கிழவன் அழகா, குமரன் அழகா?


எண்ணங்கள் மனத்திலிருந்தே தோன்றுகின்றன. 
மனமே முதன்மையானது.
தீய எண்ணத்துடனான பேச்சும் , செயற்பாடும் ஏற்படுத்தும் துன்பம், வண்டியை இழுத்துச்செல்லும் காளையின் காலடியைத் தொடரும் வண்டிச்சக்கரத்தைப் போலத் தொடரும்.
தூய எண்ணத்துடனான பேச்சும், செயற்பாடும் ஏற்படுத்தும் நன்மை, 
விட்டுப் பிரியாத நிழலைப்போலத் தொடரும். 
(தம்மபதம் 1,2)

எனவே ஒழுக்கம், பண்பு, சீலம், உள்ளத்தூய்மை போன்ற இயல்புகளுக்கு பௌத்தம் முக்கியத்துவம் தருகிறது.

அந்த தூய்மைதான் வயோதிகத்திலும் அழகு சேர்க்கிறது என்கின்றார் சேக்கிழார்.

இளமையைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோம்!  Anti-aging பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர் மக்கள்.  எங்கு பார்த்தாலும் botox ஊசி விளம்பரம்!  உண்மையான அழகு எங்குள்ளது? சேக்கிழார் வரிகளுக்கு வாரியார் அவர்களின் விளக்கம் பார்க்க..

(கிருபானந்த வாரியார் பேச்சிலிருந்து தொகுத்தது)

வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.

-சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டு
(12 ஆம் திருமுறை / பெரிய புராணம் - திருநீலகண்ட நாயனார் புராணம்)


ஒழுக்கமே வடிவான நாயனாருக்கு 90 வயது வந்து நடுக்கம் உண்டாகி விட்டது. ரொம்ப நல்லவரு. அந்த கிழத்தனத்தச் சொல்ல வந்தவரு யாரு? சோழ நாட்டு முதலமைச்சர் உத்தமச்சோழ பல்லவர்னு பட்டம் வாங்கினவர். தொண்டைநாட்டிலே பிறந்த ஞானமுத்து சேக்கிழார்.

மூப்பு என்றால் கிழத்தனம்.

''வடிவுறு மூப்பு வந்து.. "

அழகிய மூப்பு என்றார். மெனக்கெட்டுச் சொல்லராரு. அந்த தெய்வச்சேக்கிழார் நம்மை என்ன உணர்த்த வருகிறார்? அழகு கிழத்தனத்துலே இருக்கிறது என்று அர்த்தம். இது நம்ம அறிவுக்கு பொருந்தவில்லை. அழகு கிழத்தனத்துலே இருக்கு....

உங்கள நான் கேட்கிறேன். கிழவி அழகா, குமரி அழகா? கிழவிய எவன் கண்டு பார்த்து மதிப்பான்? கிழவன் அழகா, குமரன் அழகா? 24 வயசுல மன்மத வடிவு. 90 வயதுல .. எங்கெங்கேயோ வருது இதுக்கு வருலேயேன்னுவான் (சிரிப்பு). ஏன் இன்னம் உட்கார்ந்துக்கிட்டு பூமிக்கு பாரமா இருக்கேன்னுவாங்க. அது உலக இயல்பு...

ஆனா அந்த சேக்கிழார் பெருமான் கிழத்தனத்துல தான் அழகு இருக்குன்னு திட்டவட்டமா சொல்ரார். ஆனா உலகியல்புக்கு பொருந்தல. கிழவி அழகில்ல, கிழவன் அழகில்ல. குமரன் அழகு. குமரி அழகு.

உங்களுக்கு எப்ப சந்தேகம் வருதோ, செயற்கையை விட்டு இயற்கைக்கு போங்க. இயற்கை என்னைக்கும் ஒன்னு போல இருக்கும். கடல் ஒன்னு போல இருக்கும். குளத்துத்தண்ணி கூடும் குறையும். பழச்செடிகள் உள்ள இடத்துக்கு போங்க. மாம்பழம்.. கொய்யாப் பழம்... இப்ப சொல்லுங்க

வாழக்காய் அழகா, வாழப்பழம் அழகா? (கூட்டத்திலிருந்து வரும் பதில்) வாழப்பழம் தான் அழகு.

மாங்காய் அழகா, மாம்பழம் அழகா? மாம்பழம் தான் அழகு.

அப்ப காய் அழகில்ல கனிதானே அழகு. அப்ப நம்ப வீட்டுல கிழவிதானே அழகா இருக்கனும்? (சிரிப்பு)

இரண்டு சாட்சிகள் சொல்லரன். கேளுங்க.

காமகோடி பெரியவர். அந்த வயோதிக பருவத்திலே ஞானப்பழமாக அருள் ஒழுகின்ற தன்மையோட அவர் படம் விளங்குவதைப் பார்க்கலாம்.

காங்தி அடிகள். பிரசித்தியமானவர். அவரு பேரிஸ்டராக கோட்டு போட்டுகிட்டு படம் எடுத்திருக்காரு. குஜராத்தி மாதிரி தலைகுடை கட்டிக்கிட்டு படம் எடுத்திருகாரு. 

கீழ ஒரு வேட்டி மேல ஒரு ..(துணியோட) அறை நிருவாணமா கோனல் மானலுமா எடுத்திருக்கிர படம் தான் உலகத்த மயக்குது. முகத்தில அருள் வழியுது. காந்தி அடிகள் இளமையிலே எடுத்த படத்துல (வாலிப) அழகு இருக்குது. முதுமையில எடுத்த படத்துல அருள் வெள்ளம் வழியுது.

நம்ம வீட்டுக் கிழவர்கள் ஏன் அழகில்ல என்கிறீங்க? இவர்கள் பழுக்கல..வெம்பிப்போனவர்கள். (சிரிப்பு. கைத்தட்டல்). ஒருகிழவனுக்கு ஆசா பாசம் போகல. நான் இங்க உட்கார்ந்திருக்கிறது வியாசர் பீடம். தெய்வங்கள் எல்லாம் பின்னாலே இருக்குது. 

ஒரு கிழவரைப் பார்த்து ' பெரியவரே கல்யாணம் பண்ணிக்கிரியா?' என்று வேடிக்கையா கேட்டேன்.

'பையனுங்க ஒத்துக்கமாட்டாங்களே,' என்றாரு. (சிரிப்பு)

பல்லு போன பின் ஏன் வெத்திலை பாக்கு? அதை ஏன் இடிச்சு ஊத்துங்கிர.. முருக்கு சுட்டா பொடிபன்னி கொண்டான்றான்.. (சிரிப்பு) விட்டுத்தொலையேன்!

நம்ம வீட்டு கிழவர், கிழவிகளெல்லாம் ஆசையினாலே வெம்பிப்போனவர்கள்.

காமகோடி பெரியவர் தூய பிரமச்சாரி. காந்தி அடிகள் 37 வயதுக்கு பின்னர் தூய பிரமச்சாரி. அந்த அருளாலே ஞானத்தாலே பழுத்தவர்கள். அதனாலே அவர்கள் பழுத்தும் அழகாகின்றார்கள்.

இவ்வளவு பெரிய மகத்தான தத்துவத்தை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான்

வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் 
அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் ... 

என்றார்.

(தம்பிரான் - சிவன். மூப்பாகியும் சிவன் மீதிருந்த அன்பு நீங்கவில்லை)

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

சிறிய பௌர்ணமி தின போதனை