சப்பாசவ சுத்தம் 1/2
சப்பாசவ சுத்தம் MN2
மஜ்ஜிம நிகாயம்
உள்ளக் கறைகளெல்லாம்
1. நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனாதபிண்டிகரின் விகாரத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரையாற்றினார். "துறவிகளே." - "அண்ணலே!" என்று துறவிகள் பதிலளித்தனர்.
2. துறவிகளே, உள்ளத்தின் கறைகளை [1] கட்டுப்படுத்த ஒரு போதனையை கற்பிக்கப் போகிறேன். நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்."- "சரி, அண்ணலே," என்று துறவிகள் பதிலளித்தனர். பகவர் இவ்வாறு போதித்தார்:
சுருக்கம்
3."துறவிகளே, அறிந்து உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே கறைகளை அழிக்க முடியும். அறியாதவர்களுக்கு, உணர்ந்துகொள்ள முடியாதவர்களுக்கு அது முடியாது. கறைகளை அழிக்க என்ன அறிய வேண்டும், எதனை உணர வேண்டும்? அவை இரண்டு: விவேகத்துடன் அவதானித்தல் (கவனம் செலுத்துதல்), விவேகமற்ற அவதானம் [2]. ஒருவர் விவேகம் இல்லாமல் கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறைகளும் தோன்றும், ஏற்கனவே தோன்றிய கறைகளும் பெருகும். விவேகத்தோடு கவனம் செலுத்தும் போது இதுவரை தோன்றாத கறைகள் தோன்றுவதில்லை, மேலும், ஏற்கனவே தோன்றிய கறைகளும் கைவிடப்படும்."
4. "துறவிகளே, தரிசனத்தோடு (ஞானத்தோடு பார்த்து) கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. பொறுத்துக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. தவிர்த்துக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. விலக்கிக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன. வளர்த்துக் கைவிட வேண்டிய கறைகள் உள்ளன." [3]
தரிசனத்தோடு கைவிட வேண்டிய கறைகள்
5. "துறவிகளே? எப்படிப்பட்ட கறைகளை தரிசனத்தோடு கைவிட வேண்டும்? [4]
துறவிகளே, இங்கு ஒரு சாதாரண அறம் அறியாத ஒருவர், மேன்மையானவருக்கு மரியாதை செலுத்தாதவர், மேன்மையானவர் அறத்தில் அவருக்கு எந்த திறமையும் பயிற்சியும் இல்லை, நல்லவருக்கு மரியாதை செலுத்தாதவர், நல்லோர் அறத்திலும் அவருக்கு திறமையும் பயிற்சியும் இல்லை. அப்படிப்பட்டவர் எதனை அவதானிக்க வேண்டும் என்பதையும் எதனை அவதானிக்கக் கூடாது என்பதையும் அறிவதில்லை. அப்படி இருக்க, ஒதுக்க வேண்டியது மீது கவனம் செலுத்துகிறார், கவனிக்க வேண்டியதை அவர் ஒதுக்குகிறார். [5]
6. "அவர் கவனம் செலுத்துகிற ஆனால் ஒதுக்க வேண்டிய பொருட்கள் எப்படிப்பட்டவை? அப்படிப்பட்ட பொருட்கள் மீது கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறையான சிற்றின்ப ஆசைகள் தோன்றும் மேலும் ஏற்கனவே தோன்றிய சிற்றின்ப ஆசைகள் பெருகும், இதுவரை தோன்றாத கறையான பவம் தோன்றும் மேலும் ஏற்கனவே தோன்றிய பவம் பெருகும், இதுவரை தோன்றாத கறையான அறியாமை தோன்றும் மேலும் ஏற்கனவே தோன்றிய அறியாமை பெருகும். இப்படிப்பட்ட கவனம் செலுத்தக் கூடாத விஷயங்கள் மீது அவர் கவனம் செலுத்துகிறார். [6]
அவர் கவனம் செலுத்த வேண்டிய ஆனால் ஒதுக்குகிற பொருட்கள் எப்படிப்பட்டவை? அப்படிப்பட்ட பொருட்கள் மீது அவர் கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறையான சிற்றின்ப ஆசைகள் தோன்றாது மேலும் ஏற்கனவே தோன்றிய சிற்றின்ப ஆசைகள் கைவிடப்படும், இதுவரை தோன்றாத கறையான பவம் தோன்றாது மேலும் ஏற்கனவே தோன்றிய கறையான பவம் கைவிடப்படும், இதுவரை தோன்றாத கறையான அறியாமை தோன்றாது மேலும் ஏற்கனவே தோன்றிய அறியாமை கைவிடப்படும். இப்படிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் மீது அவர் கவனம் செலுத்துவதில்லை.
இவ்வாறு ஒதுக்க வேண்டியது மீது கவனம் செலுத்துவதாலும், கவனிக்க வேண்டியதை அவர் ஒதுக்குவதாலும் தோன்றாத கறைகளும் தோன்றுகின்றன, தோன்றிய கறைகளும் பெருகுகின்றன.
7. இவ்வாறு அவர் விவேகம் இல்லாமல் அவதானிக்கினறார்: 'நான் முற்காலத்தில் தோன்றியிருந்தேனா? நான் முற்காலத்தில் தோன்றவில்லையா? முற்காலத்தில் என்னவாக இருந்தேன்? முற்காலத்தில் எப்படிப்பட்டவனாக இருந்தேன்? முற்காலத்தில் என்னவாக இருந்து, எவ்வாறு மாற்றம் கொண்டேன்? எதிர்காலத்தில் இருப்பேனா, இருக்க மாட்டேனா? எதிர்காலத்தில் நான் என்னவாக இருப்பேன்? எதிர்காலத்தில் எவ்வாறு இருப்பேன்? எதிர்காலத்தில் என்னவாக இருந்து எப்படிப்பட்ட மாற்றம் கொள்வேன்?' அல்லது நிகழ்காலத்தைப் பற்றி குழப்பம் கொண்டவராக இருப்பார். 'நான் உள்ளேனா, இல்லையா? நான் யார்? நான் எவ்வாறு உள்ளேன்? இந்த உயிர் எங்கிருந்து வந்தது, எங்கு செல்லும்?' [7]
8. இவ்வாறு அவர் விவேகம் இல்லாமல் அவதானிக்கின்ற போது, இந்த ஆறு காட்சிகளில் ஒன்று தோன்றுகிறது [8].
'எனக்குள் அகம் உள்ளது' என்ற காட்சி உண்மையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவருக்கு தோன்றுகிறது.
'எனக்குள் அகமென்றேதும் இல்லை' ...
'நான் அகத்தால் அகத்தை உணர்கிறேன்' ...
'நான் அகமின்மையை அகம் கொண்டு உணர்கிறேன்' ...
'நான் அகத்தை அகமின்மையை கொண்டு உணர்கிறேன்' ...
அல்லது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது:
' இந்த அகம் அல்லது ஆன்மா தான் இங்கும் அங்கும் பேசுவதும் நுகர்ந்தும்; மற்றும் நற்செயல் தீச் செயல்களின் பலன்களை உணர்வதும்; மேலும் இந்த அகம் என்பது நிரந்தரமானது, என்றைக்கும் எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும், மாற்றத்திற்கு உட்படாதது, அழிவற்ற தன்மையுடையது, முடிவற்று எப்போதுமிருக்கும்'.
இந்த ஆதாரமற்ற காட்சி தான் துறவிகளே, அடர்ந்த புதர், காடு போன்றது; சிக்கலுண்டாக்கும், அலைதலுண்டாக்கும் காட்சி எனப்படும். இப்படிப்பட்ட காட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட சாதாரண அறமறியா மனிதர், பிறப்பு மூப்பு மரணத்திலிருந்து, சோகம் அழுகை, துன்பம், அவலம், துயரம் ஆகியவற்றிலிருந்து, துக்கத்திலிருந்து விடுபடாதவர் என்கிறேன்."
9. "துறவிகளே, இங்கு ஒரு நன்றாக கற்பிக்கப்பட்ட மேன்மையான சீடர், மேன்மையானவருக்கு மரியாதை செலுத்துபவர், அவர்களின் அறத்தில் அவர் திறமையும் பயிற்சியும் பெற்றவர், நல்லவருக்கு மரியாதை செலுத்துபவர், நல்லோர் அறத்திலும் அவருக்கு திறமையும் பயிற்சியும் உண்டு. அப்படிப்பட்டவர் எதனை அவதானிக்க வேண்டும் என்பதையும் எதனை அவதானிக்கக் கூடாது என்பதையும் அறிந்துள்ளார். அப்படி இருக்க, ஒதுக்க வேண்டியது மீது கவனம் செலுத்துவதில்லை, கவனிக்க வேண்டியவை மீது அவர் கவனம் செலுத்துகிறார்."
10. "அவர் கவனம் செலுத்தாத ஒதுக்க வேண்டிய பொருட்கள் எப்படிப்பட்டவை? அப்படிப்பட்ட பொருட்கள் மீது கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறையான சிற்றின்ப ஆசைகள் தோன்றும் ......(§6 குறிப்பிட்டது போல).....ஏற்கனவே தோன்றிய அறியாமை பெருகும். இப்படிப்பட்ட கவனம் செலுத்தக் கூடாத விஷயங்கள் மீது அவர் கவனம் செலுத்துவதில்லை.
அவர் கவனம் செலுத்த வேண்டிய, செலுத்துகிற பொருட்கள் எப்படிப்பட்டவை? அப்படிப்பட்ட பொருட்கள் மீது அவர் கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறையான சிற்றின்ப ஆசைகள் தோன்றாது ......(§6 குறிப்பிட்டது போல).....மேலும் ஏற்கனவே தோன்றிய அறியாமை கைவிடப்படும். இப்படிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் மீது அவர் கவனம் செலுத்துகிறார்.
இவ்வாறு ஒதுக்க வேண்டியதை ஒதுக்குவதாலும், கவனிக்க வேண்டியதை அவர் கவனிப்பதாலும் தோன்றாத கறைகள் தோன்றுவதில்லை, தோன்றிய கறைகளும் கைவிடப்படுகின்றன."
11. "அவர் விவேகத்துடன் அவதானிக்கின்றார்: 'இது துக்கம்'; அவர் விவேகத்துடன் அவதானிக்கின்றார்: 'இது துக்கக் காரணம்';
அவர் விவேகத்துடன் அவதானிக்கின்றார்: 'இது துக்க முடிவு'; அவர் விவேகத்துடன் அவதானிக்கின்றார்: 'இது துக்க முடிவிற்கு எடுத்துச் செல்லும் மார்க்கம்'; [9] இவ்வாறு விவேகத்துடன் அவதானிக்கும் போது மூன்று தளைகள் அவருக்குள் கைவிடப்படுகின்றன.
ஆன்மா நம்பிக்கை (தொடர்ந்து மாற்றமில்லா 'நான்' இருப்பதாக உள்ள நம்பிக்கை) கைவிடப்படுகிறது (சக்காய திட்டி).
புத்தரின் போதனைகளில், புத்தரின் முழுமையான ஞானத்தின் மீது உள்ள ஐயம் கைவிடப்படுகிறது (விசி-கிச்சா).
சாங்கியம், சடங்குகள் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்து கொள்வது கைவிடப்படுகிறது(சீல பத்த பராமாச).
இவையே தரிசனத்தோடு கைவிட வேண்டிய கறைகளை." [10]
ஃஃஃ
குறிப்புகள்:
[1] கறைகள் - (பாலி மொழியில் - ஆசவம்) உள்ளத்தின் ஆழமான, மூலமாக உள்ள மாசு வகை.
ஆசவம் என்றால் ஓட்டம். வெள்ளப்பெருக்குள்ள நதியில் நிற்கையில் அது அடித்துச் செல்லும் சக்தி கொண்டுள்ளது. அதே போல ஆசவமும் மனதை நிலைகுலைக்கக்கூடிய சக்தி கொண்டுள்ளது.
ஆசவம், அதன் பொருள் - மாசு உண்டாக்கும், பவவிருத்தி உண்டாக்கும், துன்பம் தரும், துக்கத்தில் முடியும், எதிர்காலத்தில் பிறப்பு மூப்பு மரணத்திற்கு எடுத்துச் செல்லும் - உள்ளத்தின் கறைகள்.
நான்கு வகை வெள்ளங்கள் அல்லது கறைகள்:
சிற்றின்ப வேட்கை kāmāsava - flood of sensual pleasure
பவம் (ஆகுகை) தொடர்ந்து ஒரு புதிய தோன்றலுக்கான வேட்கை bhavāsava - flood of becoming,
பேதைமை (அறியாமை) avijjāsava - flood of ignorance
காட்சிகள் diṭṭhāsava - flood of views
ஒரு சீடரின் மனம் இந்த கறைகளிலிருந்து விடுவிக்கப்படும் போது அவர் ஒரு அருகர் ஆகிறார்.
[2]
விவேகத்துடன் அவதானித்தல் (Yoniso manasikāra) என்பது சரியான உபாயம் கொண்டு, சரியான பாதையில் செல்வதாகும்.
மனம் வாய்மைக்கு நிகரான சிந்திப்பில் ஆழ்ந்திருக்கிறது. அதாவது நிலையற்றதை நிலையற்றது என்பது போன்ற வாய்மைக்கு நிகரான சிந்திக்கை. விவேகத்துடன் அவதானித்தல் தான் இந்த பிறவிக்கடலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. ஏனென்றால், அது நம்மை எண்வழி பாதையை தொடர வைக்கிறது.
விவேகமற்ற அவதானம் (ayoniso manasikāra) என்பது தவறான உபாயம் கொண்டு, தவறான பாதையில் செல்வதாகும்.
மனம் வாய்மைக்கு புறம்பான சிந்திப்பில் ஆழ்ந்திருக்கிறது. அதாவது நிலையற்றதை நிலையானது என்றும், துன்பம் தருவதை இன்பம் தருவதாகவும், சாரமற்றதை சாரம் கொண்டதாகவும், அசுத்தமானதை சுத்தமானதாக நினைத்து கவனம் செலுத்துவது. விவேகமற்ற அவதானம் அறியாமையையும் வேட்கையையும் அதிகரிக்கும். எனவே, பிறவிக்கடலில் எண்ணிலடங்கா முறை பிறந்து இறந்ததற்கும், அதனால் உண்டான துன்பத்திற்கும் இதுவே காரணம்.
[3] தரிசனத்தோடு கைவிட வேண்டிய கறைகள் தவிர மீத ஆறும், கறைகள் பற்றிய வினாவும் விடையுமாக அமைந்த அங்குத்தற நிகாயம் AN 6.58 போதனையில் கூறப்பட்டுள்ளன.
[4] இங்கு தரிசனம் அல்லது ஞானத்தோடு பார்ப்பது என்பது எதைப் பார்ப்பதாக குறிப்பிடுகிறது? முதல் ஞான நிலைக்கு எடுத்துச் செல்லும் பாதையை (சோதா பத்தி மார்க்கம்) குறிப்பிடுகிறது. சோதா பத்தி மார்க்கத்தில் நுழைந்தவர் முதல் முதலாக வீடுபேரான நிப்பாணத்தை காண்கின்றனர்.
[5] ஒரு பொருள் மீது கவனம் செலுத்துவது தக்கதா தகாததா என்பது அந்த பொருள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. மாறாக எவ்வாறு அதனை அவதானிக்கின்றோம் என்பதை பொறுத்தது. அந்த கவனமுறையின் காரணமாக தீய மனநிலைகள் தோன்றுமானால், அதனை தவிர்க்க வேண்டும். அந்த கவனமுறையின் காரணமாக நல்ல மனநிலைகள் தோன்றுமானால் அதனை வளர்க்க வேண்டும்.
[6] உரைகளின் படி:
ஐம் பொறி மூலம் இன்பம் தேடும் போது அதன் காரணமாக சிற்றின்ப கறை தோன்றிப் பெருகும்.
நற்சமாதிக்கு எடுத்துச் செல்லும் தியான நிலைகளில் இன்பம் தேடும்போது அதன் காரணமாக பவக் கறை தோன்றிப் பெருகும்.
நான்கு 'பொய் யுணர்வுகளின்' மூலம் அன்றாட விஷயங்களில் கவனம் செலுத்தும் போது, அதன் காரணமாக அறியாமைக் கறை தோன்றிப் பெருகும்.
நான்கு 'பொய் யுணர்வுகள்':
நிலையற்றதை நிலையானது என்றும், துன்பம் தருவதை இன்பம் தருவதாகவும், சாரமற்றதை சாரம் கொண்டதாகவும், அசுத்தமானதை சுத்தமானதாகவும் நினைப்பது.
[7] உரைகளின் படி: இந்தப் பகுதியில் (மற்றும் அடுத்த பகுதியில்) விளக்கப்பட்டிருக்கும் காட்சிகளால் உண்டாகும் கறைகள் (dittāsava. taint of views) ஐயம் என்ற தலைப்பில் வருவன. ஐயத்தின் காரணமாக விவேகமற்று அவதானிப்பதால் இந்தத் தவறான காட்சிகள் தோன்றுகின்றன.
[8] இந்த ஆறு காட்சிகளில் முதல் இரண்டு:
'எனக்கு அகம் உள்ளது' - இது நிலைபேற்றுவாதம் /நித்திய வாதம் eternalism
'எனக்குள் அகமென்றேதும் இல்லை' - இது இல்லாமை தத்துவம் nihilism.
இது புத்தர் கற்பித்த அநாத்ம வாதம் அல்ல. மாறாக இந்த உடல் தான் தான் என்றும், உடலின் சிதைவுக்குப் பின் தொடர்வது ஏதுமில்லை, என்ற நம்பிக்கை.
அடுத்த மூன்று காட்சிகள்:
இது மனம் தன்னைத்தானே அறியக்கூடிய திறன் கொண்டிருப்பதை ஏற்று, கவனிப்பதும் கவனிக்கப்படுவதும் இவ்விரண்டும், தான் என்று நினைப்பது (காட்சி 3) அல்லது கவனிப்பது மட்டுமே தான் என்று நினைப்பது (காட்சி 4) அல்லது கவனிக்கப்படுவது மட்டுமே தான் என்று நினைப்பது (காட்சி 5).
ஆறாவது காட்சி நித்திய வாதத்தின் எந்த வரையறையற்ற மாற்று பதிப்பு எனலாம். பேசுவதும் நுகர்வதும், தான் என்ற காரியகர்த்தா என்ற கருத்து. இங்கும் அங்கும் என்பது இந்த பிறவி மற்றும் வேறு பிறவி என்று தொடர்ந்து வரும் பிறவிகளிலும் இந்த காரியகர்த்தா மாற்றம் இல்லாமல் தொடர்வதாய் உள்ள கருத்து.
[9] இவை நான்கு மேன்மையான உண்மைகள்
[10] இவ்வாறு தரிசனத்தோடு கறைகள் கைவிடப்பட்டால் ஒருவர் சோதாபத்தி என்ற முதல் ஞான நிலையை அடைகிறார். இதனால் பிறவிக்கடலோடு (சம்சாரத்தோடு) நம்மை பிணைக்கும் முதல் மூன்று தளைகள் துண்டிக்கப்படுகின்றன.
ஃஃஃ
Comments
Post a Comment