மும் மணி சரணம்

 


மும் மணி சரணம் (திரி சரணம்)


புத்தங் சரணங் கச்சாமி!

தம்மங் சரணங் கச்சாமி!

சங்கங் சரணங் கச்சாமி!


துதியம்பி (இரண்டாம் முறையாக)... 

ததியம்பி (மூன்றாம் முறையாக)...


மும்மணிகளிடம் சரியான வழியில் சரண் செல்லும்போது நமக்கு அவற்றிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

.

ஃஃஃ


உத்தமரான, தூய்மையான, சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்ற புத்தருக்கு உணவு தானம் செய்வதை விட, புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு உணவு தானம் செய்வதை விட, அவர்களுக்கு இருப்பிடம் கட்டிக் கொடுப்பதை விட, மேன்மையானது - புத்தர் தர்மம் சங்கத்திடம் அடைக்கலம் செல்வது. 


[ஆதாரம்: AN9.20 வேலாமா பற்றி]


ஃஃஃ


புத்தரிடம் சரண் செல்லும்போது அவருடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தர் போதிசத்துவராக இருந்தபோது நம்மைப் போல் மனதில் துன்பம் அனுபவித்தார். எனவே அவருக்குள் நாம் இருக்கின்றோம். அதே சமயம் நமக்குள் அவர் இருக்கின்றார். ஏனென்றால் சரியாகப் பயிற்சி செய்தால் நாமும் அவரைப் போல் ஞானம் பெறலாம். 


அதேபோல் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வழி (அவை முழு நிறைவடையவில்லை என்றாலும்) ஓரளவுக்கு நமக்கு தெரியும். எனவே நமக்குள் தம்மமும் இருக்கின்றது


 மற்றவருடன் சேர்ந்து பயிற்சி செய்யும் போது, ஒரு விகாரைக்கு சென்று நான்கு பேருடன் தியானம் செய்யும் போது அல்லது சேர்ந்து வந்தனம் ஓதும் போது நமக்குள் சங்கமும் இருக்கின்றது.


எனவே புத்த தம்ம சங்கம் என்ற முன்மணிகளும் நமக்குள் இருப்பதை உணர்ந்து சரண் செல்ல வேண்டும்.


ஆதாரம்: தீக் ஞாட் ஹான் Thich Nhat Hanh  


ஃஃஃ


தானம் தாங்கிச் சீலம் தலைநின்று

புத்த தன்ம சங்கம் என்னும்

முத்திற மணியை மும்மையின் வணங்கிச்

சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின் 


ஆதாரம்: மணிமேகலை காதை 30, வரிகள் 1,3-5


உரை: துரைசாமி பிள்ளை அவர்கள்

தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு;

சீலம் தலைநின்று - சீலங்களின் வழி நின்று;

புத்த தன்ம சங்கம் என்னும் முத்திறமணியை: புத்தன் தருமம் சங்கம் என்னும் கொள்கைகளான மூன்று தத்துவ மணிகளையும்;

மும்மையின் வணங்கி: மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி;

சரணாகதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புகலில்லாதவளாய்....


ஃஃஃ


புத்தரிடம் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:


 புத்தர் என்னுடைய ஆன்மீகத் தலைவர். என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறு யாரிடமும் நான் புகலிடம் செல்ல வேண்டியதில்லை. புத்தர் பெற்ற மெய்யறிவையும் விவேகத்தையும் நாமும் அடைய முயற்சி செய்வோம் என்று நேர்ந்துக் கொள்கின்றோம். அவரே நமது மேலான ஆன்மீக நண்பர் (கல்யாண மித்திரர். கல்யாண என்றால் அழகு) என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.


தர்மத்திடன் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:


புத்தரின் போதனைகள் மட்டுமே எனது வழிகாட்டி. நமது ஆன்மீக வளர்ச்சிக்கு வேறு எதுவும் தேவையில்லை.


சங்கத்திடன் சரண் செல்லும் போது, இவ்வாறு நாம் நினைக்க வேண்டும்:


சங்கத்தில் உள்ள ஆண், பெண் துறவிகள் நமக்கு ஒழுக்கத்தின் தலையாய உதாரணமென நாம் கருதுகிறோம்.


ஃஃஃ


மும்மணிகளிடம் சரண் செல்லும்போது மன கவனத்துடன் செல்ல வேண்டும்.


ஒரு கடமைக்காக அல்லது ஒரு மந்திரத்தை போல் அவற்றை ஓதினால் அதைச் சரண் சென்றதாக சொல்ல முடியாது.


இந்த வார்த்தைகளின் பொருளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் இவற்றை ஓதினாலும் அவை பயனுள்ளதாக இருக்காது. மும்மணிகளிடமிருந்து இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்காது.


மும்மணிகளிடம் சரண் செல்லும்போது நாம் இவ்வாறு நேர்ந்து கொள்கின்றோம்: 'நான் புத்தரை, தம்மத்தை, சங்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். நான் மகிழ்ச்சிக்கான பாதையை, விடுதலைக்கான பாதையை தொடர்வேன்', என்று நேர்ந்து கொள்கிறோம். அப்போது தான் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். இவ்வாறு நேர்ந்து கொள்ளும் போது நாம் தவறான பாதையில் செல்ல மாட்டோம். சொர்க்கத்துக்கு செல்லும் பாதையை விட்டுவிட்டு, தெரிந்தே, நரகத்துக்கு போகும் பாதையை தொடர மாட்டோம்.


ஆதாரம்: சங்கசேனா பாந்தே உரை


ஃஃஃ


மும்மணிகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை என்றால் என்ன? 


நாம் மும்மணிகளிடம் சரண் தான் சென்றுள்ளோம். அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் வரவில்லை. ஸோதா பண்ண (sotāpanna) என்ற முதல் ஞான நிலையை அடைந்தவர் மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்ல முடியும்.


அசைக்க முடியாத நம்பிக்கை என்றால் இந்த வாழ்க்கை முடியும் வரை அல்லது மறுமையில் வரும் வாழ்நாட்களிலும், நமது வீடு பேருக்காக/விடுதலைக்காக, வேறு எந்த பாதையையும் தேட மாட்டோம், என்பதாகும். 


அசைக்க முடியாத நம்பிக்கை (aveccappasādo) வருவதற்கு:

1.ஆன்மீக நண்பர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் (Kalyāna mitta புறம் சம்பந்தப்பட்டது)

2. தம்ம உரைகளை கேட்க, படிக்க வேண்டும். (புறம் சம்பந்தப்பட்டது)

3. எந்த விஷயத்தையும் விவேகத்துடன் பிரதிபலிக்க வேண்டும். (Yoniso manasikāra, அகம் சம்பந்தப்பட்டது)

4. தொடர்ந்து எண்வழிப் பாதையில் பயிற்சி செய்ய வேண்டும் (அகம் சம்பந்தப்பட்டது)


ஆதாரம்: அனந்தபிண்டிகர் சூத்திரம் SN55.26 மற்றும் பாந்தேவுரை


ஃஃஃ

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை