9.1 தம்மபதம் பின்னணி கதைகள்
9. தீமைகள் பற்றிய அதிகாரம் (பாபவக்கம்)
தம்மபதம் பின்னணி கதைகள் 9.1 (தம்மப்பதம் செய்யுள் 116)
Dhammapada Atthakatha 9.1
(Verse 116)
பிராமணர் சுள்ள எகசாடகர் பற்றிய கதை
கதைச் சுருக்கம்:
ஒரு பிராமணரிடம் ஒரே ஒரு மேலங்கி மட்டுமே இருந்தது. அதை புத்தருக்குத் தரலாமா என்று அவர் தயங்கினார். இரவின் கடைசி சாமத்தில் தயக்கம் முடிந்து அதை அளித்தார். பின்னர் அவருக்கு மன்னரால் மிகுந்த பரிசுகள் கிடைத்தன.
புத்தர் கூறினார்: “அவர் தாமதிக்காமல் முன்பே தந்திருந்தால், இன்னும் அதிகமான பலனைப் பெற்றிருப்பார்” என்று. இதைக் கூறிய பின்னர் ஒரு வசனத்தையும் உபதேசித்தார்.
***
இந்த தர்ம உபதேசத்தை, ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, சுள்ள எகசாடகர் என்ற பிராமணர் (சிறிய-சுள்ள, ஒரு-ஏக, மேலங்கி-சாடக என்று பொருள்) குறித்துப் போதித்தார்.
முந்தைய விபஸ்ஸி புத்தரின் காலத்தில் “மகா எகசாடகர்” எனும் ஒரு பிராமணர் வாழ்ந்தார். அவரே தற்போதைய புத்தர் காலத்தில் சாவத்தியில் சுள்ள எகசாடகர் எனப் பிறந்தார்.
அவரிடம் ஒரே ஒரு உள்ளாடை இருந்தது; அவர் மனைவியிடமும் ஒரே ஒரு உள்ளாடை இருந்தது. இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு மேலங்கி இருந்தது. எனவே, ஒருவர் வெளியில் போகும்போது, மற்றவர் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒருநாள் விகாரத்தில் தர்ம உபதேசம் நடக்கும் என்று அறிவிப்பு வந்தது. பிராமணர் தன் மனைவியிடம்,
“மனைவியே, உபதேசம் நடக்கவிருக்கிறது; நீ போக விரும்புவது பகலிலா இரவிலா? நமக்குக் கையில் ஒரே ஒரு மேலங்கி இருப்பதால் இருவரும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்றார்.
அவரது மனைவி, “நான் பகலில் போகிறேன்” என்று கூறி மேலங்கியை அணிந்துச் சென்றாள்.
பிராமணர் பகலில் வீட்டிலிருந்தார். இரவில் அவர் விகாரத்திற்கு வந்து, ஆசாரியரின் முன் அமர்ந்து தர்மத்தை கேட்கத் தொடங்கினார். கேட்டபோது அவருள் ஐந்து வகையான ஆனந்தம் எழுந்து உடலை நிறைத்தது. அவர் ஆசாரியருக்கு தன் மேலங்கியைத் தந்து மரியாதை செய்ய விரும்பினார். ஆனால், “இந்த மேலங்கியைத் தந்துவிட்டால், என் மனைவிக்கும் எனக்கும் மேலங்கி இருக்காது” என்ற எண்ணம் அவரைத் தடுத்தது. மனதில் ஆயிரக்கணக்கான சுயநல எண்ணங்கள் எழுந்தன. அவற்றுக்கிடையில் ஒரு நம்பிக்கையுள்ள நல்ல எண்ணமும் தோன்றியது. ஆனால் உடனே அந்த சுயநல எண்ணங்கள் தோன்றி நம்பிக்கையான எண்ணத்தை அடக்கியது. “தருவேன்! தரமாட்டேன்!” என்று இருமனப்பான்மையுடன் இருந்தார்.
இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும் போது முதல் சாமம் கடந்து போனது. நடுச் சாமமும் வந்தது. ஆனால் அவர் இன்னும் தானம் செய்யத் துணியவில்லை. இறுதியில் கடைசி சாமும் வந்தது. அப்போது பிராமணர் நினைத்தார்:
“நல்ல எண்ணங்களுக்கும் சுயநல எண்ணங்களுக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கையில் இரண்டு இரவு சாமங்கள் கடந்து போய்விட்டன. இந்த சுயநல எண்ணங்கள் இன்னும் வலுப்பட்டால், என்னை நான்கு கீழான உலகங்களிலிருந்து (அசுர, பூத, மிருக, நரக) இருந்து தலை தூக்க விடாது. ஆகையால் என் அன்பளிப்பை உடனே தர வேண்டும்.”
இவ்வாறு நினைத்து, சுயநல எண்ணங்களை வென்று, மேலங்கியை ஆசாரியரின் பாதத்தில் வைத்து, மூன்று முறை,
“நான் வென்றுவிட்டேன்! நான் வென்றுவிட்டேன்! நான் வென்றுவிட்டேன்!” என்று உரக்க கூறினார்.
அந்த நேரத்தில் கோசல மன்னன் பசேனதி தர்மத்தை செவிமடுத்துக் கொண்டிருந்தார். அவர்,
“இவன் என்னத்தை வென்றான் என்று கேளுங்கள்” என்று தன் ஊழியர்களிடம் சொன்னார். பிராமணர் தன் மனப்போராட்டக் கதையைச் சொன்னார். மன்னன் அதை கேட்டு,
“இந்த பிராமணர் செய்தது மிகக் கடினமான செயல்; நான் இவருக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார். அவருக்கு இரண்டு மேலங்கிகளை வழங்கச் செய்தார்.
பிராமணர் அவற்றையும் புத்தருக்கே தானமாக அளித்தார். மன்னர் மறுபடியும் பரிசை இரட்டிப்பாக்கினார் – முதலில் இரண்டு ஜோடி, பிறகு நான்கு, எட்டு, பதினாறு எனத் தொடர்ந்து கொடுத்தார். அவற்றையும் பிராமணர் ஆசாரியருக்கே தந்தார். இறுதியில் மன்னர் முப்பத்தி இரண்டு ஜோடிகள் தரச் செய்தார். மேலும் அவர் பிராமணரிடம், "அனைத்தையும் கொடுத்துவிட்டான், தன்னிடம் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்று மக்கள் சொல்லக் கூடாது” என்பதால்,
“ஒரு ஜோடி நீ வைத்துக்கொள், மற்றொரு ஜோடியை உன் மனைவிக்குக் கொடு” என்று கூறினார். அவ்வாறு கேட்டுக் கொண்டபடியால் பிராமணர் இரண்டு ஜோடிகளை தனக்கும் மற்ற முப்பது ஜோடிகளை ஆசாரியருக்கே அளித்தார். ஒருவேளை இந்த பிராமணர் தன்னிடம் இருந்ததை 100 தடவை ஆசிரியருக்கு கொடுத்திருந்தாலும் மன்னரும் தொடர்ந்து அவருக்கு ஈடான அன்பளிப்பு தந்திருப்பார். முன் பிறவியில் மகா எகசாடகர் தான் பெற்ற 64 ஜோடிகளில் இரண்டை மட்டுமே வைத்துக் கொண்டு கொண்டிருந்தார். சுள்ள எகசாடகர் 32 ஜோடிகளில் இரண்டை தனக்கென்று வைத்துக் கொண்டார்.
மன்னர் மேலும் இரண்டு ஆயிரம் நாணய மதிப்புள்ள போர்வைகளை அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் பிராமணர்,
“இதைக் கொண்டு என் உடலை மூடுவதற்காகப் பயன்படுத்த தகுதி இல்லாதவன் நான்; இது புத்தரின் சாசனத்திற்கே உரியது” என்று நினைத்து, ஒன்றை வைத்து ஆசாரியரின் படுக்கையின் மேல் ஒரு பந்தல் அமைத்தார்; மற்றொன்றை கொண்டு தன் வீட்டில் உணவு சஞ்சரித்து வரும் பிக்குமார்கள் அமருமிடத்தின் மேல் பந்தல் அமைத்தார்.
மன்னன் மாலை நேரத்தில் ஆசிரியரைச் சந்திக்க சென்றபோது அந்தப் போர்வை இருப்பதை கண்டு,
“இதை உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் யார் அன்பளிப்பாக கொடுத்தார்கள்?" என்று கேட்டார்.
புத்தர்: “எகசாடகர்” என்றார்.
அதைக் கேட்ட மன்னன் இவ்வாறு நினைத்தார்: “என்னிடம் நம்பிக்கையுள்ளது (மும்மணிகள் மீது) இந்த நம்பிக்கையின் காரணமாக நான் மகிழ்கிறேன். அது போலவே, இந்த பிராமணருக்கும் வலுவான நம்பிக்கை இருக்கிறது. அவரும் அதன் காரணமாக மகிழ்கிறார்” என்று நினைத்து, அந்த பிராமணருக்கு நான்கு யானைகள், நான்கு குதிரைகள், நான்கு ஆயிரம் நாணயங்கள், நான்கு பெண்கள், நான்கு பணிப்பெண்கள், நான்கு சிறந்த கிராமங்கள் ஆகியவற்றைத் அன்பளிப்பாக தந்தார். இவ்வாறு நான்கு நான்காக கொடுக்கப்படும் பரிசுகளை பிராமணர் மன்னரிடமிருந்து பெற்றார்.
புத்தரின் போதனை
பிக்குக்கள் தர்மசாலையில் பேசிக்கொண்டிருந்தனர்:
“ஆஹா! எவ்வளவு அதிசயமான செயல் செய்தார் சுள்ள எகசாடகர்! நல்ல செயலைச் செய்த உடனுக்குடனே, நான்கு நான்காக கொடுக்கப்படும் பரிசுகளைப் பெற்றுவிட்டார்!”
அச்சமயம் புத்தர் அங்கு வந்து,
“பிக்குக்களே, எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை பற்றி கூறினார்கள். அப்போது புத்தர், "அவர் முதல் சாமத்திலேயே தந்திருந்தால், பதினாறு பதினாறாகத் தரப்படும் பரிசு கிடைத்திருக்கும்; நடுச் சாமத்தில் தந்திருந்தால், எட்டு எட்டாக கிடைக்கும் பரிசு கிடைத்திருக்கும்; ஆனால் கடைசி சாமத்தில் தந்ததால், நான்கு நான்காக தரப்படும் பரிசு மட்டுமே கிடைத்தது.
நல்ல செயல் செய்யும் எண்ணம் தோன்றும் போது உடனே செய்ய வேண்டும். தாமதமாகச் செய்தாலும் பயன் கிடைக்கும்; ஆனால் பயனும் தாமதமாகவே வரும்” என்று போதித்தார். எனவே நற்செயல்களை செய்ய வேண்டும் என்று தோன்றும் நேரத்திலேயே செய்து விட வேண்டும். இவ்வாறு தம்மத்தை விளக்கிய புத்தர் தொடர்ந்து கீழ்க்கண்ட செய்யுளை சொன்னார்:
(தம்மபதம் 116)
அபித்தரேத கள்யாணே, பாபா சித்தம் நிவாரயே;
தந்தஹம் ஹி கரதோ புண்ணம், பாபஸ்மிம் ரமதீ மனோ.
தமிழில்:
நல்ல செயலை விரைவாகச் செய்க!
தீய எண்ணங்களைத் தடுக்கச் செய்க!
நற்செய்கையில் தாமதமானால்,
அந்த மனம் தீமையில் மகிழ்ந்து விடும்.
அந்த வசனத்தை முடித்ததும், பல பிக்குகள் சோதாபண்ண பலன் (sotāpanna முதலான உயர்ந்த ஞான நிலை) அடைந்தனர்.
***
Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā
E W Burlingame, Ānandajoti Bhikkhu
Comments
Post a Comment