சப்பாசவ சுத்தம் 2/2

 சப்பாசவ சுத்தம் MN2

மஜ்ஜிம நிகாயம்


உள்ளக் கறைகளெல்லாம்

Part 2


கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள்


12. "துறவிகளே, கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [11] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து கட்புலனை அடக்கி வாழ்கிறார். கட்புலனை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் கட்புலனை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. [12]

விவேகத்துடன் சிந்தித்து செவிப்புலன் அடக்கி வாழ்கிறார்...மோப்பத்தை அடக்கி...சுவையை அடக்கி...தொடுவுணர்வுப்புலனை அடக்கி... மன உணர்வை அடக்கி.....

புலன்களை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் புலன்களை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள்.


பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள்

 

13. "துறவிகளே, பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [13] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, தனது சீவர ஆடையை தன்னை குளிரிலிருந்து பாதுகாக்கவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றின் கடிகளிலிருந்தும், காற்று, சூரியன், ஊர்வன போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும், மறையுறுப்பினை மறைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்.


14. "விவேகத்துடன் சிந்தித்து, யாசித்துக் கிடைத்த உணவை சுவைக்காகவும், போதைக்காகவும், உடலை அழகுபடுத்தவும் கவர்ச்சியூட்டுவதற்காகவும் உண்ணாமல், 

உடலின் சகிப்புத்தன்மையை வளர்க்கவும், அதன் தொடர்ச்சிக்காகவும், அசௌகரியத்தை தவிர்ப்பதற்கும், புனித வாழ்விற்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறார். இவ்வாறு எண்ணியவாறு உண்கிறார்: 'நான் புதிய நோவுகள் உண்டாக்காமல் (அதிகமாக உண்பதால் வரும் அசௌகரியும்) பழைய நோவுகளை நீக்கி (பசியை நீக்கி), ஆரோக்கியமுள்ளவனாக, குறை சொல்லப்படாதவனாக, வசதியாக வாழ்வேன்.'


15. "விவேகத்துடன் சிந்தித்து, தனது ஓய்விடத்தை தன்னை குளிரிலிருந்து பாதுகாக்கவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றின் கடிகளிலிருந்தும், காற்று, சூரியன், ஊர்வன போன்றவற்றிடமிருந்து பாதுகாக்கவும் தட்பவெட்ப நிலையின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவும், உறைவிடத்தை அனுபவிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்."


16. "விவேகத்துடன் சிந்தித்து, தனது மருந்து தேவைகளை நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்."


17. "நான்கு தேவைகளை சரியாக பயன்படுத்தாத ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் நான்கு தேவைகளை சரியாக பயன்படுத்தி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே பயன்படுத்தி கைவிட வேண்டிய கறைகள்.


பொறுத்துக் கைவிட வேண்டிய கறைகள்


18. "துறவிகளே, பொறுத்துக் கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, குளிரையும் வெப்பத்தையும் பொறுத்துக் கொள்கிறார், பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்கிறார், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றின் கடிகளிலிருந்தும், காற்று, சூரியன், ஊர்வன ஆகியவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்; தன்னை திட்டிப் பேசுகின்ற பேச்சையும், மரியாதையற்ற பேச்சையும் பொறுத்துக் கொள்கிறார். உயிர் போகும் அளவுக்கு வெறுக்கத்தக்க பெருந்துன்பத்தை தரும் உடலில் தோன்றிய வேதனைமிகு கூர்மையான கடும் வலி தோன்றினால் - அவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்.


இவ்வாறு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளாத ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் பொருத்துக்கொண்டு வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே பொறுத்துக் கைவிட வேண்டிய கறைகள்.


தவிர்த்துக் கைவிட வேண்டிய கறைகள்


19. "துறவிகளே, தவிர்த்துக் கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, யானை, குதிரை, காளை, நாய், பாம்பு போன்ற வன விலங்குகளையும், வெட்டப்பட்ட மரத்தினடிபாகம், முட்செடிப்புதர், நிலப் பிளவு, செங்குத்தான மலை, குப்பைக் குழிகள், சாக்கடை போன்றவற்றை தவிர்க்கின்றார்.

விவேகத்துடன் சிந்தித்து, தகாத ஆசனங்களை, தகாத இருப்பிடங்களை, [14] தீய நண்பர்களின் சகவாசத்தை - ஆன்மீக வாழ்க்கையில் கூட பயணிக்கும் மெய்யறிவுடைய தோழர்கள் தன்னைத் தீய நடத்தை கொண்டிருப்பதாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக - தவிர்க்கிறார்.

இவ்வாறு இவற்றையெல்லாம் தவிர்க்காத ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் இவற்றைத் தவிர்த்து வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே தவிர்த்துக் கைவிட வேண்டிய கறைகள்.


விலக்கிக் கைவிட வேண்டிய கறைகள்


20. "துறவிகளே, விலக்கிக் கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, மனதில் தோன்றிய சிற்றின்ப ஆசையை விலக்கி, நீக்கி, அழித்து அவற்றை கைவிடுகிறார். பகைமையை .... தீய நோக்கத்தை.... தீய சாமர்த்தியமற்ற மனநிலைகளை பொருட்படுத்தாமல். அவற்றைக் கைவிட்டு, விலக்கி, நீக்கி, அழித்திடுகிறார். [15] இவ்வாறு இவற்றையெல்லாம் விலக்காத ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் இவற்றைத் விலக்கி வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றுவதில்லை. இவையே விலக்கிக் கைவிட வேண்டிய கறைகள்.


வளர்த்துக் கைவிட வேண்டிய கறைகள்


21. "துறவிகளே, வளர்த்துக் கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, கடைப்பிடி போதி அங்கத்தினை வளர்க்கிறார். இது ஏகாந்தம் (viveka, seclusion), இச்சையின்மை (virāga, dispassion), செயலொழிகை (nirodha, cessation- பவக் காரணங்களின் முடிவு) ஆகியவற்றின் துணையோடு, கறைகள் முற்றும் கைவிட்டு நீக்குகைக்கு (vossagga, relinquishment of defilements) - அதாவது வீடு பேற்றான நிப்பாணத்திற்கு எடுத்துச் செல்கிறது. 


தம்மங்களை ஆராயும் போதி அங்கத்தினை...

வீரிய (முயற்சி) போதி அங்கத்தினை...

அகமலர்ச்சி போதி அங்கத்தினை...

அமைதி போதி அங்கத்தினை...

சமாதி போதி அங்கத்தினை... 

மன சமநிலை போதி அங்கத்தினை வளர்க்கிறார். இது ஏகாந்தம், இச்சையின்மை, செயலொழிகை ஆகியவற்றின் துணையோடு கறைகள் முற்றும் கைவிட்டு நீக்குகைக்கு - அதாவது நிப்பாணத்திற்கு, எடுத்துச் செல்கிறது. [16]

இவ்வாறு போதி அங்கங்களை வளர்க்காத ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் போதி அங்கங்களை வளர்த்தவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றுவதில்லை. இவையே வளர்த்துக் கைவிட வேண்டிய கறைகள். [17]


முடிவு


22. "துறவிகளே, 

தரிசனத்தோடு கைவிட வேண்டிய கறைகளை தரிசனத்தோடு கைவிட்ட ஒரு பிக்கு, 

கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகளை கட்டுப்படுத்திக் கைவிட்ட ஒரு பிக்கு, 

பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகளை பயன்படுத்திக் கைவிட்ட ஒரு பிக்கு, 

பொறுத்துக் கைவிட வேண்டிய கறைகளை பொறுத்துக் கைவிட்ட ஒரு பிக்கு, 

தவிர்த்துக் கைவிட வேண்டிய கறைகளை தவிர்த்துக் கைவிட்ட ஒரு பிக்கு, 

விலக்கிக் கைவிட வேண்டிய கறைகளை விலக்கிக் கைவிட்ட ஒரு பிக்கு, 

வளர்த்துக் கைவிட வேண்டிய கறைகளை வளர்த்துக் கைவிட்ட ஒரு பிக்கு —

எல்லா கறைகளையும் அடக்கியவாரு, அடக்கத்துடன் வாழ்கின்ற பிக்கு எனப்படுகிறார்.

அவர் வேட்கையை முறித்தவர், தளைகளை எரிந்தவர், செருக்கிணை முழுமையாக ஊடுருவியப்படியாள் துன்பத்தின் முடிவுக்கு வந்தவர். [18]


இவ்வாறு பகவர் கூறினார். பகவரின் வார்த்தைகளைக் கேட்ட பிக்குகள் திருப்தியடைந்தனர், மகிழ்ந்தனர்.


ஃஃஃ


குறிப்புகள்:


[11] கறைகளை கைவிடுவது என்பது அவற்றின் முழுமையான அழிவு என்ற பொருள் கொண்டால், இந்த சுத்தத்தில் சொல்லப்பட்ட ஏழு வழிகளில் இரண்டு மட்டுமே அவற்றை கைவிடச் செய்யும் - 

 முதலாவதான தரிசனம் மற்றும் ஏழாவதான வளர்த்தல். இவை இரண்டும் மேன்மையான நான்கு பாதைகளை உள்ளடங்கியுள்ளன.

மற்ற ஐந்தும், கறைகளை முழுமையாக அழிக்கவில்லையென்றாலும், பயிற்சியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்த உதவும்.

பின்பு மற்ற இரண்டு வழிகளைக் கொண்டு அவற்றை முழுமையாக அழிக்கலாம்.


பயிற்சி இரண்டு வகைப்பட்டது:

உலக (சாதாரண) வழி mundane path ஓரளவுக்கு தானம் செய்து, ஒழுக்கம் கடைபிடித்து உள்ளக் கறைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்கள்.


பிரபஞ்சத்தைக் கடந்த (மேன்மையான) வழி

Supra mundane path. அதாவது நான்கு ஞான நிலைகளை அடைவதற்கான பாதையில் நுழைந்து விட்டவர்கள் தொடரும் வழி.



[12] பொறிகளை கட்டுப்படுத்த தேவையான முதன்மை காரணி நற்கடைப்பிடியாகும். அதாவது, செய்கின்ற காரியத்தை கூர்மையான கவனம்கொண்டு கடைப்பிடித்தல்.


[13] புனித வாழ்விற்கான நான்கு அத்தியாவசிய தேவைகளை பிக்குமார்கள் இவ்வாறு தினசரி பிரதிபலிப்பதுண்டு.


[14] தகாத ஆசனம் என்பது பிக்குமார் தனிமையில் அல்லது திரையால் மறைத்த ஒரு ஆசனத்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பது.


[15]

முதல் மூன்று வகையான தகாத எண்ணங்கள்

சிற்றின்ப ஆசை, பகைமை, இம்சை நோக்கம் ஆகியவை எண் வழிப் பாதையின் இரண்டாம் அம்சமான நல்லூற்றம் அல்லது நல்ல நோக்கத்தின் எதிர்மறையான எண்ணங்கள்.


நல்லூற்றத்தின் மூன்று அம்சங்கள்:

துறவு, பற்று நீங்குதல், கைவிடுகை போன்ற எண்ணங்கள்.

பகைமை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கம்.

தீமை செய்யாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கம் (அகிம்சை).


[16] ஏழு போதி அங்கங்கள். அவை 

கடைப்பிடி-sati-mindfulness

தம்மங்களை ஆராய்தல்-dhammā vicaya -investigation of dhamma, 

முயற்சி-viriya-energy, 

அகமலர்ச்சி-pīti-joy, 

அமைதி-passaddhi-tranquility,

சமாதி-samādhi-concentration, 

மன சமநிலை-upekkha-equanimity. 


[17]

சிற்றின்ப வேட்கை (kāmāsava) அனாகாமி மார்க்கத்திலும், பவம் (avijjāsava) மற்றும் பேதைமை (bhavāsava) அருகர் மார்கத்திலும் அழிக்கப்படுகின்றன.


[18] பத்து தளைகளை அழித்த பின்னர் மட்டுமே நிப்பாண நிலையை அடைய முடியும்.

செருக்கு (conceit) ஒரு நுண்மையான (subtle) 'நான் உள்ளேன்' என்ற கருத்து. இதனை அருகர்ப்பாதையில் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். முதல் ஞான நிலையில் முடிவுக்கு வரும் தான் என்ற எண்ணம் அளவு கடந்த (gross) செருக்கினைக் குறிக்கும். 

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்