9.9 தம்மபதம் பின்னணி கதைகள்
தம்மபதம் பின்னணி கதைகள் 9.9 (தம்மப்பதம் செய்யுள் 125)
Dhammapada Atthakatha 9.9
(Verse 125)
Source: A Revised Translation
of the Dhammapada Aṭṭhakathā
E W Burlingame, Ānandajoti Bhikkhu
வேட்டைக்காரன் கோகானின் நாய்கள் பற்றிய கதை
(கதைச் சுருக்கம்):
வேட்டைக்காரன் கோகானென்பவன், தான் விலங்குகளை பிடிக்க முடியாமல் போனதற்காக ஒரு பிக்குவை குற்றம்சாட்டினான். அவன் தனது நாய்களை அவர்மீது விடுத்தான்; விரட்டிக் கொண்டு வந்த நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக பிக்கு ஒரு மரத்தில் ஏறினார். அந்த குழப்பத்தில் பிக்குவின் சீவர ஆடை கீழே விழுந்தது; அது வேட்டைக்காரனை மூடியதால், நாய்கள் தவறாக பிக்கு விழுந்து விட்டதாக நினைத்து தங்கள் எஜமானனையே கடித்துக் குதறி கொன்று விடுகின்றன. பிக்கு தனது செயல்களால்தான் அந்த வேட்டைக்காரன் இறந்தானோ என்று கவலைப்பட்டார். அப்போது புத்தர் அவருக்கு ஒரு செய்யுள் மூலம் ஆறுதல் கூறினார்.
* * *
இந்த தம்ம உபதேசத்தை ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, வேட்டைக்காரன் கோகானை (ஓநாய் என்று பொருள்) குறித்துப் போதித்தார்.
ஒரு நாள் அதிகாலையில், கோகான் தன் வில்லை கையில் எடுத்துக்கொண்டு, வேட்டை நாய்கள் பின் தொடர காட்டிற்கு செல்லும் வழியில், உணவு யாசிக்கும் பொருட்டு ஒரு கிராமத்திற்குள் சென்று கொண்டிருந்த ஒரு பிக்குவைக் கண்டான். பிக்குவைக் கண்டதும் அவன் கோபமடைந்தான். “இன்று எனக்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டது; இன்று எதுவும் கிடைக்காது” என்று மனதில் நினைத்து, காட்டிற்குச் சென்றான். பிக்குவோ கிராமத்தில் சஞ்சரித்து பெற்ற காலை உணவை உண்ட பின், விகாரைக்குத் திரும்பிச் சென்றார். அதே சமயம் கோகானும் காட்டில் வேட்டையாடியபோதும் எதுவும் கிடைக்காமல் திரும்பினான்.
திரும்பும் வழியில் மீண்டும் தேரரைக் கண்ட கோகானின் மனத்தில், “காலைவேளையில் அவனைப் பார்த்தேன், எதுவும் கிடைக்கவில்லை; இப்போது மீண்டும் கண்முன்னே தோன்றுகிறான்; இவனை என் நாய்களைக்கொண்டு கொன்று விட வேண்டும்” என்று எண்ணினான். உடனே நாய்களை தேரர் மேல் விடுவித்தான். பிக்கு பணிவுடன், “ஓ உபாசகா, இவ்வாறு செய்யாதீர்கள், தயவு செய்து என்மேல் கருணை கொள்ளுங்கள்” என்றார். அதற்கு கோகான், “காலை உன்னைப் பார்த்ததால் எனக்கு வேட்டை எதுவும் கிடைக்கவில்லை; இப்போது மீண்டும் கண்முன்னே வந்துள்ளாய்; எனது நாய்களை உன் மீது ஏவிக் கடித்து குதறித் தின்னச் செய்வேன். வேறு எதுவும் இல்லை சொல்வதற்கு” என்று கூறி நாய்களை விடுத்தான்.
பிக்கு அவசர அவசரமாக ஒரு மரத்தில் ஏறி, ஒரு மனித உயர அளவில் கிளைகளின் இடையே அமர்ந்தார். நாய்கள் மரத்தைச் சூழ்ந்தன. கோகானும் அங்கு வந்து, “மரத்தில் ஏறி என் கையிலிருந்து தப்பிவிட்டதாக கனவு காணாதே” என்று கூறி ஒரு அம்பின் முனையால் பிக்குவின் காலடியை குத்தினான். பிக்கு மீண்டும் தனக்கு கருணை காட்டும்படி: “ஓ, தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்” என்று வேண்டினார். ஆனால் கோகான் தேரரின் வேண்டுகோளை புறக்கணித்து, மீண்டும் மீண்டும் அம்பால் பிக்குவின் காலடியைக் குத்தினான். ஒரு காலடி குத்தப்பட்ட பிறகு பிக்கு அதனை மடக்கி மற்ற காலை இறக்கினார். அந்த காலடியையும் வேடன் குத்தினான். இரு கால்களும் துளைக்கப்பட்ட போது பிக்குவிற்கு தம் உடல் தீயில் எரிவது போன்ற வேதனையான உணர்வு ஏற்பட்டது. வலி பொருட்படுத்த முடியாததால், மனக் கவனம் செலுத்த முடியாமல் போனார். தம் மேலங்கி கீழே விழுந்ததையும் கவனிக்கவில்லை. அந்த மேலங்கி விழுந்து வேட்டைக்காரன் கோகானின் உடலைத் தலையிலிருந்து கால் வரை மூடியது.
பிக்கு மரத்திலிருந்து விழுந்து விட்டதாக நினைத்த நாய்கள் ஆடைக் உள்ளே புகுந்து, தங்கள் எஜமானனையே இழுத்துக் கடித்துக் குதறி உண்டன. எலும்புகள் மட்டுமே மிஞ்சின. பின் ஆடையின் மடிப்பிலிருந்து வெளிவந்து நாய்கள் நின்று காத்துக் கொண்டிருந்தன. பிக்குவோ உலர்ந்த குச்சியை ஒன்றை உடைத்தெடுத்து நாய்கள் மீது எறிந்தார். அவரைக் கண்டவுடன், “நாம் எஜமானனையே சாப்பிட்டு விட்டோம்” என்று அறிந்த நாய்கள் குழம்பிப் போய் காட்டிற்குள் ஓடின.
பிக்கு மிகவும் மன சஞ்சல பட்டார்: “என் மேலங்கி விழுந்ததால் இந்த வேட்டைக்காரன் உயிரிழந்தான்; எனது தூய்மைக்கு கேடு உண்டாகி விட்டதா?” என்று நினைத்து, மரத்திலிருந்து இறங்கி ஆசரியரிடம் (புத்தரிடம்) சென்று தொடக்கம் முதல் கதையைக் கூறினார்.
“பகவான், என் மேலங்கியாலேயே இந்த வேட்டைக்காரன் உயிரிழந்தான்; எனது தூய்மை இன்னும் நிலைத்திருக்கிறதா? நான் இன்னும் துறவியாக இருக்கிறேனா?” என்று கேட்டார்.
புத்தர் அவர் சொன்னதைக் கேட்டு இவ்வாறு கூறினார்:
“பிக்குவே, உன் தூய்மை குன்றவில்லை; நீ இன்னும் துறவியே: குற்றமற்றவருக்கு தீங்கு செய்த அவனே அழிந்தான். இதுவே முதல்முறையும் அல்ல; முந்தைய பிறவியிலும் அவன் குற்றமற்றவருக்கு தீங்கு செய்ததாலே அழிந்தான்” என்று கூறி, ஒரு கதையை எடுத்துரைத்தார்.
கடந்தகாலக் கதை: தீய வைத்தியன், சிறுவர்கள், மற்றும் விஷப்பாம்பு
பழைய காலத்தில் ஒரு வைத்தியன் பணி தேடி ஒரு கிராமத்திற்குச் சென்றான். வேலை கிடைக்காமல் பசியால் அவஸ்தைப்பட்டு வெளியேறினான். கிராம வாயிலில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். “இந்தப் பிள்ளைகளைக் பாம்பு கடிக்கச் செய்வேன்; பின்னர் நானே அவர்களைச் சிகிச்சை செய்து உணவு பெறுவேன்” என்று நினைத்தான்.
ஒரு மரத் துளையில் தலை வெளியே வைத்திருந்த பாம்பைக் காட்டி, “பிள்ளைகளே, பாருங்கள், ஒரு மைனாக்குஞ்சு அந்த மரத்துளைவில் இருக்கிறது; பிடியுங்கள்” என்றான். ஒரு சிறுவன் அந்த பாம்பின் கழுத்தை நன்றாக பிடித்து அந்த மரத் துளைவிலிருந்து வெளியே இழுத்தான். ஆனால் அது பாம்பு என்பதை உணர்ந்ததும், அலறிக்கொண்டு பாம்பை எரிந்தான். அது அருகிலிருந்த வைத்தியனின் தலையில் விழுந்தது. பாம்பு அவன் தோள்களில் சுற்றி, கடித்து அவனை அங்கேயே கொன்றது.
புத்தர் முடிவாகச் சொன்னார்:
“இப்படியே முந்தைய பிறவியிலும் கோகான் குற்றமற்றவருக்கு தீங்கு செய்து அழிந்தான்.” இந்த கடந்த கால கதையை சொல்லி முடித்த புத்தர் தம்ம உபதேசம் செய்து கீழ்க்கண்ட வரிகளை மொழிந்தார்:
(தம்மபதம் 125)
"ஸொ அப்பதுட்டஸ்ஸ நரஸ்ஸ துஸ்ஸதி,
சுத்தஸ்ஸ பொஸஸ்ஸ அனங்கணஸ்ஸ;
தமேவ பாலம் பச்சேதி பாபம்,
சுகுமோ ரஜோ படிவாதம் வா கித்தோ."
தமிழில்:
"தூய்மையான, ஐம்பொறியடக்கிய குற்றமற்றோருக்குத் ஒருவன் தீங்கு செய்தால்,
அந்தத் தீமையே அந்த முட்டாளிடம் திரும்ப வரும்;
காற்றுக்கு எதிராக எறியப்பட்ட மெல்லிய தூசி
தனக்கே திரும்புவது போல."
அந்த உபதேசத்தின் முடிவில், அந்தப் பிக்கு அரஹந்த நிலையை அடைந்தார். அந்த தம்ம உபதேசத்தை கேட்டுக் கொண்டிருந்த மற்றவரும் பயன் அடைந்தனர்.
* * *
Comments
Post a Comment