரத்தை போல் அவற்றை ஓதினால் அதைச் சரண் சென்றதாக சொல்ல முடியாது.

இந்த வார்த்தைகளின் பொருளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் இவற்றை ஓதினாலும் அவை பயனுள்ளதாக இருக்காது. மும்மணிகளிடமிருந்து  இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்காது.

மும்மணிகளிடம் சரண் செல்லும்போது நாம் இவ்வாறு நேர்ந்து கொள்கின்றோம்: 'நான் புத்தரை, தம்மத்தை, சங்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். நான் மகிழ்ச்சிக்கான பாதையை, விடுதலைக்கான பாதையை தொடர்வேன்', என்று நேர்ந்து கொள்கிறோம். அப்போது தான் நமக்கு  பாதுகாப்பு கிடைக்கும். இவ்வாறு நேர்ந்து கொள்ளும் போது நாம் தவறான பாதையில் செல்ல மாட்டோம். சொர்க்கத்துக்கு செல்லும் பாதையை விட்டுவிட்டு, தெரிந்தே, நரகத்துக்கு போகும் பாதையை தொடர மாட்டோம்.

அடுத்து சீலம், சமாதி, பஞ்ஞா.  இதுவே புத்தரின் போதனைகளின் சுருக்கம். சீலம்  என்பது தோட்டத்து மண்ணை சீர் செய்வது போல. சமாதி என்பது பூச்செடியை அந்த மண்ணில் நடுவது போல. பஞ்ஞா என்பது அந்த பூச்செடி பூத்து, காய் பிடித்து, பழம் தருவது போல.

அடுத்து தியான பயிற்சி செய்வோம் - சமாதி. சிறிது நேரம் தியானம் செய்தாலும்  சரியாக செய்யும் போது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 84,000 போதனைகளை கேட்க வேண்டிய அவசியமில்லை. மாணவர் தயாரானால் ஆசிரியர் தானாக வருவார் என்று சொல்வார்கள். எனவே சிறிது நேரம் செய்தாலும் சரியாக தியானம் செய்வோம். முழுமையான கவனத்துடன், அக்கறையுடன், நற்முயற்சியுடன் செய்ய வேண்டும். இவற்றை மனதில் வைத்துக்கொண்டு நாம் இப்போது தியானத்தை தொடங்கலாம்.

ஃஃஃ

குறிப்பு:
மும் மணிகளை வணங்குதல்

தானம் தாங்கிச் சீலம் தலைநின்று
புத்த தன்ம சங்கம் என்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின் 
(மணிமேகலை காதை 30 வரிகள் 1,3-5)

உரை: துரைசாமி பிள்ளை அவர்கள்
தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு;
சீலம் தலைநின்று - சீலங்களின் வழி நின்று;
புத்த தன்ம சங்கம் என்னும் முத்திறமணியை: புத்தன் தருமம் சங்கம் என்னும் கொள்கைகளான மூன்று தத்துவ மணிகளையும்;
மும்மையின் வணங்கி: மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி;
சரணாகதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புகலில்லாதவளாய், 

புத்தரிடம் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:

 புத்தர்  என்னுடைய ஆன்மீகத் தலைவர்.  என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறு யாரிடமும் நான் புகலிடம் செல்ல வேண்டியதில்லை. புத்தர் பெற்ற மெய்யறிவையும் விவேகத்தையும் நாமும் அடைய முயற்சி செய்வோம் என்று நேர்ந்துக் கொள்கின்றோம். அவரே நமது மேலான கல்யாண மித்திரர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

தர்மத்திடன் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:

புத்தரின்  போதனைகள் மட்டுமே எனது வழிகாட்டி.  நமது ஆன்மீக வளர்ச்சிக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

சங்கத்திடன் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:

சங்கத்தில் உள்ள ஆண், பெண் துறவிகள்  நமக்கு ஒழுக்கத்தின் தலையாய உதாரணமென நாம் கருதுகிறோம்.

ஃஃஃ

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்