9.3 தம்மபதம் பின்னணி கதைகள்

 தம்மபதம் பின்னணி கதைகள் 9.3 (தம்மப்பதம் செய்யுள் 118)

Dhammapada Atthakatha 9.3

(Verse 118) 


உலாஜா தேவதையின் கதை


கதைச்சுருக்கம்:

ஒரு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண், நெற்பொரியை  தேரர் மகா கஸ்ஸபருக்குத் தந்தாள். அதன் பயனாக, அவள் துசித தேவலோகத்தில் ஒரு தேவதையாக மறுபிறவி எடுத்தாள். தேரர் மகா கஸ்ஸபருக்காக மேலும் நல்ல செயல்கள் செய்ய விரும்பினாள். ஆனால் அவர் அவளைத் தடுத்தார். அப்போது புத்தர், அவள் ஏன் இவ்வாறு விரும்பினாள் என்பதற்கான காரணத்தை, ஒரு பாவடிவில் விளக்கினார்.


***


இந்த தர்ம உபதேசத்தை ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, உலாஜா (நெற்பொரி) தேவதையைப் பற்றிக் கூறினார். கதை ராஜகஹத்தில் ஆரம்பிக்கிறது.


 மகா கஸ்ஸபர், பிப்பலிகுகையில் தங்கி இருந்தபோது, அவர் சமாதி நிலையில் நுழைந்து ஏழு நாட்கள் அந்த ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். ஏழாம் நாளில் அவர் சமாதிதியிலிருந்து எழுந்து, தனது தெய்வீகக் கண்களால் பிண்டபாதத்திற்குச் (உணவு சஞ்சரிப்பதற்கு) செல்வதற்கான இடங்களை ஆராய்ந்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை கண்டார்; அவள் வயலில் இருந்து அறுவடை செய்த நெற்கதிர்களை வறுத்துக் கொண்டிருந்தாள்.


அவர் மனத்தில் எண்ணினார்:

“இவளுக்கு சரியான நம்பிக்கை உண்டா இல்லையா?”


உடனே, “இவள் நம்பிக்கையுள்ளவள், புத்திசாலி, திறமையுள்ளவள்; எனக்கு உதவி செய்வாள். அதனால் அவளுக்குப் பெரிய பலன் கிடைக்கும்” என்று உணர்ந்தார்.


அவர் மேலங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் எடுத்துக்கொண்டு, அவளது வயலின் அருகே நின்றார்.


அந்த பெண் தேரரை கண்டவுடன், மனதில் நம்பிக்கை பிறந்து, உடலில் ஐந்து விதமான ஆனந்தம் பரவியது.


“ஒரு நிமிடம், போற்றுதற்குரிய ஐயா,” என்று கூறி, நெற்பொரியை எடுத்துக் கொண்டு விரைவாக வந்து, தேரரின் பாத்திரத்துள் வைத்தாள். பிறகு பஞ்சாங்க நமஸ்காரம் செய்து, 

“போற்றுதற்குரிய ஐயா, நீங்கள் கண்ட தர்மத்தினை நானும் அறிய வேண்டும் என்பதே என் நோக்கம்,” என்று கூறி தனது உயர்ந்த குறிக்கோளை வெளிப்படுத்தினாள்.


“அப்படியே ஆகட்டும்,” என்று தேரர் நன்றியுரைச் சொற்களைச் சொன்னார்.


பின் நற்குணமுடைய அந்த இளம் பெண் தேரருக்கு பிண்டபாதம் கொடுத்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றால்.


அந்த நெல் வயலின் ஓரமாகச் செல்லும் பாதையருகே ஒரு குழியில், விஷப்பாம்பு ஒன்று ஒளிந்திருந்தது. தேரரின் கால் மஞ்சள் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருந்ததால், அவரை அது கடிக்க முடியவில்லை. ஆனால், அந்தச் மேன்மையான இளம்பெண் தேரருக்கு செய்த தானத்தை நினைத்து கொண்டுத் திரும்பி வந்தபோது, அந்தப் பாம்பு தன் குழியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்து, அவளை கடித்து, அங்கேயே தரையில் விழச் செய்தது.


அவ்வாறே, உள்ளத்தில் நம்பிக்கையுடன் உயிர் நீத்த அவள், முப்பத்திமூவர் தேவர்களுடைய உலகத்தில் மறுபிறவி எடுத்துப் பிறந்தாள்.


உறங்குவோர் விழிப்பது போல, முப்பது யோஜனை அகலமுள்ள பொன் மாளிகையில் அவள் விழித்தாள். அவளது உடல் உயரம் முக்கால் யோஜனை. பன்னிரண்டு யோஜனை நீளமான தெய்வீக மேலாடை அணிந்திருந்தாள். சேவை செய்ய ஆயிரம் தெய்வமகளிர்  சூழ்ந்திருந்தனர்.  அவளது மாளிகையின் வாசல் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, அங்கு பொன்னால் ஆன பாத்திரம் தொங்கியது; அதில் பொற்கதிர்கள் நிரம்பி இருந்தது—அவள் முன்னர் செய்த நெற்பொரி தானத்தின் நினைவாக.


அவள் தன் மகிமையைப் பார்த்து, “எந்த புண்ணியத்தால் நான் இத்தகைய மகிமையை அடைந்தேன்?” என்று சிந்தித்தாள். உடனே உணர்ந்தாள்: “இது மகா கஸ்ஸபருக்கு நான் கொடுத்த        நெற்பொரியின் பயன்.”


பின்னர், “சிறு புண்ணியத்தால் இவ்வளவு பலன் கிடைத்தது; இனி நான் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. மகா கஸ்ஸபருக்காகச் சிறு, பெரிய என்று எல்லாச் சேவைகளையும் செய்து, என்னுடைய வீடுபேற்றினை உறுதி செய்வேன்” என்று முடிவு செய்தாள்.


அதன்படி, மறுநாள் காலை பொன்னால் ஆன ஒரு துடைப்பையையும், பொன்னாலான குப்பையை வாரி எடுக்க ஒரு தட்டையும் எடுத்து, தேரரின் குகைக்கு வந்து சுத்தம் செய்து, குடிநீர் வைத்து விட்டுச் சென்றாள்.


மகா கஸ்ஸபர் பின்னர் பார்த்து, “இந்தச் சேவையை யாரோ ஒரு இளம் பிக்குவோ, சாமணரோ செய்திருப்பார்” என்று நினைத்தார்.


இரண்டாம் நாளும் அந்த தேவதை அதையே செய்தாள். தேரரும் அதே முடிவுக்கு வந்தார். மூன்றாம் நாளில் தேரர் அவள் சுத்தம் செய்கிற சத்தம் கேட்டு, திறவுகோல் துளையால் பார்த்தார்; அப்போது அவளின் ஒளிமயமான தெய்வீக உருவத்தைப் பார்த்தார்.


உடனே “இங்கு சுத்தம் செய்வது யார்?” என்று கேட்டார்.

“போற்றுதற்குரிய ஐயா, நான் தான், உங்கள் சீஷையான உலாஜா தேவதை,” என்றாள்.


அவர்: “எனக்கு அப்படியொரு சீஷை இல்லை” என்றார்.

அவள் சொன்னாள்: “ஐயா, நான் வயலில் இருந்தபோது  நெற்பொரி தந்தேன். திரும்பும் வழியில் பாம்பு கடித்து இறந்தேன். நம்பிக்கையுள்ள மனத்துடன் இறந்ததால், தேவலோகத்தில் பிறந்தேன். அது உங்களால்தான் கிடைத்த பலன். எனவே உங்களுக்காகச் சிறு, பெரிய எல்லாச் சேவைகளையும் செய்து என் வீடுபேற்றினை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனாலேயே இங்க வந்தேன் ஐயா”.


"நேற்றும் அதன் முன் தினமும் இந்த இடத்தை பெருக்கி, குடிக்க தண்ணீர் வைத்து விட்டு சென்றதும் நீதானா?'


"ஆமாம் ஐயா."


“தேவதையே, நீ இங்கிருந்து உடனே புறப்படு. எனக்குச் செய்த சேவைகள் போகட்டும்.  இனி இங்கே வராதே” என்று தேரர் சொன்னார்.


அவள் வேண்டிக்கொண்டாள்: “ஐயா, என்னை தடை செய்யாதீர்கள். உங்களுக்குச் சேவை செய்து, என்னுடைய வீடுபேற்றினை உறுதிசெய்வேன்.”


ஆனால் தேரர் மறுத்தார். “இவ்வாறு செய்தால் பிறர், ‘மகா கஸ்ஸபருக்கு ஒரு தேவதை வந்து சேவை செய்கிறாள்’ என்று பேசுவார்கள். இனிமேல் இங்கே வராதே, வேறு எங்காவது போ." என்றார்.


அவள் மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். ஆனால் அவர், 'இந்த தேவதை என் கட்டளையை கேட்க மாட்டாள் போல இருக்கிறது,' என்று நினைத்து, “நீ உன் இடத்தை அறியவில்லை” என்று விரல்களைச் சடக்கொட்டி அவளை  அலட்சியப்படுத்தினார். 


அந்த தேவதை அதற்கு மேல் அங்கு இருக்க தைரியம் இல்லாமல் வானில் பறந்து, கைகளைக் மரியாதையுடன் கூப்பி, “ஐயா, எனது புண்ணியத்தை வீணாக்காதீர்கள். என் வீடுபேற்றினை உறுதிசெய்ய அனுமதியுங்கள்,” என்று அழுதாள். பின் அந்த தேவதை வானத்தில் நின்றவாறு அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.


அப்போது, புத்தர் ஜேதவனத்தில் இருந்தார். அவர் அந்த அழுகுரலைக் கேட்டார். உடனே தனது பிரகாசமான உருவத்தை அனுப்பி, அவளுக்கு எதிரே அமர்ந்து,


“உலாஜா தேவதையே, என் மகன் மகா கஸ்ஸபர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுவது அவன் கடமை.  ஆனால் புண்ணியம் செய்ய விரும்புகிறவர்கள், ‘இது மட்டுமே நான் செய்ய வேண்டிய கடமை’ என்று முடிவு செய்து புண்ணியம் செய்வதே தங்கள் தனியாக கடமை என்று நினைக்கிறார்கள். இவ்வுலகிலும் மறுவுலகிலும் சந்தோஷம் தருவது புண்ணியம் செய்வதே” என்று கூறினார். 


பின்னர் அவர் பின்வரும் வசனத்தைப் போதித்தார்:


 (தம்மபதம் 118):


புஞ்ஞஞ்சே  புரிசோ கயிரா, கயிராதேதம் புனப்புனம்;

தம்ஹி சந்தம் கயிராத, சுகோ புஞ்ஞஸ்ஸ உச்சயோ.


தமிழில்:

ஒருவன் புண்ணியம் செய்ய வேண்டுமானால்,

அதை மீண்டும் மீண்டும் செய்யட்டும்.

அதில் மனம் நிலை கொள்ளட்டும்;

ஏனெனில் புண்ணியம் பெருகினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


இந்த உபதேசத்தின் முடிவில், அந்த உலாஜா தேவதை, குறைந்தபட்சம் நாற்பத்தைந்து யோஜனை உயரத்தில் நின்றபடியே, சோதாபண்ண ஞான நிலையை (Stream-entry) அடைந்தாள்.



***

குறிப்பு:

பஞ்சாங்கநமஸ்காரம்: முழுங்கால்கள், கைகள், தலையாகிய ஐந்துறுப்புக்கள் நிலந்தோய வணங்குகை.


Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā

E W Burlingame, Ānandajoti Bhikkhu


Comments

Popular posts from this blog

சுந்தருக்குத் தந்த போதனை

அன்பளிப்புகள் பற்றிய உரை

புண்ணியம் செய்யும் வழிகள்