நாகுலரின் தந்தை

Nakulapitu Sutta
சங்யுத்த நிகாயம் SN22.1

இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் முதலை மலை பக்கர்களின் நாட்டில், பெசகலா வனத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கியிருந்தார்.

அப்போது இல்லறத்தார் நாகுலரின் தந்தை புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் கேட்டது:
"ஐயா, நான் வயோதிகன், மூத்தோன். வயதில் முதிர்ச்சி அடைந்துள்ள நான், வாழ்க்கையின் கடைசி கட்டத்திளுள்ளேன். எனது உடல் நலம் தொடர்ந்து குறைபாடுடனே இருக்கிறது. பிக்குகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. பகவர் எனக்கு அறிவுரையூட்டி, கற்பிப்பாராக. அது என்னுடைய நீண்ட நாள் நன்மைக்கும், மகிழ்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்."

"உண்மைதான் இல்லரத்தாரே, நீங்கள் சொல்வது உண்மைதான். வருத்தங்கள் நிரம்பிய இந்த உடல், அதன் உருவத்தில் சிக்கிக்கொண்டு, துன்பம் அனுபவிக்கிறது. இந்த உடலை இழுத்துக் கொண்டு செல்பவர் எவரும், ஒரு நிமிடம் கூட அது ஆரோக்கியமாக இருப்பதாக கூறினால், அதை மடமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

எனவே இவ்வாறு பயிற்சி செய்யுங்கள், 'என் உடல் துன்பத்துக்காலானாலும், என் மனம் ஆரோக்கியமாக இருக்கும்'. அவ்வாறு நீங்கள் நினைத்து பயிற்சி செய்ய வேண்டும்."

இல்லரத்தார் நாகுலரின் தந்தை புத்தர் சொன்னதை கேட்டு மகிழ்ந்தார், களிப்புற்றார், அதை அமோதித்தார். பின்னர் அவர் இருப்பிடத்திலிருந்து எழுந்து, புத்தரை வணங்கி, வலம் சுற்றி வந்து, விடைபெற்றார். பின் போற்றுதற்குரிய சாரிப்புத்தரிடம் சென்று வணங்கி, ஒரு புறம் அமர்ந்தார். சாரி புத்திரர் அவரிடம்:

"இல்லறத்தாரே, உங்கள் இந்திரியங்கள் தெளிவாக இருக்கின்றன. உங்கள் வண்ணம் தூய்மையாகவும், பளீச்சென்றும் இருக்கிறது. இன்று புத்தரிடம் தர்ம உரை கேட்டீர்களா?"

"வேறென்ன காரணமாக இருக்க முடியும், ஐயா? ஆம், புத்தர் இப்போது தான் எனக்கு ஒரு அருமையான தர்ம உரை கொடுத்தார்."

"எப்படிப்பட்ட தர்ம உரையை புத்தர் உங்களுக்கு கொடுத்தார்?"

நாகுலரின் தந்தை சாரிபுத்தரிடம் நடந்ததை எல்லாம் கூறினார். "இப்படிப்பட்ட தர்மபுரையை தான் புத்தர் எனக்கு போதித்தார்."

"ஆனால், நீங்கள் புத்தரிடம் அடுத்து ஒரு கேள்வி கேட்கவில்லையா? 'ஐயா, எப்படி ஒருவர் உடலிலும் துன்பம் காண்பார், மனதிலும் துன்பம் காண்பார்? எப்படி ஒருவர் உடலில் துன்பம் இருந்தும், மனதில் ஆரோக்கியமாக இருப்பார்?'

"ஐயா, அதன் பொருளை சாரிபுத்திரரிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு, நீண்ட தூரம் வரவும் நாங்கள் தயாராக இருப்போம். போற்றுதற்குரிய சாரி புத்திரர் அதன் பொருளை தெளிவாக்குவாராக."

"அப்படி என்றால் இல்லறத்தாரே, கவனமாக கேளுங்கள் நான் பேசுகிறேன்."

"சரி, ஐயா", என்று நாகுலரின் தந்தை கூறினார். சாரிப்புத்திரர் தொடர்ந்தார்:

"எவ்வாறு ஒருவர் உடலிலும் துன்பம் காண்பார், மனதிலும் துன்பம் காண்பார்? 

இங்கு ஒரு சாதாரண மனிதர், படிக்காதவர், சான்றோரை பார்க்காதவர், சான்றோரின் பண்புகளை அறியாதவர், அவற்றில் பயிற்சி பெறாதவர். நல்லவர்களைக் கூட பார்த்ததில்லை, நல்லவர்களின் பண்புகளையும் தெரிந்ததில்லை. அப்படிப்பட்டவர்,
உருவம் தான் தான் என்றும்,
தான் உருவத்தின் சொந்தக்காரர் என்றும்,
தனக்குள் உருவம் இருப்பதாகவும்,
அல்லது உருவத்தில் தான் இருப்பதாகவும் நினைக்கின்றார்.

'நான் தான் உருவம், உருவம் என்னுடையது!' என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைக்கிறது.

ஆனால் அந்த உருவம் மாறும் போது, அழியும் போது, மறையும் போது அவருக்கு அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியும், துன்பமும் உண்டாகிறது. 

(அதேபோல் நுகர்ச்சி, குறிப்பு, பாவனை, உணர்வு.) [1]

அவர் நுகர்ச்சி தான் தான், தான் நுகர்ச்சிக்கு சொந்தக்காரர் என்றும்
தனக்குள் நுகர்ச்சி இருப்பதாகவும் அல்லது நுகர்ச்சியில் தான் இருப்பதாகவும் கருதுகின்றார். 
நான்தான் நுகர்ச்சி. நுகர்ச்சி என்னுடையது என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைக்கிறது. 
ஆனால் அந்த நுகர்ச்சி மாறும் போது, மறையும் போது அவருக்கு அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியும், துன்பமும் உண்டாகிறது. 

அவர் குறிப்பு தான் தான், ... என்று நினைக்கின்றார். நான்தான் குறிப்பு. குறிப்பு என்னுடையது என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைக்கிறது...

அவர் பாவனை (எண்ணங்கள்) தான் தான், ... என்று நினைக்கின்றார். நான்தான் பாவனை. பாவனை என்னுடையது என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைக்கிறது...

அவர் உணர்வு தான் தான், ... என்று நினைக்கின்றார். நான்தான் உணர்வு. உணர்வு என்னுடையது என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைக்கிறது...

இப்படித்தான் ஒருவர் உடலிலும் துன்பம் காண்கிறார், மனதிலும் துன்பம் காண்கிறார்.

எப்படி ஒருவர் உடலில் துன்பம் இருந்தும், மனதில் ஆரோக்கியமாக இருப்பார்?'

இங்கு ஒரு கற்ற நற்குணமுடைய (ஆரிய) சீடர், சான்றோரை பார்த்தவர், சான்றோரின் பண்புகளை அறிந்தவர், அவற்றில் பயிற்சி பெற்றவர். நல்லவர்களைப் பார்த்தவர், நல்லவர்களின் பண்புகளைத் தெரிந்தவர். அப்படிப்பட்டவர் இவ்வாறு நினைப்பதில்லை: 
உருவம் தான் தான் என்றும்,
தான் உருவத்தின் சொந்தக்காரர் என்றும்,
தனக்குள் உருவம் இருப்பதாகவும்,
அல்லது உருவத்தில் தான் இருப்பதாகவும் நினைப்பதில்லை.

' நான் தான் உருவம், உருவம் என்னுடையது!' என்ற எண்ணங்கள் அவரை ஆட்டிப்படைப்பதில்லை.

அதனால் அந்த உருவம் மாறும் போது, அழியும் போது, மறையும் போது அவருக்கு அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியும், துன்பமும் தோன்றுவதில்லை. 

(அதேபோல் நுகர்ச்சி, குறிப்பு, பாவனை, உணர்வு......)

நான் தான் நுகர்ச்சி, நுகர்ச்சி என்னுடையது!'
என்று நினைப்பதில்லை.....
நான் தான் குறிப்பு, குறிப்பு என்னுடையது!'
என்று நினைப்பதில்லை.....
நான் தான் பாவனை, பாவனை என்னுடையது!'
என்று நினைப்பதில்லை.....
நான் தான் உணர்வு, உணர்வு என்னுடையது!'
என்று நினைப்பதில்லை.....

இவ்வாறு ஒருவர் உடலில் துன்பம் இருந்தும், மனதில் ஆரோக்கியமாக இருப்பார்.

இப்படி போற்றுதற்குரிய சாரி புத்திரர் கூறினார். திருப்தி அடைந்த நாகுலரின் தந்தை, சாரிபுத்திரர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தார்.

ஃஃஃ

குறிப்பு: [1]
தம்ம சக்கப் பவத்தன சுத்தத்தில் (SN56.11
Dhammacakkappavattana Sutta) துக்கம் இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது:

(நவாலியூர் சோ. நடராசன்) - துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம் - சுருக்கமாகக் கூறுவதானால் பஞ்சஉபாதானக்கந்தமும் துக்கமே.

இதன் கடைசி வரி தான் இந்த சுத்தத்தில் - இந்த ஜந்து கந்தங்களோடு பற்றுக் கொள்ள வேண்டாம், பற்றுக் கொண்டால் துக்கம் உண்டாகும் - என்று விளக்கப்பட்டிருக்கிறது: 

--சுருக்கமாகக் கூறுவதானால் பஞ்சஉபாதானக்கந்தமும் துக்கமே.
—saṅkhittena pañcupādānakkhandhā dukkhā. 
--In brief, the five grasping aggregates are suffering.

உபாதான என்றால் பற்று, பிடி, grasping 
பஞ்சகந்தம் pañca-kantam The five constituent elements of Being, 
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன (மணிமேகலை 30,189-190)

ஐவகைக் கந்தங்கள் - Five aggregates (Khandhas):
உருவம் form (rūpa)
நுகர்ச்சி feeling (vedanā)
குறிப்பு perception (sañña) 
பாவனை formation (saṅkhāra)
உள்ள அறிவு/உணர்வு consciousness (viññāna)  

ஃஃஃ

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை