9.7 தம்மபதம் பின்னணி கதைகள்
9.7 தம்மபதம் பின்னணி கதைகள் (தம்மப்பதம் செய்யுள் 123)
9.7 Dhammapada Atthakatha
(Verse 123)
கதைச் சுருக்கம்:
மகா தனம் என்ற வணிகர், ஐந்நூறு வண்டிகளுடன் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், முன்னும் பின்னும் கொள்ளையர்கள் இருப்பதாக அறிந்ததும், அவர் இருந்த கிராமத்திலேயே தங்கினார்;
இந்த நிகழ்வு புத்தரிடம் கூறப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு, புத்தர் ஒரு பாடத்தை எடுத்துக்காட்டி, ஒரு செய்யுளை உச்சரித்தார்.
***
இந்த தம்ம போதனை, ஜேதவன விஹாரத்தில் தங்கியிருந்தபோது, மகா தனம் (பெரும் செல்வம்) என்ற வணிகரை ஒட்டி, ஆசான் வழங்கினார்.
ஐந்நூறு கொள்ளையர்கள், இந்த வணிகரின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது.
பின்னர், அந்த வணிகர் ஐந்நூறு வண்டிகளில் பொருட்களை நிரப்பினார். பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பிக்குக்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார்:
“நான் ஒரு வியாபார நோக்கில் ஒரு இடத்திற்கு செல்கிறேன். அந்த இடத்திற்கு செல்ல விரும்பும் பிக்குகள் என்னுடன் வாருங்கள். பயணத்தின் போது உணவுக்காக கவலைப்பட வேண்டியதில்லை.”
இந்த செய்தியை ஐந்நூறு பிக்குகள் கேட்டதும், உடனே அந்த வணிகருடன் பயணத்தைத் தொடங்கினர்.
அதே சமயம், அந்த கொள்ளையர்களும் வணிகர் பயணிக்கப் போவதாகக் கேட்டதும், ஒரு காட்டில் மறைந்து காத்திருந்தனர்.
வணிகர் காட்டின் நுழைவாயிலுக்கு வந்ததும், ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கு அவர் மூன்று நாட்கள் கழித்தார்—மாடுகள், வண்டிகள் மற்றும் பிற பொருட்களை விற்று முடிக்க.
இந்த நாட்களில், அவர் பிக்குகளுக்காக உணவுகளைத் தொடர்ந்து வழங்கினார்.
அவர் அங்கு தங்கியிருந்தபோது, கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த ஒருவரை அனுப்பி, “வணிகர் எப்போது கிராமத்தை விட்டு புறப்படுகிறார் என்பதைப் போய் தெரிந்து கொண்டு, திரும்பி எங்களிடம் சொல்லு,” என்று கூறினர்.
அந்த கொள்ளையரின் தூதர் அந்த கிராமத்திற்குச் சென்று, தன் நண்பரிடம் கேட்டான்:
“வணிகர் எப்போது புறப்படுகிறார்?”
அதற்கு நண்பர் பதிலளித்தார்:
“இன்னும் இரண்டு நாட்களில் அவர் புறப்படுவார். ஆனால் ஏன் கேட்கிறாய்?”
அதற்கு அந்த தூதர் காரணத்தைச் சொன்னான்:
“நான் ஐந்நூறு கொள்ளையர்களின் குழுவைச் சேர்ந்தவன். நாங்கள் காட்டில் அவருக்காக காத்திருக்கிறோம்.”
அதற்கு நண்பர் கூறினார்:
“சரி, நீ போ. அவர் விரைவில் புறப்படுவார்.” இவ்வாறு கூறி, அவனை அனுப்பினார்.
அந்த கொள்ளையரின் நண்பர் மனதில் எண்ணினார்:
“நான் கொள்ளையர்களைத் தடுப்பதா, அல்லது வணிகரைக் காப்பாற்றுவதா?”
சில நேரம் யோசித்த பிறகு, அவர் ஒரு முடிவுக்கு வந்தார்:
“இந்த கொள்ளையர்களுடன் எனக்கு என்ன வேலை? ஐந்நூறு பிக்குகள் இந்த வணிகரின் தானத்தில் வாழ்கிறார்கள். எனவே, நான் வணிகருக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.”
அதன்படி, அவர் வணிகரிடம் சென்று கேட்டார்:
“நீங்கள் எப்போது பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள்?” “மூன்றாவது நாளில்,” என்றார் வணிகர்.
அதற்குப் பதிலாக, அந்த மனிதர் கூறினார்:
“நான் சொல்வதுபோலவே செய்யுங்கள். காட்டில் ஐந்நூறு கொள்ளையர்கள் உங்களைத் தாக்க காத்திருக்கிறார்கள் என்பதை நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தயவுசெய்து அங்கு செல்ல வேண்டாம்.”
வணிகர் கேட்டார்:
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
அந்த மனிதர் பதிலளித்தார்:
“நான் அந்த குழுவில் உள்ள ஒருவரின் நண்பன். அவர் சொன்னதால்தான் எனக்குத் தெரியும்.”
வணிகர் கூறினார்:
“அப்படியென்றால், நான் ஏன் பயணத்தைத் தொடர வேண்டும்? நான் திரும்பி வீட்டிற்கே போய்விடுகிறேன்.”
வணிகர் முடிவு எடுக்காமல் அதே கிராமத்தில் தொடர்ந்து தங்கியிருந்ததால், கொள்ளையர்கள் அதே மனிதனை மீண்டும் விசாரணைக்காக அனுப்பினர்.
அந்த மனிதர் தனது நண்பரிடம் சென்று வணிகரின் திட்டங்களை கேட்டான்.
வணிகர் திரும்பி வீட்டிற்கே செல்ல திட்டமிட்டிருப்பதை அறிந்ததும், அவர் கொள்ளையர்களிடம் சென்று கூறினார்:
“என் நண்பர் சொல்கிறார், வணிகர் திரும்பி வீட்டிற்கே செல்லப் போகிறார்.”
இதை கேட்ட கொள்ளையர்கள், காட்டிலிருந்து வெளியே வந்து, எதிர் திசையில் செல்லும் பாதையில் நிலைபெற்றனர்.
ஆனால் வணிகர் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்தார்.
எனவே, கொள்ளையர்கள் மீண்டும் அதே மனிதனை அனுப்பினர். அவன் முந்தையபோல் தனது நண்பனிடம் மீண்டும் சென்றான்.
அந்த கொள்ளையரின் நண்பன், அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, மீண்டும் வணிகரிடம் சென்று கூறினார்.
வணிகர் மனத்தில் எண்ணினார்:
“இங்கு எனக்கு எதுவும் குறையில்லை; எனவே, நான் முன்னும் செல்லமாட்டேன், பின்னும் செல்லமாட்டேன்—இதே இடத்தில் தங்கிவிடுகிறேன்.”
அதன்படி, அவர் பிக்குகளிடம் சென்று கூறினார்:
“பெருமக்களே, எனக்கு தெரியவந்தது—ஒரு கொள்ளையர் குழு, என்னை கொள்ளையடிக்க திட்டமிட்டு, பாதையில் மறைந்திருக்கிறார்கள் என்று. நான் திரும்பப் போகிறேன் என்ற செய்தியை அவர்கள் கேட்டதும், எதிர் திசையில் செல்லும் பாதையில் மறைந்துள்ளனர். எனவே, நான் இப்போது தீர்மானித்துள்ளேன்—முன்னும் செல்லமாட்டேன், பின்னும் செல்லமாட்டேன்; இங்கேயே தங்குவது என்று முடிவு செய்துவிட்டேன். உங்கள் விருப்பப்படி, நீங்கள் இங்கேயே தங்க விரும்பினால், தங்கலாம்.”
அந்த சூழ்நிலையில், பிக்குகள் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர்.
அதன்படி, அவர்கள் வணிகரிடம் விடைபெற்று, சாவத்திக்கு திரும்பினர். புத்தரை வணங்கி, மரியாதையுடன் ஒரு பக்கத்தில் அமர்ந்தனர்.
புத்தர் கேட்டார்:
“பிக்குகளே, நீங்கள் மகா தனன் வணிகருடன் செல்லவில்லையா?”
பிக்குகள் பதிலளித்தனர்:
“ஆம், பெருமகனே. ஆனால், ஒரு கொள்ளையர் குழு, மகா தனனின் போகும் பாதையையும் திரும்பும் பாதையையும் மறைத்து, அவரை கொள்ளையடிக்க சூழ்ந்து கொண்டுள்ளனர். எனவே, அவர் இருந்த இடத்திலேயே தங்கி விட்டார். ஆனால் நாங்கள் திரும்பிவந்தோம்.”
அதற்குப் புத்தர் கூறினார்:
“பிக்குகளே, மகா தனன் வணிகர், கொள்ளையர்கள் காத்திருப்பதால், அந்த பாதையைத் தவிர்க்கிறார். அதுபோலவே, உயிர் வாழ விரும்பும் மனிதன், விஷத்தைத் தவிர்க்கிறான். அதுபோலவே, பிக்குகளும் தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும்— ஏனெனில், மூன்று உலகங்களும் (காம, ரூப, அரூப) கொள்ளையர்களால் சூழப்பட்ட பாதைகளாகவே கருதப்பட வேண்டும்.”
இவ்வாறு கூறி, ஆசான் தம்மத்தை போதித்து, பின்வரும் செய்யுளை உச்சரித்தார்:
தம்மபதம் 123
Vāṇijo va bhayaṁ maggaṁ, appasattho mahaddhano, visaṁ jīvitukāmo va, pāpāni parivajjaye.
தமிழில்:
ஆபத்துள்ள பாதையில், நண்பர்கள் குறைவாகவும், செல்வம் அதிகமாகவும் உள்ள வணிகர் போல, உயிரை நேசிக்கும் ஒருவர் விஷத்தைத் தவிர்ப்பது போல, ஞானி ஒருவர் பாபங்களைத் தவிர்க்க வேண்டும்.
இந்த தம்ம போதனையின் முடிவில், அந்த பிக்குகள் அனைவரும் அறஹத் நிலையை அடைந்தனர், சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வகுத்துத் தெளிவாய்க்கூறும் ஞானங்களையும் பெற்றனர் (Paṭisambhidā ñāṇa). அங்கு கூடியிருந்த மற்றவர்களும் தம்ம போதனையால் பயன் பெற்றனர்.
***
குறிப்பு:
மூன்று வகைத் தோற்றம்:
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் (மணிமேகலை 30:27)
பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்;
மூன்றாவன: அருவம் (formless), உருவம் (form), காமம் (sensual) என்பன.
Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā
E W Burlingame, Ānandajoti Bhikkhu
Comments
Post a Comment