9.4 தம்மபதம் பின்னணி கதைகள்

 


தம்மபதம் பின்னணி கதைகள் 9.4 (தம்மப்பதம் செய்யுள் 119,120)

Dhammapada Atthakatha 9.4

(Verse 119,120) 


அனாதபிண்டிகரும் தேவதையும் 


கதைச்சுருக்கம்:

அனாதபிண்டிகரின் இல்லத்தில் இருந்த ஒரு தேவதை, அவர் புத்தரையும் அவருடைய சீடர்களையும் ஆதரிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினாள்; ஏனெனில் அதனால் அவர் வறுமைக்கு தள்ளப்பட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அனாதபிண்டிகர் அந்த தேவதையை கடிந்து கூறி, தன் இல்லத்திலிருந்து விரட்டிவிட்டார். பின்னர், அவள் அந்தக் இல்லறத்தாரின் செல்வத்தை மீண்டும் பெற்றுத் தந்துவிட்டு மன்னிப்பு கேட்டாள். அவர் அவளைப் புத்தரிடம் அழைத்து வந்தார். அப்போது புத்தர், இருவருக்கும் சில செய்யுள்களோடு உபதேசம் செய்தார்.


***


ஜேதவனத்தில் அனாதபிண்டிகரைச் சார்ந்து புத்தரால் கொடுக்கப்பட்ட உபதேசம்.


அனாதபிண்டிகர், ஜேதவன மகாவிகாரத்தை அமைப்பதற்காக மட்டுமே 54 கோடி நிதி செலவிட்டார். புத்தர் ஜேதவனத்தில் தங்கும் போதெல்லாம் தினமும் மூன்று வேளையும், மிகுந்த மரியாதையுடன் புத்தரிடம் தரிசனத்திற்கு வந்தார். செல்லும்போதெல்லாம், “இளைய பிக்குகள், சாமணர்கள் என் கைகளைக் கவனித்து, 'அவர் என்ன கொண்டு வந்தார்,' என்று பார்ப்பார்கள்” என்று நினைத்து, ஒருபோதும் வெருங்கையோடு செல்வதில்லை.


காலைப்பொழுது கஞ்சியும், காலை உணவுக்குப் பிறகு நெய், வெண்ணெய் மற்றும் மருந்துகள், மாலைப்பொழுது பூக்கள், வாசனைப் பொருட்கள், தயிலம், உடைகள் என்று எதையாவது கொண்டு செல்வார்.


ஆனால், வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாள் அவரிடம் வாங்கிய 18 கோடி நிதி கடன் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. மேலும், குடும்பத்தாரின் 18 கோடி நிதி, ஆற்றங்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது, பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடியபடியால் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அவருடைய செல்வம் நாளடைவில் குறைந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார். இருந்தபோதிலும், முன்பு போலவே அவரது விருந்தோம்பல் தொடர்ந்தது. பிக்குச் சங்கத்திற்கு தினமும் தானம் அளித்தார். ஆனால் முன்போல் சுவையான உணவுகள் தர முடியவில்லை.


ஒரு நாள் புத்தர் கேட்டார்:

“இல்லறத்தாரே, எங்களுக்கான உணவு தானம் இன்னும் உங்கள் இல்லத்தில் தரப்படுகிறதா?”


அனாதபிண்டிகர் கூறினார்:

“ஆமாம் ஐயா, ஆனால் இப்போது வெறும் கஞ்சி, புளிக்காய்ச்சல் மட்டும் தான் தர முடிகிறது.”


அப்போது புத்தர் கூறினார்:

“குடும்பஸ்தரே, ‘நான் ஆசானுக்கு தருவது சாதாரண உணவு’ என்று எண்ண வேண்டாம்; அதற்காக மனம் வருந்த வேண்டாம். மனம் தூய்மையானால், புத்தருக்கும் ஆரியர்களுக்கும் கொடுப்பது எந்த நாளும் கீழ்த்தரமானதாகாது. நீர் எட்டு வகை ஆரியர்களுக்கும் உணவு அளித்து வருகின்றீர்.


நான் முன்பிறவியில் வெலாமன் பிராமணராக இருந்தபோது, அசாதாரணமான கொடைகளை அளித்தேன். ஜம்புதீபமெங்கும் என் கொடையைப் பார்த்து வியந்தனர். ஆனாலும், ஒருவரைக் கூட மூன்று இரத்தினத்தில் நிலைநிறுத்த முடியவில்லை. உண்மையில், கொடையைப் பெற தகுதியானவர்களைச் சந்திப்பதே அரிது. எனவே, ‘என் தானம் மோசமானது’ என்று நினைத்து கவலைப்பட வேண்டாம்.”


இவ்வாறு சொல்லி, புத்தர் வெலாம சூத்திரத்தை உரைத்தார். 


(முன் பிறவிக் கதை)


ஒரு காலத்தில், இல்லறத்தாரே, வேலாமன் என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மிகப்பெரிய தானத்தை வழங்கினார்:


84,000 தங்கக் கிண்ணங்கள் வெள்ளியால் நிரம்பியவை,

84,000 வெள்ளிக் கிண்ணங்கள் தங்கத்தால் நிரம்பியவை,

84,000 வெண்கலக் கிண்ணங்கள் தங்க நாணயங்களால் நிரம்பியவை,

84,000 தங்க அலங்காரங்களுடன், கொடிகளுடன், தங்க வலைகளால் மூடப்பட்ட யானைகள்,

84,000 சிங்கம், புலி, சிறுத்தை தோல்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், தங்க அலங்காரங்களுடன், கொடிகளுடன்,

84,000 பால் மாடுகள், பட்டு மூக்கணாங்கயிறுகளுடன், வெண்கலப் கறவைக்கலங்களுடன்,

84,000 ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியர்கள்,

84,000 மஞ்சங்கள் – அடர்த்தியாக, தூய வெண்ணிறத்தில், மலர் வடிவங்களில் நெய்யப்பட்ட கம்பளிப்போர்வைகளாலும் – மெல்லிய மான் தோல்களாலும் விரிக்கப்பட்டவை, மேலே மேற்கட்டியோடு, இருபுறமும் சிவப்பு தலையணைகள்,

8,400,000,000 நெய்த துணிகள் – பருத்தி, பட்டு, கம்பள வகைகள்,

மேலும் உணவு, பாகனங்கள், சிற்றுண்டி என்று ஒரு பெரும் விருந்து.... கரை புரண்டோடும் ஒரு நதியைப் போன்று இருந்தது அந்த நன்கொடை.


இல்லறத்தாரே, நீங்கள் நினைக்கலாம்: ‘வேலாம பிராமணர் வேறு யாரோ என்று’. ஆனால் நீங்கள் இவ்வாறு நினைக்க வேண்டாம். அந்த வேலாம பிராமணர் நானே. அந்த மகா தானத்தை நான் வழங்கினேன். ஆனால் அந்த நிகழ்வில், தானம் பெற தகுதியானவர் யாரும் இல்லை; தானத்தை பரிசுத்தமாக்க யாரும் இல்லை.


(முன் பிறவிக் கதை முடிந்து)


தேவதையின் குற்றமும் பாவ நிவாரணமும்


ஆசானும் அவரது சீடர்களும் அனாதபிண்டிகரின் வீட்டிற்குள் நுழைந்தபோது, வாயிலில் வாழ்ந்த தேவதை, அவர்களின் புனித தன்மையின் தீவிரத்தை தாங்க முடியாமல் தனக்குள், 'இந்த இல்லறத்தாரை அவரது விசுவாசத்திலிருந்து விலக்கி விட வேண்டும்; இனிமேல் அவர்கள் இந்த வீட்டிற்குள் நுழையக்கூடாது,' என்று எண்ணினாள்.


அனாதபிண்டிகரிடம் செல்வமும்  அதிகாரமும் இருந்தபோது, தேவதையினால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் இப்போது அவர் வறுமைக்கு தள்ளப்பட்டதால், 'இப்போது அவர் என் வார்த்தைகளை கேட்பார்' என்று எண்ணி, இரவில் சென்று அவரது அரண்மனைக்குள் நுழைந்து, காற்றில் மிதந்தவாறு நிலைத்தாள்.


அனாதபிண்டிகர் அவளைப் பார்த்து:


"யார் அது?”  என்று கேட்டார்.


“நான் தான், இல்லறத்தாறே, உங்கள் நான்காவது வாயிலில் வாழும் தேவதை. உங்களுக்கு அறிவுரை வழங்க வந்துள்ளேன்.”  


“சரி, சொல்ல வேண்டியதைச் சொல்.”


“இல்லறத்தாரே, எதிர்காலத்தைப் பொருட்படுத்தாமல், நீங்கள் உங்கள் செல்வத்தை கோதம முனிவரின் சாசனத்தில் வீணடித்துவிட்டீர்கள். இப்போது வறுமையில் இருந்தாலும், நீங்கள் தானம் தொடர்ந்து வழங்குகின்றீர்கள். இப்படியே தொடர்ந்தால், சில நாள்களில் உங்களுக்கு உணவுக்கும் உடைக்கும் போதுமானது இருக்காது. கோதம முனிவரால் உங்களுக்கு என்ன பயன்? இந்த தானங்களை நிறுத்தி, வியாபாரத்தில் கவனம் செலுத்தி, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்.”


அனாதபிண்டிகர் பதிலளித்தார்:


“இதுவா உனது அறிவுரை?”  


“ஆம், இல்லறத்தாரே.”  


“அப்படியென்றால், போ வெளியே! உன்னை மாதிரி இலட்சம் பேர் முயன்றாலும், என்னை என் பாதையிலிருந்து விலக்க முடியாது. என்னிடம் உரிமை மீறிப் பேசி விட்டாய்; என் வீட்டில் வாழும் உரிமை இனிமேல் உனக்கு இல்லை. உடனே என் வீட்டை விட்டு வெளியேறு.”


அந்த தேவதை, ஸோதாபன்ன நிலையை அடைந்த ஆரிய சீடரான  அனாதபிண்டிகரின் வார்த்தைகளை தாங்க முடியாமல், தனது பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.


ஆனால் அந்த தேவதை இல்லறத்தாரின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, எங்கும் தங்க இடம் கிடைக்கவில்லை. அதனால் அவள் மனதில் எண்ணினாள்: “இல்லறத்தார் என்னை மன்னித்து, மீண்டும் அவரது வீட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்.”


அதன்படி, அவள் நகரத்தின் காவல் தேவபுத்தரிடம் சென்று, தன் தவறைக் கூறி, “வா, என்னை அந்த இல்லறத்தாரிடம் அழைத்துச் செல்; அவரை என் தவறை மன்னிக்க வலியுறுத்து; மீண்டும் அவரது வீட்டில் வாழ அனுமதிக்கச் சொல்” என்று கேட்டாள்.


ஆனால் அந்த தேவபுத்தர் பதிலளித்தார்: “நீ கூறக்கூடாததை கூறிவிட்டாய்; எனவே, அந்த இல்லறத்தாரின் வீட்டிற்குச் செல்வது எனக்குச் சாத்தியமில்லை.” இவ்வாறு, நகரத்தின் காவல் தேவன் அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.


பின்னர் அந்த தேவதை நான்கு பெரிய அரசர்களிடம் (ஒரு சொர்கலோகத்தின் தலைவர்கள்) சென்றாள், ஆனால் அவர்களும் அவளது வேண்டுகோளை நிராகரித்தனர்.


அதன்பிறகு, அவள் தேவர்களின் தலைவரான சக்ரதேவனிடம் சென்றாள், தன் தவறைச் சொன்னாள், மேலும் மிகவும் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தாள்:

“ஐயனே, எனக்கு தங்கும் இடம் எங்கும் கிடைக்கவில்லை. நான் பாதுகாப்பின்றி என் பிள்ளைகளுடன் அலைந்து திரிகிறேன். தயவுசெய்து, எனக்கு மீண்டும் என் பழைய வாசஸ்தலத்தைப் பெற அனுமதி வழங்குங்கள்.”


சக்கன் பதிலளித்தார்: “நான் நேரடியாக அந்த இல்லறத்தாரிடம் சென்று பேச முடியாது. ஆனால், உனக்கு ஒரு வழியைச் சொல்கிறேன்.”


“சரி ஐயா, தயவுசெய்து அந்த வழியைச் சொல்லுங்கள்,” என்றாள் தேவதை.


சக்கன் கூறினார்: “இல்லறத்தாரின் மேலாளராகவே ஆடையணிந்து, அவரது கையாலேயே, அவர் ஒருகாலத்தில் வைத்திருந்த செல்வங்களின் பட்டியலை ஒரு ஓலையில் எழுதிக்கொள். உன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி, வணிகர்கள் கடனாக பெற்ற 18 கோடி செல்வத்தை மீட்டெடு,  அவரது காலியான களஞ்சியத்தில் வை.


மேலும், பெருங்கடலில் இழந்த 18 கோடி செல்வமும், உரிமையில்லாத 18 கோடி செல்வமும் – குறிப்பிட்ட இடங்களில் அவை உள்ளன – அனைத்தையும் சேகரித்து, அவரது களஞ்சியத்தை நிரப்பு. இவ்வாறு உன் தவறுக்கு பரிகாரம் செய்து, அவரிடம் மன்னிப்புக் கேள்.”


“சரி,” என்றாள் தேவதை. உடனே சக்கன் கூறியபடி அனைத்தையும் செய்தாள். பின்னர், அவள் ஆகாயத்தில் நிலைத்து நின்று, தெய்வீக ஒளியால் இல்லறத்தாரின் அரண்மனையை ஒளிரச் செய்தாள்.


“யார் அது?” என்று அந்த செல்வவான் கேட்டார். “நான் தான்,” என்று தேவதை பதிலளித்தாள், “முன்பு உங்கள் நான்காவது வாயிலில் வாழ்ந்த, கண்மூடித்தனமான, அறிவில்லாத தேவதை. என் அறியாமையால் உங்களிடம் பேசிய தவறான வார்த்தைகளை மன்னிக்கவும். தேவர்களின் அரசன் சக்ரதேவனின் கட்டளையைப் பின்பற்றி, 54 கோடி செல்வத்தை மீட்டெடுத்து உங்கள் காலியான களஞ்சியத்தை நிரப்பியுள்ளேன்; இவ்வாறு என் தவறுக்கு பரிகாரம் செய்துள்ளேன். எனக்கு தங்கும் இடமில்லை, அதனால் மிகவும் சோர்வடைந்துள்ளேன்.”


அனாதபிண்டிகர் மனதில் எண்ணினார்: “இந்த தேவதை, ‘நான் என் தவறுக்கு பரிகாரம் செய்துள்ளேன்’ என்று கூறி, தன் தவறை ஒப்புக்கொள்கிறாள்; நான் அவளை சம்மாசம்புத்தரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.”


அதன்படி, அவர் தேவதையை ஆசானிடம் அழைத்துச் சென்றார், “நீ செய்த அனைத்தையும் ஆசானிடம் கூறு” என்று கூறினார்.


தேவதை, புத்தரின் பாதங்களில் விழுந்து, “என் அறியாமையால் உங்களை இகழ்ந்து விட்டேன்; மன்னியுங்கள்” என்று மன்னிப்பு கேட்டாள். இவ்வாறு அந்த தேவதை ஆசானிடமும் அந்த செல்வந்தரிடமும் மன்னிப்பு கேட்டாள்.


புத்தரின் உபதேசம்


புத்தர் அவர்களிருவரையும் நோக்கி கூறினார்:


“இல்லறத்தாரே, இந்த வாழ்கையிலே, பாவி கூட, தன் பாவம் பழுத்து விளையும் வரை சுகத்தை அனுபவிக்கிறான். ஆனால் பாவம் பழுத்ததும், துன்பம்தான் காண்கிறான். அதுபோல, நல்லவன் கூட, தன் புண்ணியம் பழுக்கும் வரை துன்பத்தை காண்கிறான்; ஆனால் புண்ணியம் பழுத்ததும், மகிழ்ச்சியையே காண்கிறான்.”


இவ்வாறு கூறி, புத்தர் பின்வரும் செய்யுள்களை உரைத்தார்:


(தம்மப்பதம் 119)

பாபோ பி பஸ்ஸதி பத்ரம் யாவ பாபம் ந பச்சதி,

யதா ச பச்சதி பாபம் அத பாபோ பாபாநி பஸ்ஸதி.


பாவி புண்ணியமின்றி,

செய்த பாவம் பழுக்காத வரை நலனைக் காண்கிறான்;

ஆனால் பாவம் பழுத்ததும்,

அவனுக்கு பாவம் மட்டுமே தோன்றும்.


(தம்மப்பதம் 120)

பத்ரோ பி பஸ்ஸதி பாபம் யாவ பத்ரம் ந பச்சதி,

யதா ச பச்சதி பத்ரம் அத பத்ரோ பத்ரானி பஸ்ஸதி.


நல்லவன் துன்பத்தைச் சந்திப்பான்,

அவன் செய்த புண்ணியம் பழுக்காத வரை;

ஆனால் புண்ணியம் பழுத்ததும்,

அவன் நலனையே காண்பான்.


இந்த உபதேசத்தின் முடிவில், அந்த தேவதை ஸோதாபன்ன ஞான நிலையை (Stream-entry) அடைந்தாள்; அங்கு கூடியிருந்த பலரும் தர்மத்தால் பயன் அடைந்தனர்.


***


குறிப்பு: எட்டு வகை ஆரியர்கள் - நான்கு ஞான நிலைகளான ஸோதாபன்ன, சகதாகாமி, அனாகாமி மற்றும் அரஹந்த - இது ஒவ்வொன்றையும் அடைய முயற்சிப்போரும், அடைந்தவரும் என்று எட்டு வகை ஆரியர்கள்.


Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā

E W Burlingame, Ānandajoti Bhikkhu

Comments

Popular posts from this blog

சுந்தருக்குத் தந்த போதனை

அன்பளிப்புகள் பற்றிய உரை

புண்ணியம் செய்யும் வழிகள்