வேலாமர் பற்றி
வேலாமர் பற்றி About Velāma
அங்குத்தர நிகாயம் AN 9.20
சுருக்கம்:
நாம் செய்யும் தானம் - அது சாதாரணமாக இருக்கலாம் அல்லது சிறப்பாக இருக்கலாம் - அதை கவனத்தோடும், முன் யோசனையுடனும் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த தானத்தின் விளைவு வெளிப்படும்போது, அதனை மகிழ்வோடு அனுபவிக்க முடியும்.
மேலும், அந்த தானத்தின் காரணமாக சேரும் புண்ணியம், பெறுபவரின் மனப்பக்குவத்தை பொறுத்தும் இருக்கிறது.
ஒரு காலத்தில் வேலாமர் என்ற செல்வந்தர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பொருள் தானம் செய்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால், அதை பெறுதற்கு தகுதியானவர் எவரும் இல்லை. புத்தர் தோன்றாத காலம் அது. எண் வழி பாதையை பின்பற்றுவோர் யாரும் இல்லாத காலம் அது.
தானத்தினால் வரும் பலனை விட மேன்மையானது, மும்மணிகளிடம் சரண் செல்வது.
அதைவிட மேன்மையானது ஐந்து ஒழுக்கங்களை கடைபிடிப்பது.
அதைவிட மேன்மையானது எல்லையற்ற அன்பை, பாகுபாடின்றி, உள்ளத்தில் வளர்ப்பது.
இவை அனைத்தையும் விட மேலான ஒன்று - ஒரு நொடியேனும் நிலையாமை உணர்த்தல்.
ஃஃஃ
வேலாமர் பற்றி
ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேத வனத்தில், அனாதபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார். இல்லறத்தார் அனாதபிண்டிகர் புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறமாக அமர்ந்தார். புத்தர் அவரிடம், "இல்லறத்தாரே, உங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து தானங்கள் தருகின்றனரா?", என்று கேட்டார்.
(அனாதபிண்டிகர் தமது செல்வத்தை இழந்து, ஏழையாக வாழ்ந்த சமயம்) [1]
"தருகிறோம் ஐயா, ஆனால் உடைந்த அரிசியில் செய்யப்பட்ட கஞ்சியும், ஊறுகாயும் மட்டுமே உணவு தானமாக தருகிறோம்."
இல்லறத்தாரே ஒருவர் உரப்பான உணவை அல்லது பக்குவமாகச் செய்யப்பட்ட உணவை தானமாக தரலாம். ஆனால், அதனை அசட்டையாக, முன்யோசனை இன்றி தருகிறார்கள், அவர்கள் கையால் தருவதில்லை. மிஞ்சிய உணவை தருகிறார்கள், தானத்தின் விளைவை நினைக்காமல் தருகிறார்கள். அந்த தானத்தின் பலன் எப்போதேனும் வெளிப்படும் போது அவர்கள் மனம், (முன் செய்த தானத்தின் விளைவாக) கிடைத்த நல்ல உணவை, துணிகளை, வாகனங்களை, ஐந்து வகையான புலன் இன்பங்களை அனுபவிக்க இடம் கொடுப்பதில்லை. அவரது மக்களும், மனைவியரும் பணியாட்களும் அவர் சொல்வதைக் கேட்பதில்லை. அவருக்கு கவனம் செலுத்துவதுமில்லை, அவரைப் புரிந்து கொள்வதும் இல்லை. ஏன்? கவனம் இன்றி செய்யும் காரியங்களின் பலன் அது தான்.
ஒருவர் உரப்பான அல்லது பக்குவமாகச் செய்யப்பட்ட உணவை தானமாக தரலாம். ஆனால், அதனை கவனத்தோடும், முன்யோசனையோடும், அவர்கள் கையால் தருகின்றனர். மிஞ்சிய உணவை தருவதில்லை. தானத்தின் விளைவை நினைத்து தருகிறார்கள். அந்த தானத்தின் பலன் எப்போதேனும் வெளிப்படும் போது அவர்கள் மனம் (முன் செய்த தானத்தின் விளைவாக) கிடைத்த நல்ல உணவை, துணிகளை, வாகனங்களை, ஐந்து வகையான புலன் இன்பங்களை மகிழ்ச்சியோடு அனுபவிக்க இடம் கொடுக்கிறது. அவரது மக்களும், மனைவியரும் பணியாட்களும் அவர் சொல்வதைக் விருப்பத்தோடு கேட்கின்றனர். அவரிடம் கவனம் செலுத்துகின்றனர், அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஏன்? கவனத்தோடு செய்யும் காரியங்களின் பலன் அது தான்.
இல்லறத்தாரே, ஒரு சமயத்தில் வேலாமர் என்ற பிராமணர் வாழ்ந்தார். அவர் இந்த நன்கொடையை வழங்கினார். ஒரு பெரும் தானம். வெள்ளி காசுகள் நிரம்பிய 84 ஆயிரம் தங்கக்கலங்கள். [2] தங்கக் காசுகள் நிரம்பிய 84 ஆயிரம் வெள்ளிக் கலங்கள். தங்க ஆபரணங்களாளும், கொடிகளாளும் அலங்கரிக்கப்பட்ட 84 ஆயிரம் யானைகள், புலி, சிங்க, சிறுத்தை தோள்களால் அலங்கரிக்கப்பட்ட 84 ஆயிரம் ரதங்கள், காதணிகள் அணிந்த 84 ஆயிரம் பணிப்பெண்கள், 84 ஆயிரம் பால் சுரக்கும் மாடுகள்.. கணக்கில் அடங்கா கொடை... மேலும் உணவு, பாகனங்கள், சிற்றுண்டி என்று ஒரு பெரும் விருந்து.... கரை புரண்டோடும் ஒரு நதியைப் போன்று இருந்தது அந்த நன்கொடை.
இல்லறத்தாரே, நீங்கள் நினைக்கலாம் கண்டிப்பாக அந்த பிராமணர் வேலாமர் வேறு யாராகவோ இருந்திருக்கலாமென்று. அவ்வாறு பார்க்க கூடாது. அச்சமயத்தில் நான் தான் அந்த பிராமணர் வேலாமராக இருந்தேன். நான் அந்த தானத்தை தந்தேன் அது ஒரு பெரும் தானம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அந்த தானத்தை பெறுவதற்கு தகுந்தவர் யாருமில்லை. அந்த தானத்தை புனிதப்படுத்த யாரும் இல்லை. [3]
வேலாமர் தந்த பெருங்கொடையை விட பலனுள்ளது, முதல் ஞான நிலையை அடைந்த ஒருவருக்கு உணவு தருவது. [4]
முதல் ஞான நிலையை அடைந்த 100 பேருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, இரண்டாம் ஞான நிலையை அடைந்த ஒருவருக்கு உணவு தருவது. .
இரண்டாம் ஞான நிலையை அடைந்த 100 பேருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, மூன்றாம் ஞான நிலையை அடைந்த ஒருவருக்கு உணவு தருவது.
மூன்றாம் ஞான நிலையை அடைந்த 100 பேருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, முழுமையாக ஞானம் பெற்ற ஒருவருக்கு உணவு தருவது. .
முழுமையாக ஞானம் பெற்ற 100 பேருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, பச்சேக்க புக்தர் ஒருவருக்கு உணவு தருவது. [5]
பச்சேக்க புக்தர் 100 பேருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, சம்மா சம்புக்தர் ஒருவருக்கு உணவு தருவது.
சம்மா சம்புக்தர் ஒருவருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, புக்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு உணவு தருவது. [6]
புக்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு உணவு தருவதை விட பலனுள்ளது, ஒரு இருப்பிடம் கட்டித் தருவது - குறிப்பாக சங்கத்தாருக்கு..
சங்கத்தாருக்கு இருப்பிடம் கட்டித் தருவதை விட பலனுள்ளது, புத்த, தம்ம, சங்க எனும் மும்மணிகளிடம், நம்பிக்கையோடு சரண் செல்வது..
நம்பிக்கையான உள்ளத்தோடு மும்மணிகளிடம் சரண் செல்வதை விட மேலானது, பயிற்சி விதிகளை (ஐந்து ஒழுக்கங்களை) கடைபிடிப்பது. அதாவது உயிர்களை கொள்ளாதிருத்தல், திருடாதல், தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல், பொய் சொல்லாமை, விவேகமற்ற மனநிலைகளுக்கு எடுத்துச் செல்லும் மதுபானங்கள் அருந்தாமை..
ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதை விட பயனுள்ளது, பசு மாட்டின் மடியை ஒரு முறை இழுக்கும் நேர அளவுக்கேனும் எல்லையற்ற பாகுபாடு பார்க்காத அன்பை உள்ளத்தில் வளர்ப்பது.
எல்லையற்ற, பாகுபாடு பார்க்காத அன்பை உள்ளத்தில் வளர்ப்பதை விட மேலானது, கைந்நொடிப்பொழுதேனும் நிலையாமையை மனதில் உணர்தல்."
ஃஃஃ
ஆதாரம்: https://suttacentral dot net/an9.20
குறிப்புகள்:
[1] பெரும் செல்வந்தரான அனாதபிண்டிகர் காலப்போக்கில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார். காரணம்: அவர் செல்வம் ஐந்தில் மூன்று பகுதி ஜேத வன விகாரை கட்டுவதற்கு செலவாகிறது, ஒரு பகுதி வெள்ளத்தால் அடித்து செல்லப்படுகிறது மீதம் ஒரு பகுதி தொழில் நண்பர்கள் வாங்கிய கடன் திரும்பப் பெறாததால் மறைகிறது.
[2] 84 ஆயிரம் என்றால் "நிறைய" என்று எடுத்துக் கொள்ளலாம்.
[3] புத்தர் தோன்றாத காலம் அது. எண் வழி பாதையை பின்பற்றுவோர் யாரும் இல்லாத காலம் அது.
சோதாபத்தி
ஸகாதாகாமி
அனாகாமி
அறஹந்தர், அருகர்
[5]
பச்சேக்க புக்தர்:
சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர். ஆனால் அந்தப் பாதையை மற்றவருக்கு தெரியப்படுத்தாமலேயே காலத்தை கழித்து விடுகிறார்.
சம்மா சம்புக்தர்: சுய முயற்சியினால் ஞானம் பெற்றவர், முழுமையாக விழிப்புற்றவர். அதே சமயம் அந்த வழியை மற்றவர்க்கும் தெரியப்படுத்தும் ஒரு அதிசயமான, திறமையான ஆசிரியர் - புத்தரின் மற்றொரு விகடப் பெயர்
[6] தானம் தரும் போது தனிப்பட்ட ஒரு பௌத்த துறவிக்கென்று நினைத்துத் தருவதை தவிர்க்க வேண்டும். மஹா சங்கத்திற்கு தருவது தான் பௌத்த மரபு.
(MN142 தானத்தை பற்றி, விவரமாக விளக்கும் சுத்தம்)
ஃஃஃ
Comments
Post a Comment