மத்தா என்ற பேய்

 

Mar 3, 2024 பாந்தே Sasanawanse போதனையில் விளக்கப்பட்ட சுத்தம்


பேத வத்து (பேய்க் கதைகள்)

Pv 2.3 மத்தா சுத்தம்

மத்தா என்ற பேய்


சிறு தீச்செயல்களும் பெரும் துன்பத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் என்பதை விளக்கும் கதை.


திஸ்ஸா என்ற இல்லாள் ஒரு பெண் பேய்யைப் பார்த்து இவ்வாறு கேட்கிறாள்,


திஸ்ஸா:

நிர்வாணமாகவும் அருவருக்கத்தக்க உருவமும் கொண்டுள்ளாய். உனது நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கின்றன. விலாவெலும்புகள் தெரியும் அளவு ஒல்லியானவளாக உள்ளாய். நீ யார்?


மத்தா (பேய்):

எனது பெயர் மத்தா. நீ திஸ்ஸா. நினைவில்லையா உனக்கு? நான் உனது கணவனின் மறு மனைவி. பல தீயச் செயல்களைச் செய்ததால், இப்போது பேய் உலகில் பிறந்துள்ளேன்.


திஸ்ஸா:

பேய் உலகில் பிறப்பதற்கு உடலாலும் பேச்சாலும் அல்லது மனத்தாலும் அப்படி என்ன தீயச் செயல்களை செய்தாய்?


மத்தா:

சுலபமாக கோபம் கொண்டேன், கடுமையாக பேசினேன். பேராசையும், பொறாமையும், கபடமும் கொண்டேன். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் பேய் உலகில் மறு பிறப்பெடுத்தேன்.


திஸ்ஸா:

ஓ ஆமாம், எனக்கு நினைவு இருக்கிறது. அந்நாளில் மிகவும் சண்டகோபியாய் இருந்தாய். மற்றொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீ ஏன் மண்ணால் பூசப்பட்டுள்ளாய்?


மத்தா:

உனக்கு நினைவிருக்கிறதா, ஒரு நாள் நீ குளித்துவிட்டு புதிய துணிகளை அணிந்திருந்தாய். நான் உன்னை விட அழகாக இருக்க விரும்பினேன். எனவே உன்னை விட அழகான துணிகளை அணிந்துக் கொண்டேன். ஆனால், நமது கணவர் உன்னிடம் தான் அதிகம் பேசினார். உனக்கு தான் அதிகம் கவனம் செலுத்தினார். அது என்னை மிகவும் பொறாமை கொள்ள வைத்தது. நான் கோபம் கொண்டேன். கீழே இருந்த மண்ணை எடுத்து உன் மீது வீசினேன். அந்த தீயச் செயலின் காரணமாக இப்போது மண் பூசப்பட்டவளாக தோன்றுகிறேன்.


திஸ்ஸா:

ஓ ஆமாம், நீ என் மீது மண் எறிந்த நாள் நினைவுக்கு வருகிறது. மற்றொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீ ஏன் உடல் முழுவதையும் சொரிந்து கொண்டிருக்கிறாய்?


மத்தா:

ஒரு நாள் நாம் இருவரும் காட்டுக்குள்ளே சென்று மூலிகைக்களுக்கான செடிகளைப் பறிக்கச் சென்றோம். நீ மூலிகைகளை பிடுங்கி வந்தாய், நானோ உடலை அரிக்க வைக்கும் செடிகளை பிடுங்கி வந்தேன். யாருக்கும் தெரியாமல் உனது படுக்கையில் அதனை தூவி விட்டேன். அந்த தீச்செயலின் காரணமாக இன்று எனது உடம்பு முழுவதும் அரித்துக் கொண்டிருக்கிறது.


திஸ்ஸா:

ஆமாம் அந்த ஒரு காலை நேரம் எனது உடல் மிகவும் அரித்தது என்பது ஞாபகம் வருகிறது. மற்றொரு கேள்வி: நீ ஏன் நிர்வாணமாக இருக்கிறாய்?


மத்தா:

ஒரு நாள் நமது நண்பர்களும் உறவினர்களும் ஏதொ ஒரு கொண்டாட்டத்திற்காக கூடினார்கள். அதற்கு நீயும் நமது கணவரும் அழைக்கப்பட்டிருந்தீர்கள். ஆனால் நான் அழைக்கப்படவில்லை. அதனால் பொறாமை கொண்டு, அன்று நீ அணிய விரும்பிய துணிகளை திருடி விட்டேன். அதன் காரணமாக இன்று நிர்வாணமாக திரிந்துக் கொண்டிருக்கிறேன்.


திஸ்ஸா:

ஆமாம், ஆமாம், நீ எனது துணிகளைக் களவு செய்த அந்த இரவு எனக்கு நினைவுக்கு வருகிறது. மற்றொரு கேள்வி: நீ ஏன் மலத்தின் துர்நாற்றம் கொண்டுள்ளாய்?


மத்தா:

நீ நல்ல வாசனைத்திரவியங்களையும், ஒப்பனைப் பொருட்களையும், மலர் மாலைகளையும் வைத்திருந்தாய். அவற்றை நான் மலசல குவியலில் தூக்கி எறிந்தேன். ஆதனால் இப்போது நான் துர்நாற்றம் கொண்டவளாக உள்ளேன்.


திஸ்ஸா:

ஓ, என்னுடைய வாசனைத்திரவியங்களும், ஒப்பனைப் பொருட்களும், மலர் மாலைகளும் மலசல குவியலில் கண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் உன்னை கேட்க விரும்புகிறேன், நீ ஏன் இவ்வளவு துன்பம் அனுபவிக்கின்றாய்?


மத்தா:

நமது வீட்டில் இருந்த சொத்து நம் இருவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால் இப்போது துன்பம் அனுபவிக்கின்றேன். நீ என்னை அப்போதே எச்சரித்தாய், "தீய செயல்களை செய்கிறாய், தீயச் செயல்களில் இருந்து மகிழ்ச்சி ஒருபோதும் வராது!" என்று.


திஸ்ஸா:

நீ என்னை ஒரு எதிரியாக தவறாக எண்ணிக் கொண்டாய். நான் உனக்கு உதவி செய்வதற்கு தான் எண்ணினேன். என் மீது மிகவும் பொறாமையும் கொண்டிருந்தாய். அந்தத் தீயச் செயல்களின் விளைவுகளை நீ இப்போது அனுபவிக்கின்றாய். உனக்கு பல பணிப்பெண்களும் வேலையாட்களும் இருந்தார்கள். ஏகப்பட்ட ஆபரணங்களும் வைத்திருந்தாய். ஆனால் அவற்றையெல்லாம் இன்று மற்றவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். செல்வம் நிரந்தரமானது அல்ல.


பூதாவின் (அவர்கள் இருவருள் ஒருவரின் மகன்?) தந்தை சந்தையிலிருந்து விரைவில் வருவார். அவர் உனக்கு ஏதேனும் தரலாம். எங்கேயும் போக வேண்டாம். அவர் வரும் வரை காத்திரு.


மத்தா:

நான் நிர்வாணமாகவும், நரம்புகள் புடைத்துக் கொண்டு அசிங்கமாகவும் உள்ளேன். ஒரு பெண் இப்படி இருப்பது வெட்கமான விஷயம். பூதாவின் தந்தையை என்னை பார்க்க விடாதே.


திஸ்ஸா:

ஓ சரி, அப்படி யென்றால் நான் உன் மகிழ்ச்சிக்காக என்ன தருவது, நீ விரும்புவதை எப்படித் தருவது?


மத்தா:

நான்கு சங்கத்தாரை ஒரு கூட்டமாகவும், நான்கு சங்கத்தாரைத் தனித்தனியாகவும் அழைத்து, அவர்கள் எண்வருக்கும் உணவு தானம் தந்து, அதனால் சேரும் புண்ணியத்தை எனக்குச் அர்ப்பித்தால், நான் மகிழ்வேன். எனக்கு வேண்டியதைப் பெறுவேன்.


திஸ்ஸா:

சரி அவ்வாறே செய்கிறேன்.


சொல்படி எட்டு சங்கத்தாருக்கு உணவு தானமும் உடைகளையும் தந்து அதனால் சேர்ந்த புண்ணியத்தை மத்தாவிற்கு அர்ப்பித்தாள் திஸ்ஸா. அந்த தானத்தின் காரணமாக உண்ண உணவும், குடிக்க நீரும், உடுத்த உடையும் அந்த பேய்க்கு உடனே கிடைத்தன. அவள் தூயவளானாள். சுத்தமான, மென்மையான துணிகளையும் ஆபரணங்களையும் அணிந்து மீண்டும் திஸ்ஸாவிடம் வந்தாள்.


திஸ்ஸா:

தேவதை போன்ற அழகு உடையவளாக, ஒரு நட்சத்திரத்தைப் போல எல்லா திசைகளிலும் ஜொலிக்கின்ற நீ யார்?

ஏன் இவ்வளவு அழகாக உள்ளாய்? மனித பிறவியில் அப்படி என்ன புண்ணியம் செய்தாய், இவ்வாறு தோன்றுவதற்கு?


மத்தா:

எனது பெயர் மத்தா. நீ திஸ்ஸா. நினைவில்லையா உனக்கு? நான் உனது கணவனின் மறு மனைவி. பலத் தீய செயல்களைச் செய்ததால், பேய் உலகில் பிறந்தேன். ஆனால் உனது அன்பளிப்பைப் பெற்றபின் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். எதற்கும் பயப்படுவதில்லை.


என் சகோதரியே, நீ நீண்ட நாள் வாழ்க! உனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நீண்ட நாள் வாழ்க!


திஸ்ஸா:

ஆம் சகோதரி, ஒருவர் தம்ம வழியில் நடந்துக் கொள்ள வேண்டும். தானத்தை வழங்க நன்கு பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் ஒருவர் சொர்க்கத்தில் மறுபிறப்பு எடுத்து, சோகமற்று வாழ்வார்.


ஃஃஃ


Peta Vatthu 2.3 Mattā Sutta

: The Ghost Mattā

ஆதாரம்:

https://suttafriends dot org/sutta/pv2-3/


Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை