தேவர்களும் தேவ உலகங்களும்

 

Feb 4 போதனை சாரம்சம்

பாந்தே Sasanawanse

தேவர்களும் தேவ உலகங்களும் உள்ளதாக புத்தர் கூறினாரா?

ஃஃஃ

பிக்குமார்கள் தங்களை வணங்குவோரை, இந்த (தம்மபதம் 109) செய்யூளோடு ஆசீர்வதிப்பார்கள்:

Abhivadana silissa

niccam vuddhapacayino

cattaro dhamma vaddhanti

ayu vanno sukham balam.


எப்போதும் (niccam)

ஞானத்தினாலும் வயதினாலும் மூத்த பெரியோர்களை வணங்குகிறவர்களுக்கும் (vuddhapacayino), 

சீலங்களை கடைபிடிப்பவர்களை வணங்குகிறவர்களுக்கும் (Abhivadanasilissa) 

ஆயுள் (ayu), 

அழகு (vanno), 

இன்பம் (sukham), 

ஆற்றல் (balam) 

ஆகிய நான்கும் (cattaro dhamma)

அதிகரிக்கும் (vaddhanti).


இரண்டு வாரங்களுக்கு முன்பு மட்டக்குண்டலி பற்றி அறிந்தோம். அவர் புத்தரை வணங்கிய ஒரே காரணத்தால் தேவலோகத்தில் மறுபிறப்பெடுத்து திவ்ய ஆயுள், திவ்ய அழகு, திவ்ய இன்பம், திவ்ய ஆற்றல் கண்டார்.

(விமான வத்து 7.9 மட்டக்குண்டலியின் அரண்மனை)


ஆம், தேவர்கள், தேவலோகங்களைப் பற்றி புத்தர் கூறியுள்ளார்.


சங்யுத்த நிகாயத்தில்

தேவர்கள் பற்றிய போதனைகள்

(Devaputtasaṁyutta SN 2),

பிரம்மதேவர் பற்றிய போதனைகள்

(Brahmasaṁyutta SN 6),

சக்கர் பற்றிய போதனைகள்

(Sakkasaṁyutta SN 11) 

இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல ஜாதகக் கதைகள் (போதிச்சத்துவரின் 447 முன்பிறவிக் கதைகள்), மஜ்ஜிம நிகாயம், தீக நிகாயம், அங்குத்தர நிகாயம் அனைத்திலும் தேவர்கள் பற்றிய போதனைகளைக் காணலாம்.


புத்தர் மறைந்த சில காலத்திலேயே மகா காஸப்பர் தலைமையில் ராஜகிரக நகரத்தில் நடந்த முதலாம் சங்க அவையில் போதனைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுப்பும் (நிகாயம்) ஒரு தேரர் தலைமையில் அவரது சீடர்களால் மனனம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆனந்தர் தலைமையில் அவரது சீடர்களால் தீக நிகாய போதனைகளும், அணிருத்தர் தலைமையில் அங்குத்தர நிகாய போதனைகளும், மற்ற தேரர்கள் தலைமையில் பிற தொகுதிகளும் மனனம் செய்யப்பட்டன. 


இவ்வாறு கால காலமாக திரிபிடகத்தின் ஒரு பகுதியை மனப்பாடம் செய்த பிக்குமார்கள் பானக்கர் (Bhāṇaka ஓதுவார்) என்று அழைக்கப்பட்டார்கள். 


ஆகவே அசோக மன்னர் காலத்தில் அவரது மகனான மகிந்த தேரர் தூய போதனைகளை இலங்கைக்கு கொண்டு சென்றார்.  


பிறகு கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு சமயத்தில் இலங்கையில் பனை ஓலைகளில் போதனைகள் எழுதப்பட்டன். அதிலிருந்து ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பின்பு இந்த பானக்கர் மனனம் செய்யும் வழக்கம் மறைந்து விட்டது.


மேலும் போதனைகள் எழுதப்பட்ட பனை ஓலைகள் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு அழிய துவங்கும் சமயத்தில் அவை மீண்டும் புதிய பனை ஓலைகளில் எழுதப்பட்டன. இவ்வாறு புத்தரின் தூய(கலப்படமற்ற) போதனைகள் காலகாலமாக இலங்கையில் பாதுகாக்கப்பட்டது.


எனவே, பகவான் புத்தர் தேவர்களைப் பற்றியும் தேவலோகங்களை பற்றியும் கூறினார் என்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளலாம்.


ஃஃஃ

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை