ஆரிய மார்க்க சுத்தம்

ஆரிய மார்க்க சுத்தம்: மேன்மையான பாதை

Ariyamagga Sutta: The Noble Path  AN 4.237
translated from the Pali by Thanissaro Bhikkhu

"துறவிகளே, நான்கு விதமான செய்கைகளை நான்  நேரடியாக அறிந்து,, சரிபார்த்து,தெரியப்படுத்தியுள்ளேன். எந்த நான்கு?

1. இருளான செயல், அதனால் இருளான விளைவு.
2. பிரகாசமான செயல், அதனால் பிரகாசமான விளைவு.
3. இருளான மற்றும் பிரகாசமான செயல், அதனால் இருளான மற்றும் பிரகாசமான விளைவுகள்.
4. இருளற்ற பிரகாசமுமற்ற செயல்‌, அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு. இது கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும்.

'இருளான செயல் அதனால் இருளான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் (மனம், சொல், உடல்)  புண்படுத்தும் செய்கையில் ஈடுபட்டால், அதன் காரணமாக அவர் ஒரு புண்படுத்தும் உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தும் ஊறுகளால் [1] தொடப்படுகிறார். புண்படுத்தும் ஊறுகளால் தொடப்பட்ட அவர், நரகத்தில் உள்ள ஜீவன்களைப்போலவே, முழுமையாக துன்பமான நுகற்சிகளையே அனுபவிக்கிறார்.  இதுவே 'இருளான செயல் அதனால் உண்டாகும் இருளான விளைவு', என்பது.

'பிரகாசமான செயல் அதனால் பிரகாசமான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் புண்படுத்தாத செய்கையில் ஈடுபட்டால், அதன் காரணமாக  அவர் ஒரு புண்படுத்தாத உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தாத ஊறுகளால் தொடப்படுகிறார். புண்படுத்தாத ஊறுகளால் தொடப்பட்ட அவர், அழகிய கரும் தேவர்களைப் போலவே, மிகவும் இன்பமான நுகற்சிகளை அனுபவிக்கிறார், . இதுவே 'பிரகாசமான செயல் அதனால் உண்டாகும் பிரகாசமான விளைவு', என்பது. [2]

'இருளான மற்றும் பிரகாசமான செயல் அதனால் இருளான மற்றும் பிரகாசமான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத செய்கையில் [3] ஈடுபட்டால், அதன் காரணமாக அவர் ஒரு புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத ஊறுகளால் தொடப்படுகிறார்.   புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத ஊறுகளால் தொடப்பட்ட அவர், மனிதரும் சில தேவர்களும், கீழ் லோகங்களில் உள்ள சிலரும் அனுபவிப்பது போலவே, இன்பமும் துன்பமும் கலந்த நுகற்சிகளை அனுபவிக்கிறார். இதுவே 'இருளான மற்றும் பிரகாசமான செயல் அதனால் உண்டாகும் இருளான மற்றும் பிரகாசமான விளைவு', என்பது.

'இருளற்ற  பிரகாசமுமற்ற செயல்‌, [4] அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு, கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்வது', என்றால் என்ன?
நற்காட்சி,
நற்கருத்து ,
நல்வாய்மை,
நற்செய்கை,
நல்வாழ்க்கை,
நன்முயற்சி,
நற்கடைப்பிடி,
நல்லமைதி
இதுவே, 'இருளற்ற  பிரகாசமுமற்ற செயல்‌. அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு. இது கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும்', என்பது.

துறவிகளே, இவையே நான்கு விதமான செய்கைகள். நான்  நேரடியாக அறிந்து, சரிபார்த்து, தெரியப்படுத்தியவை."

ஃஃஃ

ஆதாரம் https://www.dhammatalks dot org/suttas/AN/AN4_237.html  தணிசாரோ பிக்கு

குறிப்புகள்:

[1]
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
      மணிமேகலை 30,88-89
ஊறு (பஸ்ஸ contact) =
உள்ளம் (consciousness) +
வாயில் (sense organs) +
வேறு புலன்கள் (external objects)

உதாரணமாக: கண் உணர்வும், கண்ணும், உருவமமும் சேரும் போது கண் ஊறு உண்டாகிறது. அதிலிருந்து தோன்றுவன: நுகர்ச்சி (feelings), குறிப்பு(perception) எண்ணங்கள் (volitional formation)

[2]
பிரகாசமான செயலில் ஆசை கலந்துள்ள படியால், அதாவது நல்ல விளைவு கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் கலந்திருக்கிறது என்பதால் அது கன்மத்தை முடிக்கும் செயல் அல்ல. சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லும், மறுபிறப்பை தடுக்காது.

[3] ஒரே சமயத்தில் புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத செயல்களில் ஈடுபட முடியாது என்றாலும் இப்படிப்பட்டவரின் செய்கைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவை இரண்டும் கலந்துள்ளவையாகவே தோன்றுகின்றன.  அதாவது இரண்டில் ஒன்றை அதிகமாக செய்வதாக தெரிவதில்லை.

[4] இது என்வழி பாதையில் சென்று ஞானம் பெற்றவர்களின் செய்கையை குறிக்கும். அருகர்கள் செய்கைகளில் ஈடுபட்டாலும் அவற்றினால் வினை பயன் தோன்ற சாத்திய கூறுகள் இல்லை.

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை