9.6 தம்மபதம் பின்னணி கதைகள்

 9.6 தம்மபதம் பின்னணி கதைகள் (தம்மப்பதம் செய்யுள் 122)

9.6 Dhammapada Atthakatha 

(Verse 122) 


கதைச் சுருக்கம்:

ஒரு ஞானி, புத்தர் 'தானம் வழங்குவதின் மகிமையையும், மற்றவர்களை தானம் செய்ய ஊக்குவிப்பதன் நன்மையையும்' பற்றி போதித்ததை கேட்டார். அதனால், அவர் புத்தரையும் சங்கத்தையும் அன்னதானத்திற்கு அழைத்தார். அதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் இந்த புண்ணிய செயலில் பங்கேற்கச் சொன்னார். ஆனால் பிளாளபாதகன் என்ற ஒரு மூட வணிகர், “தான் செய்ய முடியாத அளவை மீறி  ஏன் அழைக்க வேண்டும்?” என்று எண்ணி, மிகக் குறைவாகவே தானம் செய்தார். பின்னர், தன் குறுகிய மனப்பான்மை வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் கலங்கினார். அந்த ஞானி, தானம் செய்த அனைவரையும் புகழ்ந்தார். பிளாளபாதகன் மனம் மாறி, தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டார். அப்போது, புத்தர் ஒரு செய்யுளை உச்சரித்து தம்மத்தை போதித்தார்.


***


இந்த தம்ம போதனை, ஜேதவன விஹாரத்தில் தங்கியிருந்தபோது ஆசான் பிளாளபாதகன் என்ற செல்வவானை ஒட்டி வழங்கினார்.


ஒரு காலத்தில், சாவத்தி நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புத்தர் தலைமையிலான பிக்ஷுக்களின் சங்கத்திற்கு அன்னதானம் வழங்கினர்.


ஒருநாள், அந்த அன்னதானத்திற்கு நன்றி தெரிவிக்கும்போது, ஆசான் இவ்வாறு பேசினார்:


“குடிமக்களே, இவ்வுலகில் ஒருவர் தானம் செய்கிறார், ஆனால் மற்றவர்களை தானம் செய்ய ஊக்குவிக்கவில்லை; அவர் பிறவியெடுக்கும் இடங்களில் செல்வம் கிடைக்கும், ஆனால் சூழ்வோர் இருக்க மாட்டார்கள்.


இன்னொருவர் தான் தானம் செய்வதில்லை, ஆனால் மற்றவர்களை தானம் செய்ய ஊக்குவிக்கிறார்; அவர் பிறவியெடுக்கும் இடங்களில் சூழ்வோர் இருப்பார்கள், ஆனால் செல்வம் கிடைக்காது.


மூன்றாவது ஒருவர் தானம் செய்யவும் இல்லை, மற்றவர்களை ஊக்குவிக்கவும் இல்லை; அவர் பிறவியெடுக்கும் இடங்களில் செல்வமும் இல்லை, சூழ்வோரும் இருக்க மாட்டார்கள்; அவர் மற்றவர்கள் விட்ட உணவுகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.


இறுதியாக, ஒருவர் தானம் செய்கிறார், மேலும் மற்றவர்களையும் தானம் செய்ய ஊக்குவிக்கிறார்; அவர் பிறவியெடுக்கும் இடங்களில் செல்வமும் கிடைக்கும், சூழ்வோரும் கிடைப்பார்கள்.”


புத்தரின் தம்ம போதனையை கேட்டிருந்த ஒரு ஞானி, மனதில் எண்ணினார்:


“இது உண்மையில் அரிய போதனை! அந்த இரு ஆசீர்வாதங்களையும் பெறும் வகையில், உடனே புண்ணிய செயல்களைச் செய்வேன்.”


அதன்படி, ஆசான் புறப்படும்போது அவர் எழுந்து கூறினார்:


“போற்றுதற்குரிய ஐயா, நாளை எங்களது அன்னதானத்தை ஏற்கவும்.” 


“எத்தனை பிக்குகள் தேவை?” என்று ஆசான் கேட்டார். 


“போற்றுதற்குரிய ஐயா, உங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் வர வேண்டும்,” என்றார் அந்த ஞானி.


புத்தர் தயையுடன் வர ஒப்புக்கொண்டார்.


பின்னர், அந்த குடிமகன் கிராமத்திற்குள் சென்று, இடம் இடமாகச் சென்று அறிவித்தார்:


“தாய்மார்களே! பெரியோர்களே! நான் நாளைக்கு புத்தர் தலைமையிலான பிக்குக்களின் சங்கத்தை அன்னதானத்திற்கு அழைத்துள்ளேன். கஞ்சி மற்றும் மற்ற உணவுகள் தயாரிக்க தேவையான அரிசியையும் பிற பொருட்களையும் தாருங்கள். ஒவ்வொருவரும் தங்களால் எத்தனை பிக்குகளுக்குத் தர முடியுமோ அந்த அளவுக்கு உணவு பொருட்களை வழங்குங்கள். நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சமையல் செய்து, ஒன்றாக அன்னதானம் வழங்குவோம்.”


அந்த சமயத்தில், ஒரு செல்வவான், அந்த குடிமகன் தன் கடையின் வாசலில் வந்ததைப் பார்த்ததும் கோபமடைந்தான். மனத்தில் இவ்வாறு எண்ணினான்:


'இந்த குடிமகன், தன்னால் ஏற்ற அளவுக்கு பிக்குகளை அழைக்காமல், முழு கிராமத்தையும் தானம் செய்ய ஊக்குவிக்கிறான்!'


அவன் குடிமகனிடம் கூறினான்:


“நீ கொண்டு வந்த பாத்திரத்தை இங்கே கொண்டு வா.”


பின்னர், அந்த செல்வவான் தன் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய சிறிதளவு அரிசியை எடுத்து, அந்த குடிமகனுக்கு கொடுத்தான். அதேபோல், காராமணி மற்றும் இதர பயிறு வகைகளையும்  மூன்று விரல்களில்  எடுக்கும் அளவுக்கு மட்டும்  அளித்தான்.


அந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்த செல்வவானுக்கு “பிளாளபாதகன்” (பூனைக்கால்-சிறிதளவு என்று சொல்வதற்கு ஒப்பாகும்) என்ற பெயர் நிலைத்துவிட்டது.


அதேபோல், நெய் மற்றும் வெல்லம் வழங்கும்போதும், ஒரு கூடையை குடிமகனின் பாத்திரத்தில் வைத்தான். ஒரு மூலையை வெறுமையாக விட்டுவிட்டு (மேலும் அலட்சியப்படுத்தும் வகையில்), ஒவ்வொரு துளியையும் துண்டையும் தனித்தனியாக கொடுத்து, மிகக் குறைவாகவே அளித்தான்.


மற்றவர்கள் வழங்கிய தானங்களை அந்த குடிமகன் ஒன்றாக சேர்த்தார். ஆனால் அந்த செல்வவான் வழங்கிய பொருட்களை தனியாகப் பிரித்து வைத்தார்.


அதைப் பார்த்த பிளாளபாதகன் மனத்தில் எண்ணினான்:

“நான் கொடுத்ததை ஏன் தனியாக வைத்திருக்கிறான்?”


தன் சந்தேகத்தைத் தீர்க்க,  ஒரு வேலைக்காரனை அனுப்பி, “அவன் என்ன செய்கிறான் எனப் போய் பார்,” என்று கூறினான்.


அந்த குடிமகன், பிளாளபாதகன் வழங்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு,

“இந்த செல்வவானுக்கு செல்வம் பெருகட்டும்,” என்று கூறி, கஞ்சி மற்றும் அப்பத்தில்  இரண்டு மூன்று அரிசியை போட்டுவிட்டு, பயிரு வகைகள், நெய், வெல்லம் ஆகியவற்றை ஒவ்வொரு பாத்திரத்திலும் சிறு சிறு துளிகளாகப் பகிர்ந்தார்.


வேலைக்காரன் திரும்பி செல்வவானிடம் குடிமகன் செய்ததை சொன்னான்.


அதை கேட்ட பிளாளபாதகன் மனத்தில் எண்ணினான்:


“இந்த குடிமகன், எல்லோருக்கும் முன்னிலையில் என்னை பழிப்பதாயிருந்தால், என் பெயரை வாயில் எடுத்தவுடன், அவனை அடித்து கொன்றுவிடுவேன்.”


அடுத்த நாளில், அந்த செல்வவான் தனது உள்ளாடையின் மடிப்பில் ஒரு கத்தியைக் மறைத்து, சமூக உணவுகூடத்தருகே நின்று காத்திருந்தான்.


அந்த குடிமகன், புத்தர் தலைமையிலான பிக்குக்களின் சங்கத்தை உணவுகூடத்திற்குள் அழைத்துச் சென்றார். பின்னர், “போற்றுதற்குரிய ஐயா, என் பரிந்துரையின் பேரில் மக்கள் இந்த தானங்களை வழங்கியுள்ளனர்.


நான் தானம் செய்ய ஊக்குவித்த அனைவரும், தங்களால் முடிந்த அளவுக்கு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் பெரும் பலன் பெறட்டும்,” என்று புத்தரிடம் கூறினார்.


அந்த செல்வவான் இதைக் கேட்டதும், மனத்தில் எண்ணினார்:

“இந்த குடிமகன் என் பெயரை எடுத்துப் பழிப்பதற்காக வந்தால், அவனை தீர்த்துக்கட்டவே நான் இங்கு வந்தேன். உதாரணமாக, என் பெயரைச் சொல்லி 'அந்த நபர் ஒரு சிறிதளவு அரிசி எடுத்துக் கொடுத்தார்’ என்று கூறினால், அவனை உடனே தாக்கி கொன்றுவிடுவேன் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை.


அவனது ஆசீர்வாதக் கோரிக்கையில், அள்ளி அள்ளி தந்தவர்களையும், சிறிதளவு கொடுத்தவர்களையும் சேர்த்துப் கூறினான்: ‘அனைவரும் பெரும் பலன் பெறட்டும்’ என்று. இப்படிப்பட்ட நல்ல மனிதரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், அரசனிடமிருந்து தண்டனை என் தலையில் விழும்.”


அந்த செல்வவான் உடனே குடிமகனின் காலடியில் விழுந்து, 

“மன்னிக்கவும், ஐயா,” என்று கூறினார்.


“என்ன விஷயம்? எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள்” என்று கேட்டார் அந்த குடிமகன்.


அப்போது, அந்த செல்வவான் நடந்த அனைத்தையும் முழுமையாகச் சொன்னார்.


ஆசான் அந்த நிகழ்வைக் கண்டதும், தானம் ஏற்பாடு செய்த சீடரிடம் கேட்டார்:


“இதற்கு என்ன அர்த்தம்?”


அதற்கு அந்த குடிமகன், கடந்த நாளிலிருந்து நடந்த அனைத்தையும் ஆசானிடம் கூறினார்.


பின்னர், ஆசான் அந்த செல்வவானிடம் கேட்டார்:


“அவர் கூறியது உண்மையா, செல்வவானே?” “ஆம், பெருமகனே,” என்றார் அந்த செல்வவான்.


அதற்குப் பிறகு, ஆசான் கூறினார்:


“சீடரே, ஒரு நல்ல செயலை ‘இது ஒரு சிறிய விஷயம்தான்’ என்று எண்ணி இகழக்கூடாது. ‘இது ஒரு சிறிய தானம்தான்’ என்று சொல்லி, புத்தருக்கு அல்லது புத்தர் தலைமையிலான பிக்குக்களின் சங்கத்திற்கு வழங்கப்படும் தானத்தை இலகுவாகக் கருதக்கூடாது. ஏனெனில், புண்ணிய செயல்களைச் செய்யும் அறிவுடையோர், காலப்போக்கில் புண்ணியத்தில் நிரம்புகிறார்கள்— வெளியில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு நீர்க்குடம், மழைத்துளிகள் தொடர்ந்து விழுவதால் நிரம்புவது போல.”


இவ்வாறு கூறி, ஆசான் தம்மத்தை போதித்து, பின்வரும் வரிகளை உச்சரித்தார்:


தம்மப்பதம் 122: 


Māppamaññetha puññassa: na maṁ taṁ āgamissati udabindunipātena udakumbho pi pūrati dhīro pūrati puññassa, thokathokam-pi ācinaṁ


தமிழில்:

புண்ணியத்தை ‘இது சிறியது’ என்று இகழக்கூடாது, ‘இது எனக்கு பலன் தராது’ என்று எண்ணக்கூடாது. நீர்த்துளிகள் தொடர்ந்து விழுவதால், நீர்க்குடம் நிரம்புவது போல, அறிவாளி, சிறிது சிறிதாகச் செய்த புண்ணியத்தால் நிரம்புகிறான்.


இந்த தம்ம போதனையின் முடிவில், அந்த செல்வவான் “ஸோதாபன்ன” ஞான நிலையை  அடைந்தார். அங்கு கூடியிருந்த மற்றவர்கள் அனைவரும் தம்ம போதனையால் ஆன்மிக பலனை பெற்றனர்.


***


குறிப்பு: பிளாளபாதகன் என்றால் பூனைக்கால் (பிளாள-பூனை, பாத-கால்) இது  சிறிய எடைகளை அளக்கும் ஒரு அளவுகோலாக இருந்தது. அவன் மிகச்சிறிய தானம் தந்தமையால் அதன் பிறகு அவனுடைய பெயர் பிளாளபாதகன் என்றானது.


Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā

E W Burlingame, Ānandajoti Bhikkhu

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

சுந்தருக்குத் தந்த போதனை

மஹா கபி (குரங்கு) ஜாதகம்