மஹாநாமருடன்
மஹாநாமருடன்
(சங்யுத்தத நிகாயம் 55.21)
With Mahānāma (1st)
இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தர் சாக்கியரின் நாட்டில், கபிலவத்து அருகில், ஆலமர விகாரையில் தங்கியிருந்தார். சாக்கியர் மஹாநாமர் புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் சொன்னார்:
"ஐயா, இந்த கபிலவத்து செல்வ செழிப்புள்ள ஊர். முட்டுச்சந்து மூலைமுடுக்கெல்லாம் மக்கள் நிறைந்துள்ளனர். பிற்பகல் புத்தருக்கு அல்லது ஒரு மதிக்கத்தக்க துறவிக்கு அஞ்சலி செலுத்தியபின் நான் கபிலவத்து நுழையும் போது ஒரு தனி யானையை அல்லது ஒரு குதிரையை அல்லது ஒரு தேரை, ஒரு மாட்டு வண்டியை, ஒரு மனிதரை சந்திக்க நேர்கிறது. அப்போது புத்த, நம்ம சங்கம் பற்றிய மன கவனம் இழந்து விடுகிறேன். 'நான் இந்த சமயத்தில் இறந்து விட்டால் அடுத்த பிறப்பில் எங்கே பிறப்பேனோ', என்ற அச்சம் என்னுள் தோன்றுகிறது."
"பயப்படாதே மஹாநாமா, பயப்படாதே! உனது மரணம் மோசமானதாக இருக்காது. உனது மறைவு மோசமானதாக இருக்காது. நீண்ட நாட்களாக நம்பிக்கை, ஒழுக்கம், போதனைகள் பற்றிய அறிவு, தயாள குணம், விவேகம் (saddhā, sīla, suta, cāga, paññā) ஆகிய பண்புகளில் மனம் தோய்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம்.
உருவம் கொண்ட அவர்கள் உடல் நான்கு ஆதி பூதங்களாலானது (அதாவது பூமி, நீர், காற்று, வெப்பம் ஆகியவற்றாலானது). தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது. அரிசியும் கஞ்சியும் உண்டு வளர்க்கப்பட்டது. நிலையாமைக்கு ஆட்பட்டது. உடையும், கரையும், அழியும் தன்மை கொண்டது.. (இறந்த பின்) உடலை இதோ காக்கைகள் பிணந்தின்னி கழுகுகள், பருந்துகள், நாய்கள், குள்ளநரிகள் மற்றும் பல சிறு விலங்குகள் அதனை தின்றுவிடும். அவர்கள் உடலின் இயல்பு இப்படிப்பட்டது என்றாலும், அவர்கள் மனம் மேலே எழும், மேலான இடம் நோக்கி செல்லும்.
உதாரணமாக ஒருவர் நெய் அல்லது எண்ணெய் உள்ள மண் பானையை ஆழமான ஏரியில் ஆழ்த்தி உடைக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். கண்டம் துண்டமாக உடைந்த பானை கீழ் நோக்கி செல்லும். ஆனால் அந்த நெய் அல்லது வெண்ணை உயர்ந்து, மேல்னோக்கிச் செல்லும்.
அதேபோல நீண்ட நாட்களாக நம்பிக்கை, ஒழுக்கம், போதனைகள் பற்றிய அறிவு, தயாள குணம், விவேகம் ஆகிய பண்புகளில் மனம் தோய்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம்.
உருவம் கொண்ட அவர்கள் உடல் நான்கு ஆதி பூதங்களாலானது. தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது. அரிசியும் கஞ்சியும் உண்டு வளர்க்கப்பட்டது. நிலையாமைக்கு ஆட்பட்டது. உடையும், கரையும், அழியும் தன்மை கொண்டது.. (இறந்த பின்) உடலை இதோ காக்கைகள் பிணந்தின்னி கழுகுகள், பருந்துகள், நாய்கள், குள்ளநரிகள் மற்றும் பல சிறு விலங்குகள் அதனை தின்றுவிடும். அவர்கள் உடலின் இயல்பு இப்படிப்பட்டது என்றாலும், அவர்கள் மனம் மேலே எழும், மேலான இடம் நோக்கி செல்லும்.
உனது மனம், மாஹாநாமா, நீண்ட நாட்களாக நம்பிக்கை, ஒழுக்கம், போதனைகள் பற்றிய அறிவு, தயாள குணம், விவேகம் ஆகிய பண்புகளில் தோய்ந்துள்ளது. பயப்படாதே மஹாநாமா, பயப்படாதே! உனது மரணம் மோசமானதாக இருக்காது. உனது மறைவு மோசமானதாக இருக்காது."
ஃஃஃ
ஆதாரம்:
https://youtu.be/ognTpOMGpY0. (பாந்தே உரை)
https://suttacentral.net/sn55.21/
குறிப்பு:
குழம்பிய மனநிலையில் இறந்தால், பொதுவாக நரகம் அல்லது மிருக உலகத்தில் தான் மறுபிறப்பு இருக்கும். ஆனால் இந்த ஐந்து பண்புகளை நீண்ட நாள் கடைபிடித்து வந்தால், குழம்பிய நிலையில் இறந்தாலும் கூட, மறுமை சிறப்பானதாக இருக்கும், கீழ் உலகத்திலே இருக்காது. இந்த ஐந்து பண்புகள் நம்மை பாதுகாக்கும்.
நம்பிக்கை (saddhā): புத்தர் ஒரு கருணையங் கடல். அவர் மாசற்றவர். தேவர்க்கும் மனிதருக்கும் ஆசிரியர். அனைத்து உலகங்களையும் அறிந்தவர்..(போன்ற ஒன்பது பண்புகள்) ... எனவே நமக்கு அவர் மீது மரியாதை உண்டு.. நமது உள்ளத்தில் புத்தருக்கு நிறைய இடம் உண்டு. புத்தர் காட்டிய பாதையில் நமக்கு முழு நம்பிக்கை உண்டு.
ஒழுக்கம்(sīla): ஐந்து சீலங்களை கடைப்பிடித்தல். ஐந்து சீலங்களாவன: கொல்லாமை, களவாமை, தவறான பாலியல் உறவுகள் கொள்ளாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை.
போதனைகள் பற்றிய அறிவு(suta): இது PhD பட்டம், கணினி சம்பந்தப்பட்ட அறிவு போன்றவை அல்ல. PhD பட்டம் மறுமையில் நல்ல பிறவிக்கு எடுத்துச் செல்லாது.
தம்மம் பற்றிய அறிவு தான் நல்ல பிறவிக்கு எடுத்துச் செல்லும். புத்தரின் போதனைகளை சரியாக புரிந்து கொள்ளல். நம்மை பயமுறுத்துவதற்காக நரகத்தை பற்றி எல்லாம் புத்தர் பேசவில்லை. நிலையான சொர்க்கம் இருப்பதாக தவறாகவும் சொல்லவில்லை. வாய்மையே பேசினார். ஒழுக்கம், தயாள குணம், நிலையாமை, நிப்பாணம், அட்டாங்க மார்க்கம் போன்றவற்றை கற்றல்.
தயாள குணம்(cāga): பகிர்ந்தல், கொடுத்தல். தயாள குணத்தால் புண்ணியம் சேரும். முக்கியமாக நமது பற்று, பேராசை, உலோபம் குறையும்.
மெய்யறிவு, விவேகம்(paññā): உலகின் உண்மை இயல்பு விளங்குதல்.
உதாரணமாக நமது கண்ணை நான், என்னுடையது, என் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நினைக்கின்றோம். இது தவறான கருத்து. கண் மீதுள்ள பற்றை குறைக்க வேண்டும் என்றால் இவ்வாறு நினைக்க வேண்டும்:
கண்நிலையற்றது, உருவங்கள் நிலையற்றன, கண் உணர்வு நிலையற்றது, கண் தொடர்பு (கண் - உருவம் - கண் உணர்வு ஆகிய மூன்றின் தொடர்பு, மணிமேகலையில் 'ஊறு' எனப்படும்) நிலையற்றது. அந்தத் தொடர்பினால் உண்டாகும் நுகர்ச்சி, குறிப்புகள், எண்ணங்கள் அவை இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும், இரண்டும் அற்றதாக இருந்தாலும் அவை எல்லாம் நிலையற்றன. இவ்வாறு தெளிவுர உணர்தல் வேண்டும். (சங்யுத்த நிகாயம் 35.235).
ஃஃஃ
Comments
Post a Comment