நன்றி மறவாமை

இது பகவரின் வாக்கு.

"துறவிகளே, உலகில் இந்த இரு வகையான மனிதர்களைக் காண்பது அரிது. எவ்விரண்டு? "அன்பை முதலில் விளைவிக்கும் ஒருவர்.
அன்பைப் பெற்றவர், நன்றியை மறவாதது மட்டுமின்றி அந்த அன்பைத் திருப்பித் தரவேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாக நினைப்பவர் மற்றவர்."    (காண்பது அரிது,  துள்ளபா சூத்திரம்.  அங்குத்தர நிகாயம் AN 2:118)

“Monks, these two people are hard to find in the world. Which two? The one who is first to do a kindness, and the one who is grateful for a kindness done and feels obligated to repay it. These two people are hard to find in the world.”   Hard to find, Dullabhā Sutta (AN 2:118)

புத்தர் இவ்விரு பண்புகளையுமுடையோர் அபூர்வமானவர் என்கின்றார்.

நாமும் எப்படி இத்தகைய அபூர்வமான மனிதாராக முடியும்?

இவ்விரு பண்புகளையும் ஒருசேர வளர்த்துக் கொள்ள வேண்டும்.உள்ளப்பூர்வமாக நன்றி உணர்வு எப்போது தோன்றுகிறது?

1. இன்னொருவர் காட்டிய அன்பு நமக்கு உண்மையிலேயே நன்மை பயப்பதாக இருக்கும் போது.
2. மற்றவர் செய்த செய்கை நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டது என்பதை நாம் நம்பும்போது.
3. நமக்கு அன்பு காட்டியவர் நமக்காக முயன்று செய்தார் என்பதை நாம் உணரும் போது.

அதே போல அன்பு காட்டுபவரும் மேற்கூரிய மூன்றையும் மனதில் வைத்திருக்க வேண்டும்.


நன்றி மறவாமல் இருப்பது பற்றி வாரியார் சுவாமிகள் கூறியது:

"நாம என்ன பாவத்தைப் பண்ணினாலும் பண்ணலாம் ஆனால் நன்றி மறக்கிற பாவத்தைப் பண்ணக்கூடாது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை,
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
                என்பார் திருவள்ளுவர். (குறள் - 110)

(பொருள்: உலகில் எந்த நன்மையைச் சிதைத்தவர்களுக்கும் அதிலிருந்து உய்த்தல் கூடும்; ஆனால் பிறர் செய்த நன்றியைக் கொன்றவர்க்கு உய்யும் வழியே கிடையது. All sins can be redeemed except ingratitude.)

பசுவின் மடியை அறுத்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டு.
கற்புடைய பெண்ணின் கருவைச் சிதைத்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டு.
தாய் தந்தையை இகழ்ந்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டு.
நன்றி மறந்தவனுக்குக் கழுவாய், பிராயச்சித்தம் கிடையாது.

(கழுவாய்: கழுவு + வாய். Purification, expiation from sin பிராயச்சித்தம்)

மன்னிக்கப்படாத குற்றம் ஒன்று - நன்றி மறப்பது.

'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
உய்தி உண்டு
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லை
என,
அறம் பாடிற்று
என்பது புறநானுறு.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார். (குறள் - 104)

(பொருள்: உதவி பெற்றவர். 'இது என்ன பெரிய உதவி' என்று உதவியைச் சிறுமைப் படுத்தக்கூடாது. உதவியின் பயனை அறிந்தவர்கள், பிறர் தமைக்குத் தினையளவு நன்மை செயினும் அதைப் பனையளவிற்றாகப் பெருமைப் படுத்திக் கொள்வர். (The discerning do not minimize the aid they received. To them even a millet of aid is as big as a palm fruit.)

உங்களை எல்லாம் தலை வணங்கி அடியேன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி மறக்கக் கூடாது. நன்றி மறவாமை மிக மிக உயர்ந்த பண்பு."

இவ்வாறு வாரியார் சுவாமிகள் கூறினார்.

அவர் சுட்டிக் காட்டிய புறநானுறு (பாடல் - 34) வரிகளும் விளக்கமும் கீழ் வருமாறு

'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
'நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ.

இப்பாட்டில் புலவர், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க,

'அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே! (ஆயிழை கணவ) பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும், சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும், பெரியோர்கள் வருந்தக் கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும்,

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து நன்றி கொன்றோர்க்கு அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.


நன்றி:

வாரியார் சுவாமிகள் காணொளி
Dullabhā Sutta (AN 2:118)  Thanissaro Bhikku
புறநானூறு மொழிபெயர்ப்பு
குறள் மொழிபெயர்ப்பு:  International Tamil Language Foundation Tirukkural

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை