நற் முயற்சி கொண்டு நன்மையில் வளர்வோம்


 


பெங்களூரு மகாபோதி சொசைட்டி புத்ததத்தா பாந்தே தம்ம உரையிலிருந்து தொகுத்தது.

"மும்மணிகளை வணங்குகிறேன்.
நமது ஆசிரியர் (மறைந்த) படாபாந்தேஜி அவர்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
நமது குரு, தலைமை பாந்தே கஷ்ஷப்ப பாந்தேஜி  அவர்களை வணங்குகிறேன்.
ஆனந்த பாந்தே, போற்றுதற்குரிய சங்கத்தினர் மற்றும் உபாசகர்  உபாசிகர்களுக்கு வணக்கம்.

புது வருடம் அனைவருக்கும் அமைதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கட்டும்.

இப்போது தியானம் செய்தீர்கள். அதனால் மனம் அமைதி பெற்றிருக்கும். 
அதன் முன்னால் (திரிபிடகத்திலிருந்து) ஓதினோம். அதன் காரணமாக மனதில் நம்பிக்கை (சத்தா)  பிறந்திருக்கும். மனம் வலுவுற்றிருக்கும். 
இப்போது தர்ம உரை கேட்க இருக்கின்றீர்கள். இதன் காரணமாகவும் உங்கள் புண்ணியம் மேலும் பெருகும். இதனால் உங்கள் பாரமிதைகளும் வலுவுரும்.

வாரந்தோறும் நடைபெறும் இந்த தம்ம தேசனத்தினால் கேட்பவருக்கும் புண்ணியம், சொல்பவர்க்கும் புண்ணியம் சேர்கிறது.

புது ஆண்டு தொடங்கும் இந்நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன? கடந்து போன  ஆண்டில் நாம் எவ்வளவு தானம் செய்தோம்?  எவ்வளவு புண்ணியம் சேர்த்தோம்? எவ்வளவு நேரம் தியானத்திற்காக ஒதுக்கினோம்? நமக்கு நாமே எந்த அளவுக்கு மெத்தா - அன்பும் கருணையும் காட்டிக் கொண்டோம்? இவ்வாறு இன்று நாம் யோசித்து பார்க்க வேண்டும். அப்படி பிரபலிக்கும் போது நாம் இன்னமும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது என்பதை உணர்வோம்.

புத்தர், நன்மைகள் வளர்ச்சி பெற வேண்டுமென்றால்  அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஏன் நன்மை செய்ய வேண்டும் என்றால், நன்மையும் மகிழ்ச்சியும் ஒன்றாகும். புண்ணியம் செய்பவர், புண்ணியம் சேர்ப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார். புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒரே பொருள் கொண்டுள்ளன என்று புத்தர் கூறுகிறார். புண்ணியம் அதிகம் செய்யும்போது, நன்மையில் வளரும் போது, நாம் அதிகம் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பொருள்.

எந்த அளவிற்கு நன்மை செய்துள்ளோம், எவ்வளவு நமது சீலத்தை வளர்த்துள்ளோம், எவ்வளவு நேரம் தியானம் செய்கிறோம், எந்த அளவிற்கு மனதை பக்குவப்படுத்தினோம் - அதன் படி நல்ல பண்புகள் வளர்கின்றன. மகிழ்ச்சியான மனம், நல்ல எண்ணங்களை மனதில் தோற்றுவிக்கும். இவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட மனம் விவேகத்தை வளர்த்துகிறது.

இந்த புது ஆண்டில் மேலும் எப்படி நன்மையில் வளர்வது? அதற்கான நான்கு வகையான முயற்சிகள் உள்ளன:

முதல் முயற்சி, சம்வரப் பதானம் ( Saṁvarappadhānaṁ). அப்படி என்றால் மனதையும், பேச்சையும், நடத்தையையும், கட்டுப்படுத்த வேண்டும், தவறான செயல்களை செய்வதை தடுக்க வேண்டும்.

இரண்டாவது முயற்சி, பஹானப் பதானம். (pahānappadhānaṁ) அதாவது, ஏற்கனவே தோன்றிய தீய எண்ணப் போக்குகளை கைவிட வேண்டும். காமம், வெறுப்பு, அறியாமை போன்ற அந்த மாசுகளை நீக்க வேண்டும்.

மூன்றாவது வகையான முயற்சி, பாவனா (bhāvanāppadhānaṁ) எனப்படும்.  இது நல்ல செயல்களை, நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய முயற்சி. குசலங்கள்,  குசல காரியங்கள். 

நான்காவது முயற்சி, அனுரக்கனா (anurakkhaṇāppadhānaṁ) என்பது தோன்றிய குசலங்களை காப்பாற்றுவது. சேர்த்த செல்வத்தைப் காப்பாற்றுவது போல.  செல்வத்தை பாதுகாத்தால் ஒரு அவசரத்துக்கு பணம் இருக்கும், அல்லது நமது தொழில் வளர்ச்சி பெறுவதற்காக அந்த பணத்தை பயன்படுத்தலாம், தானத்துக்காக பயன்படுத்தலாம். எனவே செல்வத்தை சேர்ப்பது மட்டும் போதாது. அதனை காப்பாற்றவும் வேண்டும். அதுபோல மனதில் தோன்றிய நற்பண்புகளையும் காப்பாற்ற வேண்டும்.

ஆகவே இந்த நான்கு வகையான முயற்சிகள் அனைவருக்கும் தேவையானது. இவை நமது நன்மைக்கும் நமது பாரமிதைகளை வளர்த்தவும் உதவும். மேலும் இது நல் கடைபிடிக்கும் (செய்கின்ற காரியத்தை கவனம் மாறாமல் கடைபிடித்தல்) எடுத்துச் செல்லும்.

தானம் என்று சொல்லும்போது, அது என்னவென்று அனைவருக்கும் புரிகிறது. இங்கு நீங்கள், உபாசகர்களும் உபாசிகர்களும் வாரந்தோரும்  வந்து தானம் செய்கின்றீர்கள். 

அதேபோல் சீலம் என்ற பண்பும் மிகவும் அவசியமானது. இளையோருக்கும் சரி, முதியோருக்கும் சரி சீலம் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இது நமது நன்மைக்கும், குடும்பத்தினர்  நன்மைக்கும், சமூக நன்மைக்கும் அவசியம்.  சீலம் கடைப்பிடிக்கும் போது எங்கு சென்றாலும் நாம் சந்தோஷமாக வாழலாம்.

அடுத்து பாவனா. பாவனா என்றால் தியானம் செய்வது.  நல் கடைப்பிடிக்கு தியானம் அவசியம். மனம் அமைதி பெற மனதின் ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. அதன் மூலமாக விவேகமும் அதிகரிக்கும்.
அமைதி இல்லாத மனதின் காரணமாக, சென்ற வருடத்தை திரும்பி பார்க்கும் போது, நாம் பல காரியங்களை அறியாமையின் காரணத்தால், மடமையின் காரணத்தால் செய்தது நினைவுக்கு வரலாம். தெளிவாக எது சரியானது, எது தவறானது என்பதை அறியாததன் காரணமாக பல தவறுகள் செய்துள்ளோம். இதற்கு காரணம் தியானம் செய்யாதது தான்.   பயிற்சி செய்யாததால், கடைப்பிடி இல்லாததனால், பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றோம். 

பாவனா என்பது எப்போதாவது ஒருமுறை செய்வது, வாரம் ஒரு முறை செய்வது அல்ல.  இது அடிக்கடி செய்ய வேண்டிய பயிற்சி. தினம் காலையிலும் மாலையிலும் நேரம் ஒதுக்க வேண்டும். அலைகளைக்கப்படும் நம் மனதிற்கு நாம் கருணை காட்ட வேண்டும். அவ்வப்போது ஓய்வு தர வேண்டும்.

நல் கடைப்பிடி என்பது எல்லோரும் பயில வேண்டிய விஷயம். தொழில் செய்பவரும், வேலையில் இருப்பவரும்,  மாணவரும்,  ஓய்வு பெற்றவரும், இல்லறத்தாரும் அனைவரும் நற்கடைப்பிடியோடு வாழ  வேண்டும். ஏன், பிரச்சனைகளை தவிர்க்க, துக்கத்தை தவிர்க்க அது தேவை. பிரச்சனைகள் வேண்டாம் என்றால் நற்கடைப்பிடி  அவசியம்.

யாரும் பிரச்சினைகளை நாடிச் செல்வதில்லை.  பேராசை, வெறுப்பு, அறியாமை போன்றவை. ஒவ்வொரு நாளும் தினசரி உடலுக்காகாரம் தருவது போல் மனதிற்கும் ஆகாரம் தர வேண்டும்.  மனம் அமைதியாக இருக்கும்போது, எல்லாம் தெளிவாக தெரியும். உதாரணமாக ஒரு வாகனத்தை வேகமாக ஒட்டி செல்லும் போது சுற்றி உள்ள காட்சிகள் வேகமாக செல்வதால் அவற்றை உன்னிப்பாக நாம் பார்க்க முடிவதில்லை.  மெதுவாக செல்லும்போது அவற்றை தெளிவாக பார்க்கிறோம். அதேபோல் மனம் தெளிவாக இருக்கும் போது பல நற்பண்புகள் தோன்றுகின்றன: அன்பு, கருணை, நன்றி மறவாமை, அடக்கம், போதும் என்று மனம். இந்த பண்புகள் எல்லாம்  உள்ளத்தில்  தோன்றும்.

நற்கடைப்பிடி இருக்கும்போது அடுத்தது  மெய்யறிவு  பிறக்கும். வாய்மை, எதார்த்தம் என்பன புரிய வரும். உண்மையை அறிவது அவ்வளவு சிக்கலான விஷயம் அல்ல. தினசரி நம் முன்னால் உள்ளது. காலையிலிருந்து மாலை வரை நம் உடலை கவனித்தாலே போதும். உண்மை தானாக விளங்கிவிடும். துக்கம் என்ற உண்மை, துக்கத்துக்கான காரணம், மகிழ்ச்சிக்கான காரணம், துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் பாதை - என்வழி பாதை.

என்வழிப்பாதை என்பது சீலத்தில் தொடங்குகிறது. ஐந்து ஒழுக்கங்கள் நம்மை பாதுகாக்கும்.  மகிழ்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ரகசியம், ஐந்து ஒழுக்கங்கள். 

தானம், பாவனா இவற்றை செய்யும் போது மெய்யறிவு தானாகவே வரும்.  நாம் எப்படி மெய்யறிவோடு வாழ்வது?  அதற்கான காரணத்தை நாம் உருவாக்க வேண்டும். காரணம் தோன்ற முயற்சி செய்தால் காரியம் தானாகவே நடைபெறும். சீலம், தானம், பாவனா போன்றவை காரணங்கள். மெய்யறிவும், விவேகமும், அதன் விளைவு.

குடும்பத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் மெத்தா பாவனா செய்ய வேண்டும். நாம் நமக்கு தீமை செய்யாமல் இருந்து, மற்றவர்க்கும் தீமை செய்யாமல் இருக்கும் போது நாம் மெத்தா செய்வதாக அர்த்தம். குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க நாம் விரும்பும் போது, அவ்வாறு மனதில் நினைக்கும் போது தானாகவே நாம் செய்யும் செயலும் நற்செயலாக இருக்கும். நாம் ஒரு பாரமாக இருக்க மாட்டோம். நம் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்போம். அதுதான் உண்மையான அன்பு.

அதேபோல் கருணையும் முக்கியம். கருணை என்பது மற்றவரின் துன்பத்தை குறைக்க பார்ப்பது. 

இன்று நாம் சில நல்ல பண்புகளை பற்றி கற்றுக் கொண்டோம். இந்த பண்புகளை கடைபிடித்து புது ஆண்டு வெற்றிகரமாக அமைய விரும்புவோம்.  இந்த பண்புகளைப் பற்றி கற்பது மட்டும் போதாது, நடைமுறையில் நமது வாழ்க்கையில் கடைபிடிக்கவும் வேண்டும். அப்படி செய்யும் போது நமக்கு நம்பிக்கை பிறக்கும். நிகழ்காலத்தில் வாழ கற்றுக் கொள்வோம். எதார்த்தத்துடன் வாழ்வோம். வாழ்க்கையில் எது தோன்றினாலும் அதற்கான காரணத்தை அறிவோம், இதன் காரணமாக தோன்றிற்று என்பதை அறிவோம்.

தம்மம் இல்லை என்றால், துக்கம் இருக்கும். தம்மம் இருக்கும் போது, நமது துயரங்களும் படிப்படியாக குறையும்.

வேலுவன விகாரையில், புத்தர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்வோம்:

Sabbapāpassa akaraṇaṃ
Kusalassa upasampadā
Sacittapariyodapanaṃ
Etaṃ buddhāna sāsanaṃ
(DhP 183)

பாவங்களைச் செய்யாதிரு,
நல்லவற்றைச் செய்,
மனதைச் சுத்தப்படுத்து:
இவையே  புத்தர்களுடைய போதனைகள்.

தம்மபதம் 183

The non-doing of any evil, 
the performance of what's skillful, 
the cleansing of one's own mind: 
this is the teaching of the Buddhas.

ஒரு குழந்தை நடக்க கற்றுக் கொள்வதற்கு முன் பலமுறை விழுந்து எழுவது போல நாமும் தீயவற்றை, தீய பண்புகளை படிப்படியாக கைவிட்டு, நற்பண்புகளை படிப்படியாக வளர்ப்போமாக."


குறிப்பு:
நான்கு முயற்சிகள்: https://suttacentral dot net/an4.69

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்