கேள்வியும் பதிலும்
Feb 11, 2024 பாந்தே Sasanawanse பாந்தேவுடன்
கேள்வியும் பதிலும்
(கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. பிழைகளுக்கு நானே பொறுப்பு)
கேள்வி:
எல்லாம் அநிச்சம் என்று சொல்லப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பின் அதன் முடிவுகள் நாம் விரும்பியபடி இல்லாவிட்டால், நாம் எதுவும் செய்யாமல் இருந்துவிடலாமே? அநிச்சத்தின் காரணமாக தானாக சரியாகி விடலாம் அல்லவா?
பதில்:
இல்லை, இல்லை. உடலை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடலில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்படி கேட்க வேண்டும். தரப்படும் மருந்துகளை அவர் சொன்னபடி உட்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தவரை உடலை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு நாள் உடலின் பிணியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத நிலை வரும். அதனால் தான் இந்த உடல் நிலையற்றது, அநிச்சம் என்று சொல்கிறோம்.
ஃஃஃ
கேள்வி:
தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கடவுள் இல்லாத மதம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் கடவுளரை பற்றியும், தேவர்களைப் பற்றியும் அவர்களை வணங்குவதைப் பற்றியும் கூறுகின்றீர்கள்.
பதில்:
புத்தர் ஒரு கடவுள் இல்லை.
ஆனால் பௌத்தத்தில் நம்மை விட உயர்ந்தவர்களை - சீலத்தில், தானத்தில், மனப்பக்குவத்தில் - வணங்குவது ஒரு புண்ணியச் செயல் என கருதப்படுகிறது. எனவே பிரம்மலோகத்தில் வாழும் கடவுளரையும், சொர்க்கத்தில் வாழும் தேவர்களையும் நாம் வணங்குவது நல்லது. அது ஒரு புண்ணியம் சேர்க்கும் செயல்.
ஆனால் இவர்களை எல்லாம் விட மேலானவர் பகவான் புத்தர். பிரம்ம லோக தேவர்களின் தலைவனான பிரம்மனைவிட மேலானவர் புத்தர்.
சொர்க்கலோகத்தில் பிறப்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. புண்ணியம் சேர்த்தால் தேவலோகத்தில் பிறக்கலாம். தியானத்தில் கைதேர்ந்தவரானால் பிரம்மலோகத்தில் பிறக்கலாம். இவ்வாறு மேல் உலகங்களில் மறுபிறப் எடுக்கக்கூடிய காரணிகளை ஒரே வாழ்நாளில் கூட உருவாக்க முடியும்.
ஆனால் புத்தராவது என்பது ஒரு வாழ்நாளில் செய்யக் கூடியதன்று. நூறு ஜென்மங்களிலும் கூட புத்தராக முடியாது. கோடி ஜென்மங்கள் முயன்றாலும் புத்தராவது முடியாது. போதிசத்துவர் பத்து பாரமிதைகளை முழுமையாக்க எடுத்த காலம் இவற்றையெல்லாம் விட நீண்டது. புத்தர் ஆவதற்கு கல்ப காலங்கள் தேவை. மிகவும் நீண்ட காலம் அது.
10 கிலோமீட்டர் நீளம், 10 கிலோமீட்டர் அகலம், பத்து கிலோமீட்டர் உயரம் உள்ள ஒரு மலையை, மென்மையான துணியைக் கொண்டு ஒருவன் 100 வருடங்களுக்கு ஒரு முறை துடைத்தால், அது தரைமட்டம் ஆவதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, அதுதான் ஒரு கல்பகாலம்.
புத்தர் ஒரு கடவுள் இல்லை என்றாலும் தேவலோகங்களிலும், பிரம்மலோகங்களிலும் வாழும் கடவுளர்களை விட மேலானவர்.
ஃஃஃ
கேள்வி:
இந்த ஜென்மத்தில் நான் நற்காரியங்களையே செய்கிறேன். ஆனாலும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதுவெல்லாம் முன் ஜென்மத்தில் சேர்த்த பாவத்தின் விளைவு என்றால், தேவர்களை வணங்குவதாலும், புண்ணியம் சேர்ப்பதினாலும் என்ன பயன்?
பதில்:
எனது ஆசிரியர் எங்களுக்கு இந்த சம்பவத்தை பற்றி கூறினார். அவரது சீடர் ஒருவர் இளம் வயதில் மிகவும் வசதியற்ற, இக்கட்டான நிலைமையில் வாழ்ந்து வந்தார். வீட்டில் உண்பதற்குக் கூட பற்றாக்குறை இருந்தது. அந்த சூழ்நிலையிலும் துறவிகளிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தாயார் தயங்கினார். நமக்கே சாப்பிடுவதற்கு போதிய உணவில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு துறவிகளுக்கு தானம் செய்வது, என்று கேட்டார். ஆனால் மகனோ, அப்படி சொல்ல வேண்டாம், எப்படியாவது கொஞ்சமேணும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்ததை பகிர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களது இல்லாமை மறைந்து விட்டது. இதிலிருந்து புண்ணியம் சேர்ப்பதன் நல் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது ஒரு நடந்த சம்பவம்.
புண்ணியத்தை அதிகரிக்க, அதிகரிக்க நமது முந்தைய தீவினைப் பயன்களை அழித்துவிட முடியும். தீவினைக்காண பரிகாரம் இவை:
முமமணிகளிடம் சரண் செல்வது.
ஐந்து ஒழுக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது.
மெத்தா தியானம் செய்வது.
... போன்றவை
எனவே புண்ணியம் சேர்ப்பது நல்லது. புண்ணியம் சேர்ப்பதற்கு எந்த தயக்கமும் இருக்க வேண்டாம்.
ஃஃஃ
கேள்வி: ஒரு வேண்டுகோள். எனது 10 மாத பேரக்குழந்தைக்கு நீங்கள் மெத்தா (எல்லையற்ற அன்பு) செலுத்த முடியுமா?
பதில்: இந்த குழந்தைக்கு நான் மெத்தா அனுப்ப இயலாது. அதற்கு குழந்தையுடன் உள்ள பெற்றோர்களால் அல்லது நீங்கள் குழந்தையை பார்க்க செல்லும் போது அருகில் அமர்ந்து மெத்தா செலுத்தலாம். அதை அந்த குழந்தை உணர்ந்து கொள்ள முடியும். பின்னர் அது அறியும் பருவம் அடையும் போது அதற்கு தம்மத்தை கற்பியுங்கள். சிறு வயதிலிருந்து அதை சுற்றி உள்ள பெரியோர்கள் தானமும் ஒழுக்கமும் கடைப்பிடிப்பதை பார்க்கும் போது அதற்கும் தானாக தம்ம வழியில் ஒழுக விருப்பம் உண்டாகும்.
ஃஃஃ
Comments
Post a Comment