விஷப் பாம்பு உவமானம்

 



விஷப் பாம்பு உவமானம்

Āsīvisopamasutta  Āsīvisa - விஷப் பாம்பு Upamā - உவமை

சங்யுத்த நிகாயம் SN 35.238

  பிறவியிலுள்ள (இம்மையிலும் மறுமையிலும்) ஆபத்தினையும், அதிலிருந்து தப்பிக்க வழியையும் - விஷப்பாம்புகள், கொலைக்காரர்கள், வெறுமையான கிராமம், கொள்ளையர்கள்.. என்று பல வலிமையான உவமானங்களின் கோர்வையாக விளக்கம் தருகிறார் புத்தர்.

ஃஃஃ

"துறவிகளே, நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே சமயம், வாழ விரும்பும் ஒருவர், மரணம் விரும்பாதவர், மகிழ்ச்சியை விரும்புபவர், துன்பத்துக்கு அஞ்சுபவர் அங்கு வருகிறார்.

அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, இங்கு நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது எடுத்து, குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைக்க வேண்டும்.

ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் உறுதியாக மரணம் தழுவவேண்டியிருக்கும் அல்லது உங்களுக்கு மரண வலி ஏற்படும்.

நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.'

அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, அங்கிருந்து, தப்பிக்க, இந்த பக்கமோ அந்த பக்கமோ ஓட்டம் பிடித்திடுவார்.

பின் அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, உங்களை ஐந்து விரோதிகள் துரத்திக் கொண்டு வருகின்றனர். அவர்கள் இவ்வாறு நினைக்கின்றனர்: 'அவனை பார்த்தவுடன் அங்கேயே வெட்டிக்கொலை செய்ய வேண்டும்!'

நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.'

அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, ஐந்து கொலைகார விரோதிகளுக்கும் பயந்து, அங்கிருந்து தப்பிக்க, இந்த பக்கமோ அந்த பக்கமோ ஓட்டம் பிடித்திடுவார்.

பின் அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, ஒரு ஆறாவது மறைந்திருக்கும் கொலைகாரனும், 'அவனைக் கண்டவுடன் அவன் தலையை அங்கேயே சீவிடுவேன்!' என்று நினைத்தவாறு, உங்களை நீட்டிய வாளோடு துரத்திக் கொண்டு வருகிறான். 

நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.'

அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, ஐந்து கொலைகார விரோதிகளுக்கும் பயந்து, மறைந்திருக்கும் ஆறாவது கொலைகாரனுக்கும் பயந்து அங்கிருந்து தப்பிக்க, இந்த பக்கமோ அந்த பக்கமோ ஓட்டம் பிடித்திடுவார்.

தப்பிக்க ஓட்டமெடுத்தவர், ஒரு கிராமத்தை காண்கிறார். வெறிச்சோடி இருந்தது அந்த கிராமம். ஆட்களின்றி வெறுமையான வீடுகள். வீட்டுக்குள் எந்த பாத்திரத்தை திறந்தாலும் அதில் ஒன்றும் காணப்படவில்லை, காலியாக இருந்தது.

அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, கூட்டமாகச்சேர்ந்து ஊர்க்கொள்ளை சைபவர் இங்கே வந்து கொண்டு இருக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.'

அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, ஐந்து கொலைகார விரோதிகளுக்கும் பயந்து, மறைந்திருக்கும் ஆறாவது கொலைகாரனுக்கும் பயந்து, கொள்ளையர்க்கும் பயந்து அங்கிருந்து தப்பிக்க, இந்த பக்கமோ அந்த பக்கமோ ஓட்டம் பிடித்திடுவார்.

பின் ஒரு பெரும் நீர்ப்பெருக்கை அடைகிறார். இக்கரையில் ஆபத்தும், துன்பமும் உள்ளது. அக்கறை ஆபத்து இல்லாத இடம், ஒரு புகலிடம். ஆனால் அக்கறை செல்ல ஒரு ஓடமோ, பாலமோ இல்லை.

அவர் இவ்வாறு நினைக்கிறார், 'நான் ஏன் புற்களையும், குச்சிகளையும், கிளைகளையும், இலைகளையும் சேகரித்து ஒரு கட்டுமரம் செய்யக்கூடாது? கைகளையும், கால்களையும் பயன்படுத்தி கட்டுமரத்தைச் செலுத்தி, பத்திரமாக அக்கரை சேர்ந்து விட வேண்டும்.'

பின் அவர் நினைத்தபடி செய்கிறார். நீர் பரப்பை கடந்து சென்ற அந்த பிராமணர், அக்கரையில் நிற்கின்றார். 


ஒரு கருத்தை தெளிவுபடுத்த இந்த உவமானங்களை சொன்னேன். அந்தக் கருத்து இதுதான்:


அந்த நான்கு மரணம் விளைவிக்கக் கூடிய விரியன் பாம்புகள், நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு மூர்த்தமான பூதங்களைக் குறிக்கும். (உடல் இந்த நான்கு பூதங்களாள் ஆனது. எப்போது வேண்டுமானாலும் அதில் கோளாறு ஏற்படலாம். எனவே விஷப் பாம்புகளோடு நான்கு பூதங்கள் ஒப்பிடப்பட்டன)

'ஐந்து கொலைக்கார விரோதிகள்' - உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை, உணர்வு - ஆகிய ஐந்து கந்தங்களைக் குறிக்கும் (அவற்றோடு பற்றுக் கொள்வதால் தான் துக்கம் ஏற்படுகிறது - பஞ்சஉபாதானக்கந்தமும் துக்கமே)

'நீட்டிய வாளோடு துரத்திக் கொண்டு வரும் மறைந்திருக்கும் கொலைகாரன்' (கூட இருந்தே குழி பறிப்பவன்) நமது ஆசையை, இச்சைமிகுதலைக் குறிக்கும்.

'வெறுமையான கிராமம்' என்பது உணர்தற்குரிய கண், செவி, மூக்கு, நாக்கு, மெய், சிந்தை என்னும் ஆறு பொறிகளைக் குறிக்கும். அறிவுள்ள, சாமர்த்தியமான் ஒருவர் இந்த பொறிகளை கூர்மையான கவனிக்கும்போது அவற்றில் எந்த சாரமும் இல்லை என்பதை, அவற்றில் உள்ள வெறுமையை உணர்வார். (ஏனென்றால், கண் காரணங்களால் உருவானது, நிலையற்றது, எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போய்விடலாம். அதேபோல் செவி, மூக்கு, நாக்கு, மெய், சிந்தை.).

'கிராமத்தைக் கொள்ளையடிக்க வருபவர்', ஆறு பொறிகள் நுகரும் பொறிக்குரிய விஷயங்களைக குறிக்கும்.  

கண் நுகர்வது உருவத்தை. விரும்பும், வெறுக்கும் உருவங்கள் கண்களை தாக்குகின்றன.

காது நுகர்வது ஒலியை. விரும்பும், வெருக்கும் ஒலிகள் காதுகளை தாக்குகின்றன. 

மூக்கு நுகர்வது வாசனையை...

நாக்கு நுகர்வது சுவையை.....

உடல் நுகர்வது பரிசத்தை.....

மனம் நுகர்வது எண்ணங்களை. விரும்பும், வெறுக்கும் எண்ணங்கள் சிந்தையை தாக்குகின்றன.

(விரும்பும் பொருள் கிடைக்காவிட்டால், துன்பம் தரும். விரும்பும் பொருள் கிடைத்தாலும், அது ஒரு நாள் பிரிந்து விடும் என்பதை நினைக்கும் போது, துன்பம் தரும். வெறுக்கும் பொருளும் துன்பம் தரும்.)

பெரும் நீர்ப் பெருக்கு என்பது நான்கு வெள்ளங்களை குறிக்கும். 

 புலன் இன்பங்கள் (sense pleasures), கொள்கைகள் (views), பவம் (becoming), அறியாமை (ignorance) ஆகிய வெள்ளங்கள் நம்மை அவ்வப்போது அடித்துச் செல்கின்றன.

இக்கரையில் உள்ள இக்கட்டான சூழ்நிலையும் ஆபத்தும், 'நான்' என்ற உணர்வை குறிக்கும். (மாற்றமில்லாத, நிலையான ஒரு ஆன்மா இருப்பதாக நினைப்பது)

'அக்கறை, ஆபத்து இல்லாத ஆலயம்' - அது வீடு பேற்றைக் (நிப்பானத்தை) குறிக்கும்.

'கட்டுமரம்' என்பது என் வழிப் பாதையை குறிக்கும். அதாவது:

நற்காட்சி,
நற்கருத்து,
நல்வாய்மை,
நற்செய்கை,
நல்வாழ்க்கை,
நன்முயற்சி,
நற்கடைப்பிடி,
நல்லமைதி.

'கைகளையும் கால்களையும் பயன்படுத்தி அந்த கட்டுமரத்தை செலுத்துவது', என்பது நல் முயற்சியைக் குறிக்கும், சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியதைக் குறிக்கும்.

'அக்கறை சேர்ந்தடைந்து ஒரு பிராமணராக நிற்பது' என்பது, முழுமையாக ஞானம் பெற்ற அருகரைக குறிக்கும்."

ஃஃஃ

ஆதாரம்

https://suttacentral dot net/sn35.238/

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை