எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள்
எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள்
விடக்க சந்தான சுத்தம்
Vitakka saṇṭhāna sutta Vitakka - எண்ணம், எண்ணுவது Santhana - சாந்தப்படுத்தல்
மஜ்ஜிம நிகாயம் MN 20
(சுருக்கம் மட்டும்)
காமம், வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை) பொருந்திய திறமையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றினால், அவற்றை நீக்க, இந்த ஐந்து வழிகளை பயன்படுத்தலாம் என்று புத்தர் கூறினார்.
1. தீய எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, வேறு ஏதேனும் சாமர்த்தியமான எண்ணங்களை நினைக்க வேண்டும். அப்போது அந்த தீய எண்ணங்கள் மறைந்துவிடும்.
இது ஒரு தச்சர் அல்லது அவரது உதவியாளர், ஒரு பெரிய மரவாணியை (மரத்தாலாகிய ஆணி) ஒரு சிறிய மரவாணியைக் கொண்டு வெளியே எடுப்பதற்கு ஒப்பாகும்.
2. அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடருமானால், அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்: 'உண்மையிலேயே, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் திறமையற்றவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் பழித்தற்குரியவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் துன்பத்தைத் தருவன.' இவ்வாறு நினைக்கும் போது அந்த எண்ணங்களின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும்.
இது, கண்ணாடியின் முன் நின்று, அலங்காரம் செய்து, தங்களை அழகு படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு இளம் பெண்ணோ ஆணோ, தங்கள் கழுத்தில் பாம்பின் பிணம், அல்லது நாயின் பிணம், அல்லது மனிதப் பிணம் தொங்குவதைக் கண்டால், அவர்கள் அடையும் அதிர்ச்சி, அவமானம், அருவருப்பைப் போன்றது.
3. அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடர்ந்தால், அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். அவ்வாறு அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், அவற்றைப் பொருட் படுத்தாமல் விட்டு விட்டால் அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப்பட்டு அவற்றின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து விடும்.
இது நல்ல கண்பார்வை உள்ள ஒருவர் தனது பார்வையில் வந்துள்ள உருவங்களைப் பார்க்க விரும்பாததால், தன் கண்களை மூடிக் கொள்வதற்கு அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
4. அப்படியும் அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடர்ந்தால், அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூலக் காரணத்தை யூகித்து, அதனை அடங்கச் செய்ய வேண்டும். இவ்வாறு, அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப்பட்டு அவற்றின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும்.
இதற்குப் பொருத்தமான உவமானம்: வேகமாக நடக்கும் ஒருவர், 'அட, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கின்றேன். மெதுவாக நடந்தால் என்ன?' என்று நினைக்கின்றார். எனவே, அவர் மெதுவாக நடக்கின்றார். பின் இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் மெதுவாக நடக்க வேண்டும். நின்றால் என்ன?' அவர் நிற்கின்றார். அடுத்து இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் நிற்க வேண்டும். உட்கார்ந்தால் என்ன?' எனவே உட்கார்கிறார். பின், 'ஏன் உட்காரவேண்டும், படுத்தால் என்ன?' என்று நினைக்கின்றார். எனவே படுத்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் கிளர்ச்சியான நிலையிலிருந்து படிப்படியாக, ஓய்வான நிலைக்குச் செல்கிறார்.
5. அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடர்ந்தால்: பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் (மேல்வாய்ப் புறம்) அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு, மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி, அடக்கிவிடவேண்டும். இப்படிச் செய்தால், அந்த தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப் பட்டு அவற்றின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து விடும்.
இது ஒரு பலசாலி பலவீனமானவனின் தலையை, அல்லது கழுத்தை அல்லது தோள்களைப் பற்றி, கட்டுப் படுத்தி அடக்கி விடுவதற்கு ஒப்பாகும்.
ஃஃஃ
ஆதாரம்: https://suttacentral dot net/mn20/
பாந்தே அறிவுரை: இந்த காரிய சாத்தியமான (practical) அறிவுரை, புத்தர் தரும் மேலும் ஒரு கருவி. அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment