காக்கை ஜாதகக் கதை
https://youtu.be/AWtzr8Qa8wI
காக்கை ஜாதகக் கதை
(புத்தரின் முன் பிறவிக் கதை)
Kāka Jataka
முன்னொரு காலத்தில், இந்திய மண்ணில் போதிசத்துவர் ஒரு காகமாக பிறந்தார்.
இன்று போலவே அக்காலத்திலும் காகங்கள் தங்கள் பிழைப்புக்காக, உணவை குப்பை கூடங்களிலிலும், மற்ற இடங்களிலும் தேடின. ஊரின் எல்லைக்கு உள்ளேயும், எல்லைக்கு வெளியே கிராமங்களிலும், காடுகளிலும், வயல்களிலும் உணவைத் தேடின.
போதி சத்துவர் ஒரு பெரிய காக்கை கூட்டத்தின் தலைவராக இருந்தார். அந்த கூட்டம் காசி நகருக்கு வெளியே ஒரு வனத்துடன் சேர்ந்து இருந்த ஒரு இடுகாட்டில் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் காலை நேரத்தில் மன்னரின் தலைமை புரோகிதர் கிழக்கு வாயிலாக நகரிலிருந்து வெளியேறி, கங்கை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றார். அவர் குளித்த பிறகு நல்ல துணிகளை அணிந்து கொண்டு, நறுமணங்களை பூசிக்கொண்டு மல்லிகை பூ மாலையை கழுதில் அணிந்தவராக ஊர் பக்கமாக திரும்பிச் சென்றார்.
அச்சமயம் இரண்டு காக்கைகள் நகரின் வாயில் கதவுக்கு மேல் இருந்த வளைவில் உட்கார்ந்து கொண்டிருந்தன. ஒரு காக்கை மற்றதிடம் சொன்னது: "அங்கே தெரிகிறதா, அந்த புரோகிதர் குளித்துவிட்டு திரும்பி வருவது! எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது! எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது!! எனது எச்சத்தை அந்த பிராமணரின் மொழுக்குத் தலையின் மீது இறக்கப் போகிறேன்!"
"என்னது! என்ன செய்யப் போகிறாய்? இந்தப் பிராமணர் ஒரு உயர் பதவியில் இருப்பவர். அவர் கோபம் கொண்டால் எல்லா காக்கைகளின் அழிவுக்கும் காரணமாக ஆகிடுவார்", என்று எச்சரித்தது மற்ற காக்கை.
"நடப்பது நடக்கட்டும். என்னால் இதை தடுக்க முடியாது."
இதைக் கேட்ட இரண்டாவது காக்கை, 'என்ன நடக்கப் போகிறதோ,' என்று எண்ணியவாறு அங்கிருந்து பறந்து சென்றது.
அந்த பிராமணர் சரியாக நுழைவாயில் அடியில் வந்த போது, முதல் காக்கை அவர் மீது பறந்து சென்று, எச்சத்தை இறக்கியது. குறி வைத்த படி, அதன் எச்சம் அந்த பிராமணரின் தலை மீது விழுந்தது.
😠😠😠
பிராமணரின் மனதில் கோபம் பிறந்தது. எல்லா காக்கைகளையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது.
அந்த நேரத்தில், மற்றொரு இடத்தில்...ஒரு பணிப்பெண் அவள் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள். அதாவது, தளத்தில் வெயிலில் காய்வதற்காக பரப்பப்பட்டிருந்த அரிசியை பாதுகாப்பது அவள் வேலை. இது அரசனின் யானைக்கூடத்திலிருந்து வெகு தூரம் இல்லை. மிகவும் வெப்பமான அந்த நாள், மதிய நேரம், அவளுக்கு தூக்கம் வந்தது. தூங்கிவிட்டாள்.
அவள் தூங்கிய நேரத்தில் அடர்ந்த முடி கொண்ட ஒரு ஆடு அரிசியை தின்ன வந்தது. அதன் ஓசையை கேட்டு அந்த பெண் தூக்கம் தெளிந்தால். அந்த ஆட்டை அங்கிருந்து விரட்டினால்.
சிறிது நேரத்தில் மீண்டும் அவளுக்கு தூக்கம் வர, தூங்கி விட்டாள்.. மீண்டும் ஆடு திரும்பி வர ..அவள் முழித்துக் கொள்ள ..அதனை விரட்ட ..இவ்வாறு சில முறை நடந்த பின் அவளுக்கு இந்த எண்ணம் தோன்றியது: 'இந்த ஆடு பாதி அரிசியை தின்றுவிடும் போலிருக்கிறது. என்னுடைய சம்பளத்தை குறைத்து விடுவார்கள். அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்'.
அவள் அருகில் இருந்த அடுப்பங் கரைக்கு சென்று ஒரு பக்கம் அனல் பறந்து கொண்டு இருந்த ஒரு நீண்ட விறகு கட்டையை எடுத்து மீண்டும் காவல் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்று அந்த ஆடு வருவதற்காக காத்திருந்தாள். தூங்குவது போல் நடித்தாள். அரிசியை உண்டு பழகிய அந்த ஆடு திரும்பி வந்தது. அவளும் திட்டமிட்டபடி தயங்காமல் அந்த விறகுக் கட்டையை ஆட்டின் மீது வீசினாள்.
ஆனால் ஐயகோ... ஆடு சுடுபடும் என்று நினைத்து எறியப்பட்ட விரகுக் கட்டை அந்த ஆட்டின் நீண்ட அடர்ந்த முடியை பற்ற வைத்துவிட்டது.
பதற்றத்தில் ஆடு குதித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்று, அருகில் இருந்த யானைக் கூடத்துக்குள் நுழைந்தது. அங்கிருந்த வைக்கோல் புல்லில் அந்த ஆடு உருண்டு புரள அதுவும் பற்றி கொண்டது. அதனால் யானைக் கூடம் எரியத் தொடங்கி, யானைகள் தப்பிக்க முடியாமல் பலவும் நெருப்பால் சுடப்பட்டன. நெருப்பு விரைவில் அணைக்கப்பட்டது. மன்னரின் யானை மருத்துவர்கள் அவர்களால் முடிந்ததை செய்தார்கள். ஆனால் பல யானைகளுக்கு முதுகில் பலத்த சூடு காயம் ஏற்பட்டிருந்தபடியால், அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மன்னருக்கு அவர் யானைகள் மீது மிகவும் பிரியம். முதுகில் இருந்த காயங்களை எப்படி குணப்படுத்துவது என்று விசாரிக்க அவருடைய தலைமை புரோகிதரை அழைத்தார்.
"ஆச்சாரியரே! இந்த யானைகளின் முதுகு காயங்களை குணப்படுத்துவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?"
"ஓ! சாது! மன்னரே, எனக்கு ஒரு வழி தெரியும். காக்கைகளின் கொழுப்பு, இதற்குத் தக்க மருந்து. பிரச்சனை என்னவென்றால், காக்கைகளுக்கு உடலில் கொழுப்பு குறைவு என்பதால், வேண்டிய கொழுப்பு எடுக்க பெருமளவான காக்கைகள் தேவைப்படும்."
'அப்படியே ஆகட்டும், காக்கைகளை கொன்று அவற்றின் கொழுப்பினை எடுத்து யானைகளின் முதுகில் உள்ள காயத்தை குணப்படுத்துவோம்,' என்ற மன்னர் காக்கைகளை கொன்று குவிக்க கட்டளையிட்டார். மன்னரின் கட்டளைப்படி அன்றிலிருந்து ஊருக்குள் இருந்த எல்லா காக்கைகளும் குறிவைக்கப்பட்டன. இலசுகள், முதியன, ஆண் பெண், பெரியதும் சிறியதும் என்று வேறுபாடு பார்க்காமல், கோவில் கோபுரங்களில் இருந்த காக்கைகளும், ஆலமர கிளைகளில் இருந்த காக்கைகளும் கொல்லப்பட்டன. நகரின் பல பகுதிகளிலும் காக்கைச் சடளங்கள் குவிக்கப்பட்டன. சிறகொடிந்த காக்கைகள், கண்கள் திறந்தபடி இருந்த காக்கைப் பிணங்கள். பரிதாபமான காட்சி.
காக்கைகள் வண்டிகளில், மன்னரின் சமயலறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு பெரிய குண்டாக்களில் கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்டு, அதிலிருந்து கொழுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் மிகவும் குறைந்த அளவே கொழுப்பு கிடைத்தது. இருந்தும், காக்கைகளை கொள்ளும் உத்தரவு தொடர்ந்து நடைமுறை செய்யப்பட்டது.
காசி நகர் காக்கைகள் மத்தியில் ஒரு பெரும் அச்சமும், பீதியும் உண்டானது.
ஒரு மாலை காசிநகர் காக்கை ஒன்று நகரை விட்டுச் சென்றது. நகரைத் தாண்டி, கிராமங்களை தாண்டி, வயல்களை தாண்டி அந்த சுடுகாட்டில் காக்கைகளின் ராஜாவாக இருந்த போதி சத்துவர் இருந்த இடத்திற்கு சென்றது. அவரிடம் நடப்பதை சொன்னது.
போதி சத்துவர், காக்கைகளின் ராஜா, அருகில் இருந்த சாலமரத்திற்கு பறந்து சென்று, அதன் கிளையில் அமர்ந்தார். அங்கு பத்து பாரமிதைகளை மனதில் நினைவுக்கு கொண்டு வந்தார்.
தான பாரமி Dāna தயாள குணம்,
கந்தி பாரமி Khanti பொறுமை,
சீல பாரமி Sīla ஒழுக்கம்,
பஞ்ஞா பாரமி Pañña விவேகம்,
சச்ச பாரமி Sacca வாய்மை,
நெக்கம்மா பாரமி Nekkhamma துறத்தல்,
மெத்தா பாரமி Metta அன்பு,
அதித்தான பாரமி Adhitthana உறுதி,
வீரிய பாரமி Viriya முயற்சி,
உபேக்கை பாரமி Upekkha சமத்துவம்.
இவற்றுல் போதி சத்துவர் தன்னை வழிகாட்ட, எல்லையற்ற அன்பைத் தேர்ந்தெடுத்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு வயல்கள் மீது, கிராமங்களின் மீது, நகரின் நுழைவாயில் மீது பறந்து, நேராக மன்னரின் அரண்மனையை சேர்ந்தடைந்தார். அங்கே ஒரு திறந்த ஜன்னல் வழியே உள்ளே சென்று மன்னரின் அரியணை அருகே சென்று இறங்கினார். அச்சமயம் ராஜ சபைக்குள் மன்னர் நுழைந்து கொண்டிருக்க, போதி சத்துவர் அரியணைக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். இதை கவனித்த பணியாள் ஒருவன் காக்கையை விரட்டச் சென்றான். மன்னர் அவனை தடுத்து, 'விரட்டாதே! கண்டிப்பாக அது ஒரு தூதுவராகத் தான் இருக்க வேண்டும்,' என்றார்.
மீண்டும் ஒரு முறை போதி சத்துவர் தன்னை வழிகாட்ட எல்லையற்ற அன்பை நினைத்தவாறு அரசனிடம்: 'மன்னரே! நானும் ஒரு அரசன் தான். எங்கள் காக்கைகளின் மத்தியில் ஒரு பெரும் அச்சம் உண்டாகியுள்ளது. மரண அச்சம். ஒரு மன்னர் எந்த விஷயத்திலும் ஒரு முடிவு எடுக்கும் முன்னர், அறிவறிவாக விசாரித்து முழுநிலைமையை முதலில் உணர வேண்டும், அல்லவா? மன்னரே, உங்கள் தலைமை புரோகிதர் வெறுப்பின் பிடியில் சிக்கியுள்ளார். காக்கைகளின் கொழுப்பு யானைகளின் முதுகில் உள்ள காயத்தை சரிப்படுத்தும் என்று உங்களிடம் வாய்மைக்கு புறமான ஒன்றை சொல்லியுள்ளார். உண்மையில் அரசரே காக்கைகளின் உடலில் கிட்டத்தட்ட எந்த கொழுப்பும் இல்லை.
மன்னர், ஒரு காக்கை தன்னிடம் தெளிவாக இவ்வாறு பேசியதை கண்டு ஆச்சரியப்பட்டார், மனம் கிரங்கினார். ஒரு அரசனுக்கேற்ற ஆசனம் போதிசத்துவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓரு தங்கக் கோப்பையில் நீரும், மற்றொரு தங்க கோப்பையில் இனிய சாதமும் கொண்டுவரப்பட்டது. போதி சத்துவர் தனக்கு ஏற்பாடு செய்த அரியணைக்கு பறந்து சென்று நீரையும் உணவையும் அருந்தினார். பின் மன்னர் அவரிடம்:
"பண்டிதரே! மெய்யறிவுருடையவரே! காக்கைகள் ஏன் கொழுப்பு இல்லாமல் உள்ளன?"
"மன்னரே, நான் விளக்கம் கூறுகிறேன். மனிதருக்கு அஞ்சி, எங்கள் உள்ளம் எப்போதும் கவலையில் உள்ளபடியால், எங்களுக்கு, எனது உறவுகளான மற்ற காக்கைகளுக்கு உடலில் கொழுப்பு இல்லை."
போதி சத்துவர் மன்னருக்கு அகிம்சையை வலியுறுத்தும் ஐந்து நல்லொழுக்கங்களை போதித்தார். மன்னர் தன் நாட்டையே போதி சத்துவருக்கு அர்ப்பணித்தார். ஆனால், நாட்டை வைத்து ஒரு காகம் என்ன செய்யும்? தனக்கு நாடு வேண்டாம், என்று ஏற்க மறுத்தார். மன்னரிடம் அவர் கேட்டுக் கொண்டது இது ஒன்று மட்டுமே. மன்னர் தனது ராஜ்ஜியத்தில் உள்ள எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காக்கைகளை கொள்ளும் கட்டளையை ரத்து செய்து, அனைத்து உயிர்களும் பயமின்றி வாழ்வதற்கு ஏற்பாடு செய்யக் கோரிக்கை விடுத்தார்.
மன்னர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். நகரில் வாழும் அனைத்து காக்கைகளுக்கும்,, காக்கைகள் விரும்பும் சுவையான உணவு வழங்கப்பட்டது. காக்கைகளின் அரசனான போதி சத்துவருக்கு மன்னரின் உணவின் ஒரு பகுதி வழங்கப்பட்டது.
போதி சத்துவர் மன்னரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, நகர் மீதும், காடுகள் மீதும், கிராமங்கள் மீதும் பறந்துச் சென்று தம் வீடு சேர்ந்தடைந்த பின், அங்கிருந்த காக்கைகளை அழைத்தார்.
"பாதுகாக்கப்படாத ஒருமனக் கிளர்ச்சியினால் எவ்வளவு துன்பம் ஏற்பட்டது என்பதை கவனித்தீர்களா!"
Quivering, wavering, hard to guard, to hold in check: the mind. The sage makes it straight — like a fletcher, the shaft of an arrow.
அம்பின் வளைவை அகற்றும் அம்பு செய்வோனைப் போன்று, அறிவுடையோர் சலனமுடைய, உறுதியற்ற, அடக்கியாள கடினமான, புலன் இன்பங்களில் இருந்து திருப்பக் கடினமான மனதை நேராக்குகின்றனர்." (தம்மபதம் 33, மொ: திரு. எம். என். மொஹிதீன்)
ஃஃஃ
Alternative source:
https://thejatakatales dot com/kaka-jataka-140/
Comments
Post a Comment